தமிழ்நாடு ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - திமுக கண்டனம்

உள்ளாட்சி தேர்தல் படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுமென தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நகர்ப்புறப் பகுதிகளுக்கு நிர்வாகக் காரணங்களுக்காக பிறகு தேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, "ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தேர்தல் அறிக்கை டிசம்பர் ஆறாம் தேதியன்று வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் ஆறாம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை நடைபெறும்" என்று தெரிவித்தார்.

தேர்தல்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதியன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுசெய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் ஜனவரி ஆறாம் தேதி நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடக்குமெனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1,18,974 பதவியிடங்களை நிரப்பிட நேரடித் தேர்தல் நடைபெறும். கிராம ஊராட்சித் தலைவர் மற்று் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

இரண்டு கட்டத் தேர்தல்

முதல் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 6,251 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் டிசம்பர் 27ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறும்.

இரண்டாம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் டிசம்பர் 30ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நான்குவிதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும் கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

முதல் கட்டத் தேர்தலில் 1.64 கோடி வாக்காளர்களும் இரண்டாம் கட்டத் தேர்தலில் 1.67 கோடி வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

இந்தத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவியிடங்களைத் தவிர்த்து ஏனைய பதவியிடங்களுக்கு வாக்குப் பதிவிற்கு சுமார் 2, 33,000 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது ஏன் என செய்தியாளர்கள் கேட்டபோது, நிர்வாகக் காரணங்களுக்காக நகர்ப்புறப் பகுதிகளுக்கு தனியாகத் தேர்தல் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பைச் செய்வதற்கான செய்தியாளர் கூட்டம் 10 மணிக்கு நடைபெறுமென 9.15 மணியளவில் கூறியது ஏன் இவ்வளவு அவசரமாக இந்தக் கூட்டத்தை நடத்தியது ஏன் என்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

திமுக கண்டனம்

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பதை, திமுக கண்டித்துள்ளது.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், "இந்த அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் விருப்பம் இல்லை. இது போல நகராட்சி, மாநகராட்சிக்கு அறிவிக்காமல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் அறிவித்தால் யாராவது, நீதிமன்றத்துக்கு சென்று தேர்தல் நடத்துவதை நிறுத்த மாட்டார்களா என்று நினைத்து இப்படி அறிவித்துள்ளார்கள்" என்று துரைமுருகன் குற்றஞ்சாட்டினார். திமுக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை தடுக்கிறது என்று கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, இப்போதுகூட நகரப் பகுதிகளுக்கு சேர்ந்து தேர்தல் நடத்தினால் அதை எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் துரைமுருகன்.

இதற்கிடையே ஊடகங்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொகுதிகளின் மறுவரையறை சரிவர நடக்கவில்லை என்றுதான் திமுக நீதிமன்றத்துக்கு சென்றது, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தவேண்டும் என்று செல்லவில்லை என தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு - வைகோ கண்டனம்

தமிழக அரசு வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை என மதிமுக பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption கோப்புப்படம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும். என்று கூறியுள்ளார்.

'தேர்தலையே தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்' என்று மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்