சிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை சமர்ப்பிக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பொன் மாணிக்கவேல் படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிகாரிகள் மீது சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனது உயர் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்று பொன் மாணிக்கவேல் பணி நீடிப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இரண்டாவதாக பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபி , தமிழக அரசின் தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிடோருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தொடரந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்ற இடைக்கால மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.

இந்த வழக்குகளுக்கு ஏற்கனவே, பொன் மாணிக்கவேல், மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேலுக்கு ஆதரவாக இருக்கும் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் சிலை கடத்தல் வழக்குகளில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால், பொன் மாணிக்கவேல் தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரிக்க பதவி நீடிப்பு வழங்க வேண்டும் எனவும், விசாரணைக்கு முழுமையாக தமிழக அரசு தரப்பில் இருந்து ஒத்துழைப்பு வழங்கவில்லை பல அரசு அதிகாரிகள் விசாரணைக்கு இடையூராக இருந்தனர், எனவே அவர்கள் மீது அவமதிப்பு வழக்கும் தொடரபட்டுள்ளது எனவும் பதில் மனுவில் குறிப்பிடிருந்தனர்.

இந்த நிதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (2.12.2019) விசாரணைக்கு வந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, பணி ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியின் பதவியை அசாதாரண சூழலில் தான் நீட்டிக்க முடியும் என வாதிட்டார். அசாதாரண சூழலிலும், அந்த குறிப்பிட்ட அதிகாரியால் மட்டுமே அந்த வழக்கை விசாரிக்க முடியும் என்ற நிலையில் தான் பதவி நீட்டிக்கப்படும். தற்போது அவ்வாறான சூழல் இந்த வழக்கில் இல்லை எனவும் முகுல் ரோத்தகி கூறினார்.

எனவே பொன் மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது. நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம் எனவும் தமிழக அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது.

இதுவரை பொன் மாணிக்கவேல் தனது பதவி காலத்தில், வழக்கு விசாரணை தொடர்பான எந்த ஒரு அறிக்கையையும் தனது உயர் அதிகாரிகளுக்கு சமர்பிக்கவில்லை. மின் அஞ்சல் மூலமாக தகவல் மட்டுமே அளித்துவந்தார், முறையாக எந்த ஆவணத்தையும் அறிக்கையையும் அரசுக்கு வழங்கவில்லை என தமிழக அரசு சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி குறிப்பிட்டார்.

பொன் மாணிக்கவேல் தான் தோன்றிதனமாக நடந்து கொண்டார், இதை ஏதிர்த்து கேள்வி எழுப்பிய அனைத்து அரசு அதிகரிகளின் மீது பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.

தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன என பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தரப்பு வழக்கறிஞர் சாய் தீபக், முத்து குமார், ஆனந்த, ஜி எஸ் மணி ஆகியோர் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது. அதனால் தான் சென்னை உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை நியமித்து. ஆனாலும் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு அரசு தரப்பில் இருந்து இடையூறுகள் இருந்தன.எனவே தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது என விளக்கம் அளித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

மேலும் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் தனது உயர் அதிகாரியிடம் முறைபடி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தன்னை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது, எனவே சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என ஏற்கனவே பொன். மாணிக்கவேல் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்