அயோத்தி தீர்ப்பு: பாகிஸ்தான் கருத்தை நிராகரித்தது இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரமான இருக்கின்ற சிவில் வழக்கு ஒன்றில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி பாகிஸ்தான் தெரிவித்துள்ள விரும்பப்படாத மற்றும் தேவையற்ற கருத்துக்களை நிராகரிக்கின்றோம் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலளித்துள்ளது.

இந்தியாவின் உள்விவகாரமான அயோத்தி வழக்கின் தீர்ப்பு பற்றி பாகிஸ்தான் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்திய வெளியுறவு த்துறையின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படியான ஆட்சி நடப்பதையும், எல்லா மத நம்பிக்கைகளுக்கும் சம மரியாதையும் வழங்கப்படுவதையும் காட்டுகிறது.

இது பற்றி பாகிஸ்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. வெறுப்பை பரப்பக்கூடிய நோக்கத்தோடு இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் பற்றி கருத்துக்கள் தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்று ரவீஸ் குமார் கூறியுள்ளார்.

முன்னதாக அயோத்தி வழக்கு பற்றி கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் ஹுசைன் 'வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது' என்று ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

தேசம் மீதான பக்தி உணர்வை வலிமைப்படுத்த வேண்டிய சமயம் - நரேந்திர மோதி

பல பத்தாண்டுகளாக நிலவிய பிரச்சனையை உச்ச நீதிமன்றம் சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது. இது நீதிமன்ற நடவடிக்கைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்று அயோத்தி நிலத் தகராறு வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

''ராம் பக்தியோ ரஹீம் பக்தியோ, நாம் அனைவரும் தேசம் மீதான பக்தி உணர்வை வலிமைப்படுத்த வேண்டிய சமயம் இது'' என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சட்டவழிமுறைகள் ஏன் பின்பற்றப்படவேண்டும் என்பதை இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அனைத்து தரப்புக்கும் போதுமான வாய்ப்பும் நேரமும் வழங்கப்பட்டது என்று இன்னொரு ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

கோயில் கட்டுவதற்கு கதவுகளை திறந்துள்ளது - காங்கிரஸ்

இந்தத் தீர்ப்பு கோயில் கட்டுவதற்கான கதவுகளைத் திறந்துள்ளதுடன், பாஜக மற்றும் பிறர் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்கான கதவுகளை மூடியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

"ஒரே இந்தியா - உயர்ந்த இந்தியா" - அமித் ஷா

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அனைத்து மத மக்களும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, "ஒரே இந்தியா - உயர்ந்த இந்தியா" எனும் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை - சுன்னி வக்ஃப் வாரியம்

"தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. தீர்ப்பு முழுவதையும் கவனத்தோடு படித்த பிறகு எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்" என்று சுன்னி வக்ஃப் வாரிய மூத்த வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜிலானி தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும் அவர் கூறினார்.

மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள் - மு.க.ஸ்டாலின்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள் என நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.

''நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்,'' என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல' - ஆர்.எஸ்.எஸ்

படத்தின் காப்புரிமை TWITTER / WHCONGRESS

பல பத்தாண்டுகளாக தொடர்ந்த இந்த வழக்கு சரியான முடிவை எட்டியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இது யாருக்கும் வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கப்படக் கூடாது என்றும் சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட யார் முயற்சி எடுத்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் சமரச தீர்ப்பு - தொல்.திருமாவளவன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்தின் அடிபடையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாக தெரியவில்லை, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவரவர் வணங்கும் கடவுளின் பெயரால் இந்த தீர்ப்பை முழுமனதுடன் ஏற்போம் - கே.எஸ்.அழகிரி

''இந்தியாவைப் பொறுத்தவரை நாம் மிக உயர்ந்த அமைப்பாக கருதுவது இந்திய அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தான். தற்போது உச்சநீதிமன்றம் நூறு ஆண்டுகால அயோத்தி பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது. அந்த தீர்வை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. தேசிய கொடிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறோமோ அதுபோல, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் மரியாதை செலுத்தவேண்டும். நாம் தோல்வி பெற்றுவிட்டோம் என சிலரோ, வெற்றி பெற்றுவிட்டோம் என சிலரோ கருதுவதில் எந்த பலனும் இல்லை. அவரவர் வணங்கும் கடவுளின் பெயரால் இந்த தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, மகிழ்ச்சியான சமுதாயமாக இந்திய சமுதாயம் திகழ வேண்டும்.''

பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால்? - அசாதுதீன் ஒவைசி கேள்வி

பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி.

உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களில் உச்சமானதுதான். ஆனால், அங்கு தவறு நடக்க வாய்ப்பில்லை என்று கூற முடியாது என்று அயோத்தி தீர்ப்பை அவர் விமர்சித்துள்ளார்.

தீர்ப்பு குறித்த தனது திருப்தியின்மையை வெளிப்படுத்த தமக்கு உரிமையுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை வரவேற்கும் நடிகர் ரஜினிகாந்த்

படத்தின் காப்புரிமை MAIL TODAY / GETTY IMAGES

உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் வேறுபாடுஇல்லாமல் ஒன்றிணைந்து அனைவரும் பாடுபடவேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :