ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: “குற்றவாளிகளை கும்பல்கொலை செய்ய வேண்டும்” - ஜெயா பச்சன்

பாலியல் வன்கொடுமை படத்தின் காப்புரிமை Getty Images

ஹைதராபாத்தில் 27 வயது பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.

"இது கடுமையான ஒன்று என்பதை நான் அறிவேன். ஆனால், இதுபோன்ற குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும்" என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தோடு தொடர்புடைய நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் தங்களது கோப அலைகளை வெளிப்படுத்தினர். அப்போது, இதுபோன்ற சம்பவங்களை தடுத்து, பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு வைத்துள்ள திட்டங்கள் குறித்து அறிய விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாலிவுட்டின் முன்னாள் நடிகையும், பெண்களுக்கெதிரான குற்றங்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான ஜெயா பச்சன், இன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, "இந்த தருணத்தில், அரசு தகுந்த, திட்டவட்டமான பதிலை அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், "நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். தாமதமாக கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters

அதைத்தொடர்ந்து, உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய சம்பவத்தை கண்டிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை" என்று கூறினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் என்ற நம்பிக்கையில், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

எனினும், எதிர்பார்த்ததை போன்று அவை பலனளிக்காததால், "பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து, தக்க நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது" என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :