அயோத்தி வழக்கு: 'முஸ்லிம் தரப்பு வாதம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது' - ராம் லல்லாவின் வழக்கறிஞர்

அயோத்தி வழக்கு

சி.எஸ். வைத்தியநாதன் ராம் லல்லா (கடவுள் ராமரின் குழந்தை வடிவம்) சார்பாக ஆஜரான வழக்கறிஞர். கடந்த எட்டு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா சார்பாக வாதாடினார்.

அயோத்தி வழக்கில் அவர் தரப்புக்கு வெற்றி கிட்டிய சூழ்நிலையில் அவரை சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக பிபிசி செய்தியாளர் சல்மான் ரவி நேர்காணல் செய்தார்.

 கேள்வி: ஆதாரங்களைவிட நம்பிக்கை மட்டுமே பிரதானமாக இந்தத் தீர்ப்பில் இருந்துள்ளதே. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

ராம்லல்லா ஒரு வாதி. சர்ச்சைக்குரிய அந்த இடத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது ராம்ஜன்ம பூமி நியாஸ். இந்த நில தகராறில் சிலையால் வந்து வாதிட முடியாது. அதனால் அதன் சார்பாக நாங்கள செய்தோம். தீர்ப்பை பெற்று தந்தோம்.

 கேள்வி:நம்பிக்கை என்பது ஓர் அம்சம். ஆனால்,தீர்ப்பில் பல விஷயங்கள் குழப்பமாக இருப்பதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்களே?

நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கபட்டிருப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அது தவறு.

தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. கோயில் கட்ட ஓர் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்பது தீர்ப்பில் தெளிவாக உள்ளது.

 கேள்வி: நீங்கள் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே வாதாடியதாக சட்ட வல்லுநர்களில் ஒரு தரப்பு கூறுகிறது. உரிமையியல் வழக்காக எடுத்து சென்றால் இந்த வழக்கு செல்லாதுஎன்று கருதினீர்களா?

இந்த உரிமையியல் வழக்கு 1989ஆம் ஆண்டு தொடுக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபது தேவகிநந்தன் சிலையின் சார்பாக வாதாடினார். தொடக்கத்தில் நம்பிக்கை சார்பாக வாதாடினார். பின்னர் அது கைவிடப்பட்டது.

Image caption சி.எஸ். வைத்தியநாதன்

 கேள்வி: ஐந்தில் நான்கு நீதிபதிகள், நம்பிக்கை அடிப்படையிலான வாதத்தை புறந்தள்ளினர். எந்த நீதிபதி இந்த தீர்ப்பை எழுதினார் என குறிப்பிடாத நிலையில் ஐந்தாவது நீதிபதிதான் இந்த தீர்ப்பை எழுதினார் என்று பொருளாகிறதா?

 மைய குவிமாடத்தின் கீழ் ராம் ஜன்மஸ்தம் (ராமர் பிறந்த இடம்) இருந்தது என ஐந்தாவது நீதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரத்திற்கு பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிற நீதிபதிகள் இதனை குறிப்பிடுமளவுக்கு முக்கியமானதாக கருதவில்லை.

 கேள்வி:பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு கட்டப்பட்டது, 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதில் எந்த குழப்பமும் இல்லை. நிதிமன்றமும் சிலை வைக்கப்பட்டது மற்றும் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று சுட்டிக்காட்டி உள்ளதே?

 சிலைகள் இல்லாமல் கூட வழிபாடு நடைபெறும். இந்துக்களை பொறுத்தவரை சிலை என்பது ஒரு குறியீடுதான். எங்கள் நம்பிக்கையை காட்ட சிலை தேவை இல்லை. எங்கள் வணக்கத்திற்குரிய இடமாக அது இருந்தால், அங்கே சென்று வழிபடுவோம். அங்கு வழிபாடு நடத்தி எங்களுக்கு ஆறுதல் கிடைத்தால், சிலை என்பது தேவையற்றதாகிவிடுகிறது. யார் அங்கே சிலை வைத்தார்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல.

கேள்வி: இந்துகள் 1528 - 1857 இடைப்பட்ட காலத்தில் வழிபாடு நடத்தியதற்கான சான்றுகள் உள்ளதா?

 ஆம் உள்ளது. அந்த சமயத்தில் இந்தியா வந்த பல பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் நீதிமன்றமும் அதனை கருத்தில் எடுத்து கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அயோத்தி

 கேள்வி: 1949ஆம் ஆண்டு சிலையை வைத்தது மற்றும் 1992 ஆம் ஆண்டு மசூதியை இடித்தது சட்ட விரோதமானது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குழப்பத்தை விதைக்கிறது. அதாவது, தவறை செய்தவர்களுக்கே சாதகமாக தீர்ப்பு வருவது குழப்பம் இல்லையா?

இஸ்லாமியர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறாக கூறி இருப்பார்கள் என நம்புகிறேன். எப்போது உரிமையியல் வழக்கு போடப்பட்டது? 1950, 1961 மற்றும் 1989.

ஆனால், அதன்பின்பு, வழக்கு ஏற்றுகொள்வதற்கு முன்பும் நடந்தவற்றுக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

முஸ்லிம்களுக்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 142ன்கீழ் நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உச்ச நீதிமன்றம் 1992 சம்பவத்தை சேர்த்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

 கேள்வி: நீங்கள் தொல்லியல் துறையின் சான்றுகளை மேற்கோள் காட்டினீர்கள். ஆனால், அந்த சான்றுகளை பல சுயாதீனமான தொல்லியல் வல்லுநர்கள் மறுத்திருக்கிறார்களே?

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் எந்த கட்டமைப்பும் இல்லை என முஸ்லிம் தரப்பு வாதிட்டது. சர்ச்சைக்குரிய இடத்திற்கு வந்த வரலாற்று ஆய்வாளர்கள் அந்த இடத்தில் சுவர் இருந்ததாக குறிப்பிட்டனர். அப்படியானால் காலி இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது என்ற இஸ்லாமியர் தரப்பு வாதம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

 கேள்வி:ஆனால், அதே நேரம் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக தொல்லியல் துறை அறிக்கை கூறவில்லையே?

 ஆம். அவ்வாறாகக் கூறவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :