தமிழ்நாட்டில் கன மழை எங்கெங்கு நீடிக்கும்? சென்னை ஏரிகள் எவ்வளவு நிரம்பியுள்ளன?

மழை படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் அடுத்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு பல இடங்களில் கன மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கன மழையும் 3 இடத்தில் மிக கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக மேட்டுப் பாளையத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை ஒட்டிய கடல்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழையும் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, மாலத் தீவு, லட்சத் தீவு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுமென்றும் அவ்வப்போது மழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரையிலான வட கிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் 40 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையளவு, 36 சென்டிமீட்டராகும். தற்போது பெய்துள்ள மழை, வழக்கத்தைவிட 11 சதவீதம் அதிகம்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிரம்பாத ஏரிகள்

சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவந்தாலும், சென்னைக்குக் குடி நீர் வழங்கும் ஏரிகள் இன்னும் பாதி அளவுகூட நிரம்பவில்லை. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் 1,229 மில்லியன் கன அடி நீர் மட்டுமே நிரம்பியுள்ளது. விநாடிக்கு 2,925 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 131 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. விநாடிக்கு 440 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செங்குன்றம் ஏரியில் 1,818 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 2,161 கன அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஆனால், தற்போது 913 மில்லியன் கன அடி நீர் மட்டுமே நிரம்பியுள்ளது. 1,923 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி. இதில் தற்போது 4,091 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் 1,694 மில்லியன் கன அடி நீரே இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்