கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டு பாலியல் வல்லுறவு படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு"

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதில் நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு மாலையில் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். இரவு சுமார் 9 மணியளவில் அவர்கள் வீட்டுக்குச் செல்ல தயாரான போது, 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது.

போலீஸார் என்று கூறிய அவர்கள், ஆண் நண்பரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்ததாகவும், பின்னர் மாணவியை ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததை வீடியோ பதிவாகவும் அவர்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இந்து தமிழ்: "ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான துன்புறுத்தல் சென்னை ஐஐடியில்தான் அதிகம்"

சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகத் தேசிய எஸ்சி ஆணைய உறுப்பினர் சுவராஜ் வித்வான் தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், மாணவர் சேர்க்கை மற்றும் பணிநியமனங்களில் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதுதவிர, மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் ஐஐடியில் தொடர்கின்றன. இதனால், சென்னை ஐஐடியில் பயிலும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களின் நிலை பற்றித் தெரிந்து கொள்ளத் தேசிய எஸ்சி ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, எஸ்சி ஆணைய உறுப்பினர் சுவராஜ் வித்வான் கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

அதன்பின்னர் சுவராஜ் வித்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”நம்நாட்டில் உள்ள மற்ற ஐஐடிகளை ஒப்பிடும்போது சென்னை ஐஐடியின் நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இங்குத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. ஐஐடியில் 2007 முதல் 2017-ம் ஆண்டு வரை 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், அதற்கான காரணம் முழுமையாகப் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இடஒதுக்கீடு முறையும் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. மொத்தமுள்ள 2,322 முதுநிலை அறிவியல் இடங்களில் இது வரை 47 எஸ்சி, 6 எஸ்டி பிரிவு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களும் உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாக மாணவர்கள், ஊழியர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் கொண்டு செல்லப்படும். மேலும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை ஐஐடி இயக்கு நருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்றார்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: "நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது"

படத்தின் காப்புரிமை Getty Images

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என பொன் மாணிக்கவேல் அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

இது குறித்த விவரம்: தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேல். தமிழகக் காவல்துறையின் பல்வேறு நிலைகளிலும், பல்வேறு ஊர்களிலும் பணியாற்றியிருந்தார். இந்நிலையில் அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு சிலை கடத்தல் பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்தப் பிரிவில் பணியாற்றும்போதே ஐ.ஜி. பதவி உயர்வும் பெற்றார்.

அவா் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்த காலகட்டத்தில், தமிழக கோயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 201 உலோக சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் உள்பட 1146 சிலைகள் மீட்கப்பட்டன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளை சர்வதேச காவல்துறை துணையுடன் மீட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டன. சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாக 47 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொன் மாணிக்கவேல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் சிலைகளை மீட்பதற்காகவும், சிலை வழக்குகளின் விசாரணையை முடித்து வைப்பதற்காகவும் பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து, சிறப்புக் குழுவையும் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின்படி நவம்பா் 30-ஆம் தேதியான சனிக்கிழமையுடன் பொன் மாணிக்கவேல் பணி முடிவடைந்தது. முன்னதாக, பணி நீட்டிப்புக் கேட்டு பொன் மாணிக்கவேல் சார்பில் அவரது வழக்குரைஞர் மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை டிசம்பா் 6-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டதால், பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவது குறித்து குழப்பமான நிலை நீடித்தது.

தமிழக அரசு உத்தரவு: இந்நிலையில், தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த நிரஞ்சன்மாா்டி வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், 'தமிழகக் காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் ஆகியோர் பரிந்துரையின் அடிப்படையில், நவம்பா் 30-ஆம் தேதியோடு ஓய்வு பெறும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குத் தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை உடனடியாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பொன் மாணிக்கவேல் பதில்: இந்த உத்தரவுக்குப் பதில் அளிக்கும் வகையில், பொன் மாணிக்கவேல் ஒரு கடிதத்தைத் தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர், தமிழகக் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சனிக்கிழமை அனுப்பினார். அதில், 'கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். உயா்நீதிமன்றம் மூலம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

எனது பதவி தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் அது தொடர்பான உத்தரவிடும்வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது.

இதனால், தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது பொருந்தாது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புக் குழுவின் கீழ் இருக்கும் வழக்கின் ஆவணங்களைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஒப்படைக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்படாது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.’

தினத்தந்தி: என்னையும், கணவரையும் கருணைக்கொலை செய்து விடுங்கள்

Image caption நளினி

தன்னையும், கணவரையும் கருணைக்கொலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கடந்த 27-ந் தேதி ஜெயில் அதிகாரிகளிடம் மனு அளித்த நளினி, பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக்கொலை செய்ய வேண்டும் என கூறி உண்ணாவிரதம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, 28-ந் தேதி காலை முதல் அவர் உண்ணாவிரதம் இருந்தார். நேற்று 3-வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று மதியம் வேலூர் சிறையில் நளினியையும், முருகனையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர், "நளினி கடந்த 27-ந் தேதி பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அவரையும், முருகனையும் கருணைக்கொலை செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறோம். முன்பு எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் தற்போது அந்த நம்பிக்கை போய்விட்டது. சிறை அதிகாரிகள் எனது கணவரை துன்புறுத்துகிறார்கள். இதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எனது கணவருக்கு ஜெயிலில் வழக்கமாக அனுமதிக்கக்கூடிய சலுகைகளைகூட தற்போது அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே எங்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைத்தவிர நளினி நேற்று தங்களை கருணைக்கொலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகம் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார். தமிழக உள்துறை செயலாளருக்கும் மனு அனுப்பி உள்ளார். அதில், ஜெயிலில் தங்களை துன்புறுத்துகிறார்கள். என்னையும், எனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. எங்களை வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதையும் நிராகரித்து விட்டனர். எனவே எங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருணைக்கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதுதொடர்பாக அவர் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளிக்கவில்லை. ஜெயிலில் முருகன் துன்புறுத்தப்படுவதற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதிதான் காரணம்.

ஜெயிலுக்குள் ஊழல்கள் நடக்கின்றன. அதில் டி.ஐ.ஜி. லாபம் அடைவதாக முருகன் தமிழக அரசுக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதன் காரணமாக முருகனை துன்புறுத்துகிறார்கள். டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான புகார்களை சேகரித்து வருகிறோம். விரைவில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்." என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: