வளையாம்பட்டு வெங்கடாசலம் மறைவு: 40க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை மீட்டவர்

வெங்கடாசலம் படத்தின் காப்புரிமை http://muelangovan.blogspot.com
Image caption கு.வெங்கடாசலம்

பாரம்பரிய விதைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாட்டில் வெகு ஆரம்பத்திலேயே சிந்தித்து, களப் பணி ஆற்றி சுமார் 40 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட வளையாம்பட்டு கு.வெங்கடாசலம் தமது 93-வது வயதில் மறைந்தார்.

அடிப்படையில் பொறியாளரான அவர், சிந்துவெளி அளவை முறைகள், பாரம்பரிய விதைகள், இயற்கை வேளாண்மை, தமிழ்க் கணிதம், தொல்லியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுகள் செய்தவர். செயல்பட்டவர். எனினும் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் அவரது முயற்சியே அவரது அடையாளமாகிப் போனது.

தமிழகம் முழுவதும் பயணித்து, அழிந்துவரும் பாரம்பரிய ரக நெல் விதைகளை திரட்டி, அவற்றை விவசாயிகளிடம் விநியோகித்துப் பயிரிட செய்வதன் மூலம் அவற்றைப் பாதுகாக்கவே முதன்மையாக முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தொய்வுகள் ஏற்பட்டபோது ஆய்வு நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்பில் வைத்து பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கவும் முயன்றார் வெங்கடாசலம்.

இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றவர்கள் பாரம்பரிய விதைகள் குறித்து சிந்திப்பதற்கு முன்பே விதைகள் குறித்து பேசியவர், செயல்பட்டவர் வெங்கடாசலம் என்று எழுத்தாளர் பாமயன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவரை நெல்லின் செல்வர் என்றும் குறிப்பிடுகிறார் பாமயன்.

பாமயன் ஃபேஸ்புக் பதிவு:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு வெங்கடாசலத்தின் சொந்த ஊர். பொறியாளராக பொதுப் பணித்துறையிலும், பிறகு அஞ்சல் துறையிலும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் வெங்கடாசலம்.

அசாமில் இவர் வேலை செய்தபோது, அங்கிருந்த அளவை முறைகள் குறித்து ஆய்வு செய்து 'காமரூபத்தில் கணிதம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்.

தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து களர்ப்பாலை, குள்ளங்கார், மடுவு முழுங்கி, கருடன் சம்பா உள்ளிட்ட சுமார் 40 பாரம்பரிய நெல் ரகங்களைத் திரட்டி அவற்றை விவசாயிகளிடம் விநியோகம் செய்து, பயிரிடச் செய்து மீண்டும் மீண்டும் அவற்றை மறுவிநியோகம் செய்தார்.

இவரது மூத்த மகன் பெருவழுதி திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர். இளையமகன் அறிவுடைநம்பி பல்லுயிர்ப் பெருக்க விஞ்ஞானி.

படத்தின் காப்புரிமை Getty Images

"சிந்துவெளிக் கால எடைகள் மற்றும் அளவைகள், பழந்தமிழ் தமிழ் அளவைகள் தொடர்பாக இவர் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை தொழில் முறை சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன, கருத்தரங்கங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அறிவுடைநம்பி.

பயணங்கள்

"கன்னியாகுமரி முதல் கோவா வரை 100 நாள் நடந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்புப் பயணத்தில் தென்னகத்தின் குழுவை வழிநடத்திச் சென்றவர் வெங்கடாசலம். நல்லூர் முதல் மரக்காணம் வழியாக திண்டிவனம் வரையிலான பண்டைய உப்பு வணிகப் பாதையில் 'சிறுபாணன் சென்ற பெருவழி' என்ற பெயரில் வரலாற்று விழிப்புணர்வுப் பயணம் ஏற்பாடு செய்து பங்கேற்றுள்ளார்" என்றும் கூறினார் அறிவுடைநம்பி.

"நம்மாழ்வார் உள்ளிட்ட இருவரோடு இணைந்து தமிழ்நாட்டின் முதல் விதைப் பயணத்தை மேற்கொண்டவர் வெங்கடாசலம். மொத்தம் மூன்று முறை விதைப் பயணங்களை மேற்கொண்டவர் இவர்.

பாரம்பரிய விதைகளைத் திரட்ட, காப்பாற்ற இப்போது பலர் முயல்கிறார்கள். ஆனால், வெங்கடாசலம் அவர்களுக்கெல்லாம் முன்னோடி. விதைகளைத் திரட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல், சலிக்காமல் விவசாயிகளை சந்தித்து அவற்றைப் பயிரிட்டுப் பெருக்கவேண்டும் என வலியுறுத்தி வந்தார். தள்ளாத வயதிலும் அவர் களத்தில் இயங்கிக் கொண்டே இருந்தார்" என்கிறார் கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் என்ற அமைப்பை நடத்திவரும் வேளாண் செயற்பாட்டாளர் பி.டி.ராஜேந்திரன்,

கிழக்குத் தொடர்ச்சி மலைவளப் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பையும், செங்கம் பகுதி தொடர்புடைய வரலாற்றுத் தகவல்களை எழுதுவதற்காக 'நன்னன் நாடு' என்ற சிறு பத்திரிகையையும் நடத்திவந்தார் வெங்கடாசலம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்