"கொள்கை இல்லாத ரஜினி, கமலை மக்கள் ஏற்பார்களா?" - ஆ. ராசா பிரத்யேக பேட்டி

ஆ. ராசா
Image caption ஆ. ராசா

கொள்கை, தத்துவம், சமூக நோக்கம் இல்லாமல் அரசியல் களம் புக முற்படும் திரையுலக நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை மக்கள் ஏற்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுகவைச் சேர்ந்த எம்.பியும் இந்திய முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா.

பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலில் ரஜினி, கமலின் அரசியல் வருகை குறித்து எழுப்பிய கேள்விக்கு ராசா அளித்த பதில்:

கே: இந்திய திரை உலக ஆளுமைகளாக கருதப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்துக்கு முற்பட்டிருக்கிறார்கள். ரஜினி அவ்வப்போது தோன்றி, அரசியல் புகுவேன் என்று கூறும் வேளையில், கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் களத்தில் வேட்பாளர்களையும் நிறுத்தியிருக்கிறார். இருவருடைய அரசியல் களம் புகுதலை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இருவரிடமே எனக்கு புரியாத புதிராக ஒரு விஷயம் உள்ளது. ஒரு அரசியல் கட்சியை முன்னெடுக்கும்போது, அந்த கட்சியின் தத்துவம் என்ன? நெறி என்ன? சித்தாந்தம் என்ன? என்பதை இருவரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. எம்ஜிஆரை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தார்.

அதிமுகவை அவர் தோற்றுவித்தபோது, அதன் முழு கொள்கையும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து கடன் வாங்கப்பட்டதாகவே அது இருந்தது. தமிழ் மொழி, திராவிட இனம், திராவிட மொழி, தமிழர் நலன், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பனவாக அவரது கொள்கைகள் இருந்தன. ஆக, திமுகவுக்கு இணையான ஒரு கட்சியாக நான் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறேன் என்று அவர் கூறியபோது, அவரது திரையுலக கவர்ச்சி அதற்கு பயன் அளித்தது. அவருக்கு என இருந்த சினிமா புகழ் அவருக்கு உதவியாக இருந்தது. நானும் அண்ணா, பெரியார் வழிதான் என்று அவர் முழங்கினார். ஆனால், கமலுக்கும் ரஜினிக்கும் புலப்படாத பிரச்னைகள் உள்ளன.

இப்போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சித்தாந்தம் உள்ளது. ஒரே நாடு, ஒரே கலாசாரம், இந்துத்துவா என அந்த கட்சி கோரி வருகிறது. திமுகவுக்கும் அப்படித்தான். தமிழ் மொழி, திராவிட இனம், அந்த இனம் மற்றொரு இனத்துக்கு கட்டுப்பட்டது அல்ல என்றெல்லாம் நாங்கள் சொல்கிறோம். அதேபோல இடதுசாரி கட்சிகளுக்கு பொதுவுடைமை சித்தாந்தம் உள்ளது. உலக அளவில் அரசியல் கட்சிக்கு ஒரு நோக்கம் தேவை. இந்த சமூகத்தை விடுதலை செய்ய நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அவர்கள் கூறலாம். பாட்டாளி மக்கள் கட்சி கூட, பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதாரம், கல்வியில் இடஒதுக்கீடு பெற்றுத்தருவோம், அவர்களின் நலன் காப்போம் என்று கூறுகிறது. அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், எதுவும் இல்லாமல், என்ன செய்யப்போகிறோம் என்பதே அறியாமல், தாங்கள் சினிமாவில் நடித்தோம் என்று கூறி அந்த புகழை வைத்துக் கொண்டு மட்டும் அரசியலுக்கு வருவது என்பது ஏற்புடையதுதானா என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்றும் கேள்வி எழுகிறது.

