அயோத்தி வழக்கில் ராமருக்காக வாதாடிய 93 வயது தமிழர் கே.பராசரன்

கே.பராசரன் படத்தின் காப்புரிமை Twitter
Image caption கே.பராசரன்

பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி நிலத் தகராறு வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தை ராம் லல்லா விராஜ்மானுக்கு வழங்கவும், வேறு இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த ராம் லல்லா என்பது ஒரு அமைப்பல்ல. அது குழந்தை ராமரையே குறிப்பது ஆகும்.

இந்த வழக்கில் இந்து தரப்புக்கு வெற்றி தேடித் மூத்த வழக்குரைஞர் கே.பராசரன், ஒரு அமைப்பின் வழக்குரைஞராக அல்ல, ராமரின் வழக்குரைஞராகவே வாதிட்டார். இவர் தமிழகத்தில் பிறந்தவர் என்பது கூடுதல் தகவல்.

93 வயதாகும் பராசரன், தனது இளம் வழக்குரைஞர் அணியுடன் உச்ச நீதிமன்றத்தில் ராமரின் தரப்பில் வாதிட்டார்.

1927 அக்டோபர் 9ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் பிறந்த பராசரன், தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாகவும், இந்திய அட்டர்னி ஜெனரலாகவும் இருந்துள்ளார்.

இதைத் தவிர, 2012 முதல் 2018 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கே.பராசரன். பத்ம பூஷண், பத்மவிபூஷன் போன்ற விருதுகள் பெற்றவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்து சட்டத்தில் நிபுணத்துவம்

தங்கப்பதக்கம் பெற்று சட்டப் படிப்பை முடித்த பராசரன். அதன் பிறகு, 50 களில் நீதிமன்றங்களில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்த இவர், வாஜ்பாய் அரசாங்கத்தின்போது, அரசியலமைப்பின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார்.

பராசரனுக்கு இந்து மதம் குறித்த நல்ல அறிவு உண்டு. அயோத்தி வழக்கில் ராம்லல்லா விராஜ்மனின் வக்கீலாக இருந்தார்.

அது மட்டுமல்ல, சபரிமலை கோயில் வழக்கில் பெண்களை உள்ளே அனுமதிப்பதற்கு எதிராக வழக்கு நடத்திய தரப்புக்கு இவர் வழக்குரைஞராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்தின் மீது ஆழமான பிடிப்பு கொண்ட பராசரன் ராமருடன் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார்.

அயோத்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற தினசரி விசாரணையின் போது பராசரன் மிகவும் கடினமாக உழைத்தார் என்று அவரது நெருங்கிய நண்பர் கூறுகிறார்.

தினசரி விசாரணை காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 4 முதல் 5 மணிக்கு முடியும். ஆனால் விசாரணைக்கு முன்னதாக, வழக்கின் ஒவ்வொரு அம்சத்திலும் தீவிர கவனம் செலுத்துவார் பராசரன்.

மூத்த வழக்கறிஞரான பராசரனின் அணியில் பி.வி. யோகேஸ்வரன், அனிருத் சர்மா, ஸ்ரீதர் பொட்டராஜு, அதிதி டானி, அஸ்வின் குமார் டி.எஸ் மற்றும் பக்தி வர்தன் சிங் போன்ற இளம் வழக்கறிஞர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த வயதில் அவரது ஆற்றலையும் நினைவாற்றலையும் பார்த்து அவரது அணியினர் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெறுகின்றனர்.

எல்லா முக்கியமான நிகழ்வுகளையும் தனது விரல் நுனியில் வைத்திருக்கிறார் தங்கள் ஆசான் என்று அவர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.

ராமஜென்மபூமி வழக்கில் வாதிட்ட மற்றொரு மூத்த வழக்குரைஞரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.எஸ்.வைத்தியநாதன் கே.பராசரன் தொடர்பான தனது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.

"93 வயதில் இவ்வளவு உற்சாகத்தோடும், சோர்வடையாமலும் அவர் இந்த வழக்கில் உழைத்தது ஆச்சரியப்படுத்தியது. அவரது நினைவாற்றல் ஆச்சரியப்படுத்தக்கூடியது. பழைய வழக்குகளை நினைவுகூர்ந்து அவர் வாதிட்ட விதம் உண்மையில் அற்புதமானது. அத்துடன் இந்த வழக்கில் அவருக்கிருந்த கருத்துத் தெளிவும் மிக முக்கியமான விஷயம்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் கே.பராசரனின் ஒரு குறிப்பிட்ட பார்வை இந்த வழக்கில் வெற்றிக்கு உதவியது என்றால் எதைக் குறிப்பிட முடியும் என்று கேட்டபோது, "ராம் லல்லாவை சட்டபூர்வ நபராக ஏற்கவேண்டும் என்று வாதிட்டு அதை நீதிமன்றம் ஏற்கும்படியும் செய்தார். அது மிக முக்கியமானது" என்று கூறினார் சி.எஸ்.வைத்தியநாதன்.

படத்தின் காப்புரிமை Getty Images

உச்சநீதிமன்றத்தில் பராசரனின் வாதங்கள்

ராம் லல்லாவின் சார்பாக வாதிட்ட பராசரன், இந்த வழக்கில் கராறான ஆதாரங்களுக்கான கோரிக்கையை தளர்த்த வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

ஏனெனில் ராமரின் ஆத்மா அந்த இடத்தில் இருக்கிறது என்று இந்துக்கள் நம்புகிறார்கள், எனவே பகவான் ராமர் பிறந்த இடத்தில் உள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை வாழ்கிறது என்பதே அவர் முன் வைத்த அஸ்திரம்.

பராசரனின் இந்த வாதத்திற்குப் பிறகு, இது குறித்து தீவிரமாக சிந்தித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இயேசு பெத்லகேமில் பிறந்தாரா என்பது எந்த நீதிமன்றத்திலாவது கேள்வியாக எழுந்துள்ளதா என்று பராசரனிடம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர, பராசரன் உச்சநீதிமன்றத்தில் பல வாதங்களை முன்வைத்திருந்தார், அதில் மிக முக்கியமானது அவர் ராம் லல்லாவை சட்டப்டியான நபர் என்று வர்ணித்திருந்தார்.

இதன் காரணமாக அவரது கூட்டு உடைமையை பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பராசரன் தனது வாதங்களில் நிலத்திற்கு தெய்வீக அந்தஸ்தைக் கொடுத்தார். இந்து மதத்தில் சிலைகளைத் தவிர, சூரியன், நதி, மரங்கள் போன்றவற்றுக்கும் தெய்வீக அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளன,

எனவே நிலத்திற்கும் தெய்வீக அந்தஸ்து வழங்கப்படலாம் என்று சமோயோஜிதமான வாதங்களை முன்வைத்தார் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன்.

ராம ஜென்மபூமி தவிர, பராசரன் பாபர் மசூதி கட்டுமானம் குறித்தும் கேள்வி எழுப்பினார். இஸ்லாமிய விதிகளின்படி கட்டப்பட்ட மசூதியாக பாபர் மசூதியை கருத முடியாது; ஏனெனில் இது மற்றொரு மதத்தின் இடத்தை இடித்துக் கட்டப்பட்டது என்றும் அவர் வாதிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :