பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி சொன்ன பிரதமர் நரேந்திர மோதி - கர்தார்பூர் குருத்வாரா சாலை திறப்பு விழாவில்

நரேந்திர மோதி

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கர்தார்பூர் குருத்வாரா சாலை திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, குரு நானக்கின் 550வது பிறந்த நாளுக்கு முன் இந்த கர்தார்பூர் சாலையை திறந்து வைப்பது மகிழ்ச்சி என்று கூறினார். இந்த சாலையினால், குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு வருவது மிகவும் எளிதாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த சாலையை அமைக்க உறுதுணையாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர் இந்தியர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டதாகக் கூறினார். அதேபோல் இதற்காக பணி செய்த அனைத்து பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் மோதி நன்றி தெரிவித்தார்.

குரு நானக் உண்மை மற்றும் சுயமரியாதையைக் கடைபிடித்தால் நாட்டின் வளர்ச்சியைப் பார்க்கலாம் என நம்பினார். அதோடு அல்லாமல் ஒருவரது வாழ்க்கையில் முக்கியமானது அவரவர்களின் நன்மதிப்புகள்தான் என்பது குருநானக்கில் சிந்தனை என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் தண்ணீர் பிரச்சனையைப் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோதி நீருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுத்தினார். பல ஆண்டுகள் முன்னதாகவே, பஞ்சாபில் ஐந்து ஆறுகள் ஓடி கொண்டிருக்கும்போதே குரு நானக் தண்ணீர் பிரச்சனை குறித்து யோசித்துள்ளார். இவ்வாறு குரு நானக் சிந்தனையால் உலகத்தின் புதிய பிரச்சனைகளும் நமக்கு புரியும். எனவே, அவரின் போதனைகளை உலக மொழிகளில் மொழி பெயர்க்க யுனெஸ்கோ உதவியோடு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அரசு நம்முடைய மூதாதையர்கள் நமக்கு அளித்தவற்றை பாதுகாப்பது மட்டுமில்லாமல் அதை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஓர் ஆண்டாக குரு நானக்கின் 550வது பிறந்த நாளுக்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்தியாவில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள், பஜனைகள் மூலம் அவரது போதனைகளை பரப்பிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு முன்னால், சீக்கியர்களின் 10வது குருவான கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த நாளும் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாட்னாவில் நடந்த விழாவில் தான் கலந்து கொண்டதாகவும் மோதி கூறினார். குரு கோவிந்த் சிங்கின் நற்பெயர் எப்போதும் இருக்க வேண்டி குஜராத் ஜாம்நகரில் 750 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனை அவர் பெயரில் கட்டப்பட்டது.

இதைத் தவிர அமிர்தசரசில் விமான சேவை மற்றும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சுல்தான்பூர் லோதியை பாரம்பரிய நகரமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மோதி கூறினார். பல நாடுகளிலிருந்து மக்கள் வருவதை எளிதாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர ஜம்மு காஷ்மீரில் வாழும் பல்வேறு சீக்கிய குடும்பங்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் அங்கிருக்கும் சீக்கிய மக்களுக்கு இந்தியாவின் பிற குடிமக்களைப் போல சம உரிமை கிடைக்கும். சீக்கிய குருக்கள் பலர் தங்கள் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளனர். இதனால்தான் இன்று இந்தியா சுதந்திர நாடாக இருக்கிறது. இனி சீக்கிய மாணவர்களின் கல்விக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றம் மோதி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்