வீட்டின் முன்வாசல் விழுப்புரம், பின்வாசல் கள்ளக்குறிச்சி - ஒரு வீடு; இரு மாவட்டங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அப்பாவின் அறை ஒரு மாவட்டம்; மகனின் அறை வேறொரு மாவட்டம்

தமிழகத்தின் 34வது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு உதயமான நிலையில், அந்த மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தின் ஒரு பகுதி தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும், கிராமத்தின் மற்றொரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருவதால் கிராம மக்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கருவேப்பிலை பாளையம் கிராமம் திருநாவலூர் ஒன்றியம் மற்றும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் என இரு ஒன்றியத்தில் பிரிந்து இருக்கிறது. மேலும், இந்த இரண்டு ஒன்றியத்திற்கும் உட்பட்ட மடப்பட்டு, சிறுத்தனூர், சிருளாப்பட்டு, காந்தலவாடி நான்கு ஊராட்சிகளும் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் பகுதிகளாக வருகின்றன. இந்த கிராமத்தில் சுமார் 6000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

நான்கு ஊராட்சிகள், இரண்டு தாலுக்கா அலுவலகங்கள் மற்றும் இரண்டு காவல் நிலையங்கள் உள்ளதால் இந்த கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், அரசின் திட்டங்களை பெறுவதிலும் ஒரே இடத்தை நாடி செல்ல முடியாமல் சுற்றி அலைய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதனால், இப்பகுதி மக்கள், தங்கள் கிராமத்தை ஒரே ஊராட்சியில் கொண்டுவர வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து நான்கு ஊராட்சிகளில் பிரிந்து தனித் தனியே இருக்கும் கருவேப்பிலை பாளையம் கிராமம் தற்போது ஒரு பகுதி கிராமம் விழுப்புரம் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருவதால் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அப்பகுதி கிராமவாசிகள். இரு மாவட்டமாக பிரிந்திருக்கும் இந்த கிராமத்தின் சில தெருக்களில் உள்ள வீடுகள் சிலவற்றில் முன்பாதி விழுப்புரத்திலும், பின்பாதி வீடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருகின்றன.

மேலும், இந்த கிராமத்தில் தந்தை மகன் ஒன்றாக வசிக்கும் வீடு ஒன்றில் மகன் இருக்கும் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும், தந்தை இருக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த வீட்டில் வசிக்கும் மகன் ரஞ்சித்குமார், "இரண்டு மாவட்டமாக பிரித்ததால் எனது வீட்டின் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும், எனது தந்தை வசிக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது.

Image caption ரஞ்சித்குமார்

சொந்த வீட்டிலேயே எங்களை பிரிந்துவிட்டனர். அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளுக்கோ, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது எந்த மாவட்டம் என்று குறிப்பிடுவதில் சிக்கல் நீடிக்கிறது ஒன்றுமே புரியவில்லை. மேலும், அரசு அலுவலகங்களுக்கு சொந்த தேவைக்கு செல்லும் போது கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் இது விழுப்புரம் மாவட்டத்தில் வருகிறது என்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் சென்று கேட்கும்போது இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிறது என்கிறார்கள். இதனால் எங்கு சொல்வதென்றே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது," என்கிறார்.

கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் வசிக்கும் அசோக் குமார் இதுகுறித்து, "இங்கே அருகே உள்ள விழுப்புரம் செல்வதற்கு 16 கி.மீ.,தான் ஆகிறது. ஆனால், கள்ளக்குறிச்சி செல்வதற்கு 100 கி.மீ., வரை செல்ல வேண்டியதிருக்கிறது. இங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் விவசாயத்தை தொழிலாக கொண்டு இருக்கின்றனர். அவர்களின் தேவைகளுக்கு வெளிய பயணம் செல்ல நேரிடும் போது அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம்தான் அவர்களின் அன்றாடம் சென்று வருவதற்கு சுலபமாக இருக்கிறது.

Image caption அசோக் குமார்

மேலும், தினமும் 100, 200 ரூபாய்களுக்கு வருமானம் ஈட்டும் இவர்களுக்கு வெகு தொலைவு சென்று அங்கே தங்களின் தேவைகளுக்கு அலைவது என்பது அவர்களால் முடியாத ஒன்று. ஆகவே நான்கு ஊராட்சிகளில் பிரிந்து இருக்கும் இந்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சியாக அறிவித்து இதை ஒரே மாவட்டமாக விழுப்புரத்தில் இணைக்க வேண்டும்," என்கிறார்.

அக்கிராமத்தில் வசிக்கும் அன்பரசன் கூறும்போது, "நான்கு ஊராட்சியில் இருக்கிற இந்த கிராமத்தை இப்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டதால் மக்கள் அதிக குழப்பத்திற்கு ஆளாகிவிட்டனர். இதற்கு முன்பு நான்கு ஊராட்சிகளாக இருக்கும்போதே எங்களுக்கான அடிப்படை தேவைகள் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டோம். அதற்காக எங்களை ஒரே வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி விழுப்புரம் மாவட்டம் ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், இப்போது இரு மாவட்டங்களாக பிரித்திருப்பதால் மேலும் கிராம மக்களின் மனதில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது," என்கிறார்.

கருவேப்பிலை பாளையம் கிராமம் இரண்டு மாவட்டங்களில் தனித் தனியே பிரிந்து இருப்பதனால் எவ்வாறு மக்களுக்கான தேவைகளை சரி செய்து வருகிறீர்கள் என்று அரசு வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டது பிபிசி தமிழ், "எங்கள் ஊராட்சி சார்ந்த கிராமப் பகுதியில் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். மேலும், தற்போது மாவட்டங்களை பிரித்ததில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து ஆராய்வதில் குழப்பான சூழலே நிலவுகிறது," என்றார்.

மேலும், "இந்த கிராமம் இரு மாவட்டங்களிலும் வருவது குறித்து மாவட்ட நிர்வாகம்தான் கூற முடியும்" என்றார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை பிபிசி தமிழ் பலமுறை தொடர்பு கொண்டு முயற்சித்த போதும், நமது அழைப்பு ஏற்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்