பாஜக பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் கோட்சே குறித்த சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கோரினார்

பிரக்யா தாக்கூர் (கோப்புப்படம்) படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமையன்று கோட்சே குறித்து மக்களவையில் தான் கூறிய கருத்தால், யாராவது காயப்பட்டிருந்தால், அதற்கு மன்னிப்பு கோருவதாக இன்று (வெள்ளிக்கிழமை) மக்களவையில் உரையாற்றுகையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்தார்.

மக்களவையில் பேசும்போது கோட்சேவை “தேசபக்தர்” என்று கூறியதை அடுத்து மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவிலிருந்து பிரக்யா நீக்கப்பட்டார்.

அண்மையில்தான் மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர் நியமிக்கப்பட்டார்.

பிரக்யா சிங் தாக்கூரின் சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'தீவிரவாதியான கோட்சேவை தேசபக்தர் என்று தீவிரவாதியான பிரக்யா தாக்கூர் கூறுகிறார்' என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர் "நாடாளுமன்றத்தில் நான் பேசியது திரிக்கப்பட்டுவிட்டது. காந்தி நாட்டிற்கே ஆற்றிய சேவையை நான் மதிக்கிறேன். எனது கருத்து உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் பெயர் குறிப்பிடாமல் பேசிய அவர், '' நீதிமன்றத்தில் என் மீது எந்த வழக்கும் நிரூபிக்கப்படவில்லை. இந்த அவையை சேர்ந்த ஒரு உறுப்பினர் என்னை தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ளார். இது எனது கண்ணியத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இது தவறாகும்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, புதன்கிழமை மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, 'நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்' என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், 'தேசபக்தரை நீங்கள் உதாரணமாக குறிப்பிடக்கூடாது' என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரக்யா தாக்கூர் (கோப்புப்படம்)

கடந்த மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடந்தபோது, போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்கூர், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்