மேட்டுப்பாளையம் விபத்து: 16 உடல்கள் எரியூட்டப்பட்டன - விரிவான தகவல்கள்

கோவை மேட்டுப்பாளையம்: இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்

கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று (திங்கள்கிழமை) ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அருகிலுள்ள வீடுகளின் மீது விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், 16 உடல்கள் மின் மயானத்தில் எரிக்கப்பட்டன.

இறந்தவர்களில் ஒருவரின் உடலை உறவினர் ஒருவர் கையெழுத்திட்டு பெற்ற நிலையில், மற்ற உடல்களை இரவு 7 மணி அளவில் காவல்துறையினர் சாந்திவனம் என்ற பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

தங்களின் கையெழுத்து இன்றி காவல்துறையினரே உடலை கொண்டு சென்றதாக இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள், ஊர் மக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் மாலையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் ஹரிஹரன், "இந்த விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இறந்தவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி ஊர் மக்களும் இன்று காலையிலிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள நான்கு லட்சம் நிவாரண தொகையை, 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள், 11 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாக்குவாதம், தள்ளுமுள்ளு

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனையின் முன்பு அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி, 500க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறையினர் கூறியபோது, நடந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளாக மாறியது. அதையடுத்து, சிறிது தடியடி நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த சிலரை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் சில அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் முகாமிட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

முன்னதாக, நொறுங்கி விழுந்த நான்கு வீடுகளும் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த, ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட எளிய வீடுகள் என்று கூறுகிறார் செய்தியாளர் ஹரிஹரன். வரிசையாக அமைந்திருந்த இந்த நான்கு வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டின் சுற்றுச்சுவர் சுமார் 25 அடி உயரத்துக்கு, கருங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கட்டும்போதே தற்போது பாதிக்கப்பட்ட வீட்டைச் சேர்ந்தவர்களும், அந்தப் பகுதி மக்களும் இவ்வளவு உயரமான சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அது இடிந்து விழலாம் என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் சொல்வதாகக் கூறுகிறார் ஹரிஹரன்.

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்