அயோத்தி தீர்ப்பால் நரேந்திர மோதியும், பாஜகவும் பெறப்போகும் ஆதாயம் என்ன?

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

அப்போது பிப்ரவரி 2012. உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த சமயம். பகுஜன் சமாஜ் கட்சி அரசு தோல்வி முகத்தில் இருந்தது. அரசமைக்கும் அளவுக்கு சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் தன் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான நிலையில் இருந்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி மிகவும் உத்வேகமின்றி இருந்தது கவனத்துக்கு உரியதாக இருந்தது.

ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேருவின் தொகுதியாக இருந்தது அலகாபாத் தொகுதி. அலகாபாத் மாவட்டத்தில் உள்ள பூல்பூர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் பாஜக என ஒவ்வொரு கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களிடமும் நான் நேர்காணல் செய்தேன்.

தன் பெயரை வெளியிட விரும்பாத பாஜக வாக்குச்சாவடி முகவர் ஒரு பிராமண வழக்கறிஞராக இருந்தார். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு நல்ல வாய்ப்பு இல்லை. எங்கு தவறு நடந்தது என்று நான் கேட்டேன். பாஜக தேசிய அளவில் முன்னணிக்கு வருவதற்கு இந்த மாநிலம்தான் காரணம். எதனால் அதற்கு சரிவு ஏற்பட்டது என்று கேட்டேன்.

''ராமர் கோயில் விவகாரத்தில் நாங்கள் துரோகம் செய்துவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள்,'' என்று அவர் பதிலளித்தார். அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமாக ராம ஜென்மபூமி இயக்கத்தின் மூலமாக உத்தரப் பிரதேசத்திலும், இந்தியாவின் வடக்குப் பகுதியிலும் பாஜக வளர்ச்சி அடைந்தது.

ஆனால் அதன் பிறகு, பிரதான அரசியலில் முக்கிய இடத்தை தக்கவைப்பதற்காக, ராமர் கோயில் விவகாரத்தை பாஜக கைவிட்டு விட்டதைப் போல தெரிந்தது. மக்களவையில் வெறும் இரு உறுப்பினர்கள் மட்டும் இருந்த நிலையில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 85 உறுப்பினர்களைப் பெறும் அளவுக்கு (1984 மற்றும் 1990 தேர்தல்களுக்குள்பட்ட காலம்) இந்த இயக்கம் பாஜகவுக்கு உதவியது.

''இரண்டாவதாக, உத்தரப் பிரதேசத்தில் சாதி அரசியலை பாஜக சரியாக செய்ய முடியவில்லை,'' என்றும் அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குப் புத்துயிரூட்ட என்ன செய்ய வேண்டும் என்று நான் கேட்டேன். ஆரம்பத்தில் இருந்ததைப் போல பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரை அரவணைத்துச் செல்வது, சாதி அரசியலைக் கைவிடுவது, ராமர் கோயில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து போர்க்குணத்துடன் முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றை அவர் சொல்வார் என்று நான் நினைத்தேன். ஆனால், அவருடைய சிந்தனை வேறு மாதிரி இருந்தது.

'மோதியை கொண்டு வரவேண்டும்'

''உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு புத்துயிர் தருவதற்கு, மோதியை (தேசிய அரசியலுக்கு) கொண்டு வர வேண்டும்,'' என்று அவர் கூறினார். வியப்படைந்தத நான், குஜராத் முதல்வர் எப்படி உ.பி-யில் பாஜகவுக்கு புத்துயிரூட்ட முடியும் என்று கேட்டேன். ''மோதி இருந்தால் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கலாம். ஒன்று மோதியுடன் இருக்க வேண்டும் அல்லது அவருக்கு எதிராக இருக்க வேண்டும். ராமர் கோயில் பிரச்சனையில் இருந்ததைப் போல சூழ்நிலை உருவாகும்,'' என்று அவர் கூறினார்.

2012 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 15 சதவீத வாக்குகள் அந்தக் கட்சிக்குக் கிடைத்தன. 19 மாதங்கள் கழித்து, அவரைப் போன்ற தொண்டர்களின் கருத்துகளைக் கேட்ட பாஜக, நரேந்திர மோதியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2012ல் இருந்து 2014க்குள், உ.பி.யில் பாஜகவின் வாக்கு வங்கி 15 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக உயர்ந்தது. அந்த மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், 71 தொகுதிகளை பாஜக வென்றது. பூல்பூரில் பேசிய கட்சித் தொண்டரைப் பற்றி நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அந்தக் கிராமத்தில் அவர் பாஜக வாக்குச்சாவடி முகவராக இப்போது இல்லை. காலங்கள் மாறிவிட்டன, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த புதியவர் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு வந்துவிட்டார்.

