பாஜக - சிவசேனை மோதலால் மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்

முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் (இடது) சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் (இடது) சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே

மகாராஷ்டிர தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதால், இரண்டாவது பெரிய கட்சியான சிவ சேனையை ஆட்சியமைப்பது குறித்த தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அந்த மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி.

பாஜக - சிவசேனை கூட்டணியில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மோதல் உள்ள சூழலில், ஆட்சியமைக்க தங்கள் ஆதரவு தேவை என்றால் சிவசேனை, பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரசின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

சிவசேனையின் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கூறுகிறது.

தேர்தலுக்கு பின் என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலுக்கான முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை 56 இடங்களும் பெற்றன.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் பெற்றன.

பாஜக - சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றும், முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்தது.

இது தேர்தலுக்கு முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டது என சிவா சேனை கூறியது. ஆனால், முதல்வர் பதவியை ஆட்சிக்காலத்தின் சரிபாதி காலத்துக்கு பகிர்ந்து கொள்வது குறித்து முன்னரே பேசவில்லை என பாஜக தெரிவித்தது.

ஆதரவு தர மறுத்த காங்கிரஸ்

எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க வாய்ப்புண்டு என்றும் ஒரு கட்டத்தில் கூறப்பட்டது. அதன் காரணம், தாங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசின் ஆதரவுடன் முதல்வரை முன்னிறுத்த முடியும் என்று தனது அதிகாரப்பூர்வ ஏடான 'சாம்னா' இதழில் சிவ சேனை கூறியதுதான்.

வெவ்வேறு சித்தாந்தம் உடைய மூன்று கட்சிகளும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான கொள்கைகள் வகுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தாலும் கணிசமான இடங்களைப் பெற சரத் பவார்தான் (இடது) சூத்திரதாரியாக இருந்தார். இந்தக் கூட்டணி சிவசேனாவுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டது.

தங்களுக்கு 170 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உண்டு என்று சிவசேனையின் சஞ்சய் ராவுத் செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.

எனினும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்த சோனியா காந்தி சிவசேனைக்கு தாங்கள் ஆதரவு அளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார்.

இதனிடையே ஆளுநர் ஆட்சி அமைக்கப்படவேண்டும் என்றும் பாஜக தரப்பில் குரல்கள் எழுந்தன. ஆனால், அது அக்கட்சியின் சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

முடிவுக்கு வந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம்

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் நவம்பர் 8ஆம் தேதி, 2014இல் தேர்வான மகாராஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தது.

பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நவம்பர் 8 அன்றே ஆளுநரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

இப்போது காபந்து அமைச்சரவை பொறுப்பில் உள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைப்பது தொடர்பாக தங்கள் விழைவை தெரிவிக்குமாறு நவம்பர் 9 அன்று ஆளுநர் கூறினார்.

ஆனால், பாஜக - சிவசேனை கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தனர் என்பதால் தாங்கள் தனியாக ஆட்சி அமைக்கப்போவதில்லை என்று பாஜக தரப்பில் இன்று மாலை தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதே கோரிக்கையை சிவசேனையிடம் முன்வைத்துள்ளார் ஆளுநர்.

இந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக - சிவசேனை ஆகிய கட்சிகள் மொத்தமுள்ள 48 இடங்களில் 41 இடங்களை வென்றன.

சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த இரு கட்சிகளும், இப்போது மோதல் நிலையில் உள்ளன.

கூட்டணி முறிவு குறித்தோ, சமரசம் செய்துகொண்டு ஒன்றாக ஆட்சி அமைப்பது குறித்தோ இந்த இரு கட்சிகளும் இன்னும் எதையும் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்