என்னை பொருத்தவரை, தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள், தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பதற்கு சிறை சென்றுள்ளனர். திமுகவில் மு.க.ஸ்டாலின் பொதுவாழ்வுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார், சிறை சென்றுள்ளார், பொதுமக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

ஆனால், ரஜினிக்கும், கமலுக்கும் கடந்த காலங்களில் சமூக அக்கறை இருந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் மன்றங்கள் வைத்துக் கொள்வது என்பது வேறு. சமூகத்தில் நடக்கக்கூடிய ஒரு விஷயத்துக்காக அவர்கள் கடந்த காலங்களில் குறைந்தபட்சம் கருத்து சொன்னது கூட கிடையாது. திடீரென இன்று வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

எப்படி வெற்றிடம் வரும்? அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு வெற்றிடம் வந்தது. அதை சசிகலா, எடப்பாடி பழனிசாமி மூலம் நிரப்பினார். பாவம், சசிகலா சிறைக்கு சென்று விட்டார். அந்த கட்சித் தலைமையின் வெற்றிடத்தை அரசியல் ரீதியாக அல்ல, அரசு ரீதியாக எடப்பாடி நிரப்பிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் அந்த வெற்றிடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கிறது.

எடப்பாடி தலைவராக உருவானவர் கிடையாது. அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். பல முறை எம்எல்ஏ ஆக இருந்தவர் என்பதை தவிர அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. முழுக்க, முழுக்க, சசிகலாவால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி. சசிகலாவிடம் எப்படி போய் அவர் காலைத் தொட்டு கும்பிட்டார் என்பதை அனைவரும் பாத்திருப்பீர்கள். அப்படியெல்லாம் காலை தொட்டுக் கும்பிட்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததால் அந்த கட்சியில் வெற்றிடம் உள்ளது என்றால் அதில் ஒரு நியாயம் உள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

ஏனென்றால் அங்கு ஆட்சி முடிந்தால், அந்த கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள்? அதை சசிகலா சிறையில் இருந்து திரும்பி வந்து நிரப்புவாரா, எடப்பாடியே நிரப்புவாரா அல்லது இணை தலைவர் என்று அழைத்துக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் நிரப்புவாரா? அங்கு ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி உள்ளன. அவை ஒன்றாகி விட்டனவா? தற்போது அதிகாரம் உள்ள காரணத்தால் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். எல்லோரும் சம்பாதிக்க வேண்டும், பதவி, பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கட்சியில் பலரும் இருக்கிறார்கள். ஆனால், திமுகவில் அப்படி கிடையாது.

திமுகவில் சிறு வயதில் இருந்தே தந்தையுடனேயே அரசியலில் இருந்து, மாவட்ட பிரதிநிதி, இளைஞர் அணி செயலாளர், துணை பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என கட்சியிலும், ஆட்சியில் பார்த்தால், மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்று நியாயமான, அடிப்படை வாதங்களோடு, ஒரு பரிணாம வளர்ச்சியாக திமுக தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார்.

திமுகவில் அவரது தலைமையை ஏற்க மறுத்து, அவருக்கு தகுதியில்லை என்று யாராவது கூறுகிறார்களா? மிகப்பெரிய நாடாளுமன்ற தேர்தலை அவரது தலைமையில் சந்தித்து திமுக வெற்றி பெற்றுள்ளது. இதுவே அவரது தலைமைத்துவத்தை காட்டவில்லையா? அவரது தலைமையில் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால், இங்கே எங்கே வெற்றிடம் இருக்கிறது.

பேட்டியில் எழுப்பிய பிற கேள்விகள் என்ன?

இதுபோல, கோட்சே தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி எம்.பி பிரக்யா தாக்கூர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தின் பின்னணியில் நடந்தது என்ன? அயோத்தி வழக்கிலும் சபரிமலை கோயில் விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்து உள்ளே எழுப்புவதில் ஏன் தாமதம்? உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் திடீர் முக்கியத்துவம் ஏன்? சிவசேனை முதல்வருக்கு அவசரமாக ஸ்டாலின் ஆதரவு தந்தது ஏன்? சிதம்பரம் கைது பின்னணியில் சிபிஐ யாருடைய நிர்பந்தத்தால் செயல்படுகிறது? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தலைமை தொடருமா? தேசிய அரசியலுக்கு வருவாரா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கும் ஆ. ராசா பதில் அளித்துள்ளார். அவை இந்த நேர்க்காணல் செய்தியின் இரண்டாம் பாகத்தில் நாளை வெளியாகும்.

பிபிசி தமிழ் யூடியூப் பக்கத்தில் இந்த நேர்க்காணல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்