Ayodhya case "திமுகவுக்கு இந்து வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயம்": Journalist ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

நரேந்திர மோதி பிரதமராக இருக்கும்போது உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை 'சட்டபூர்வமாக' ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தபோது, அவரை இன்றைக்கு நான் நினைத்துப் பார்க்கிறேன். கோவிலுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் அரசு வாதாடியதால், தன் வாக்குறுதியை பாஜக காப்பாற்றிவிட்டது என்று, அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் சேர்ந்த பாஜக தொண்டர்கள் இப்போது சொல்ல முடியும்.

முஸ்லிம்களைப் புறக்கணித்தல்

நான் சந்தித்த முஸ்லிம்களில் பலர் அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று அவர்கள் கூறினர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க கலவரம் நடந்ததை நினைவில் வைத்துள்ள அவர்கள், மசூதியைவிட தங்களின் பாதுகாப்பு பற்றி அதிகம் கவலைப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பு, மசூதிக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்கும் வகையில் இருந்தாலும், அவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கப்படுவதையும் சட்டபூர்வமாக்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டிய பெரிய பிரச்சனைகள் உள்ளன.

தேசிய குடியுரிமைப் பதிவேடு போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த ஆட்சியில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று தெரிந்துள்ள நிலையில், தங்களின் முன்னோர்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்துத்துவா ஆண்டு

ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அரசு இப்போது உருவாக்கும். கோயில் கட்ட படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். முக்கியச் செய்திகளில் அது இடம்பெறும். ஒவ்வொரு முக்கியமான தேர்தலுக்கு முன்னதாக சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளியாகலாம்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அடுத்து, இந்துத்துவ அரசியலுக்கு பெரிய வெற்றியாக அயோத்தி தீர்ப்பு உள்ளது. 2019ஆம் ஆண்டு இன்னும் முடிந்துவிடவில்லை.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த மசோதா நிச்சயமாக வரப் போகிறது. யாருக்குத் தெரியும், பொது சிவில் சட்டம் மற்றும் மதமாற்றத் தடை சட்டங்களுக்கான மசோதாக்களும் கூட கொண்டு வரப்படலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏற்கெனவே பின்தங்கியுள்ள எதிர்க்கட்சிகள், இன்னும் பின்னுக்குத் தள்ளப்படும். இந்து வாக்குகளை இழக்க நேரிடுமே (அல்லது அதற்கும் மேலான பாதிப்புகளுக்கு) என்ற அச்சம் காரணமாக ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும் ராம ஜென்மபூமி இயக்கத்தை அனுமதித்தனர். ஆனால் இதில் காங்கிரஸ் கட்சி எதையும் உரிமை கொண்டாட முடியாது.

அப்படி செய்தால் முஸ்லிம் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே அதற்குக் காரணம். எதிர்க்கட்சிகளை இரண்டு பக்கமும் போக முடியாத அளவுக்கு சிக்கலான நிலையில் வைப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என்று எப்போதும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. ஆனால் பாஜக எப்போதும் விரும்பிதையே உறுதிப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே அசுர பலத்துடன் இருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு பாஜக மற்றும் நரேந்திர மோதி அரசுக்கு இன்னும் பலத்தை அதிகரிக்கச் செய்யும். பொருளாதார மந்த நிலைமை மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப இந்துத்வா அரசியலை மோதி அரசு முன்னெடுக்கும் சூழ்நிலையில், இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.

இதைவிட சரியான வேறு சந்தர்ப்பம் அமைந்திருக்க முடியாது. 2019 மே மாதம் நடந்த தேர்தல்களில் 303 இடங்களில் வெற்றி பெற்று, ஆகஸ்ட் மாதம் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்த போதிலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பெரிய அளவிலான வெற்றியை பாஜக பெற முடியாமல் போனது.

இதனால், டிசம்பரில் வரவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல், பிப்ரவரியில் வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை உற்று கவனிக்க வேண்டியதாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :