ஏமன் நாட்டிலிருந்து கடல் வழியே தப்பி வந்த மீனவர்கள்: "10 நாட்கள், 3,000 கி.மீ" சினிமாவை மிஞ்சும் நிஜ பயணம்

ஏமன் நாட்டிலிருந்து தப்பிவந்த மீனவர்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்பு படம்

ஏமன் நாட்டிலிருந்து கடல் வழியே வெறும் விசைப்படகு மூலம் 3000 கி.மீ பயணித்து ஒன்பது இந்திய மீனவர்கள் தப்பி வந்துள்ளனர்.

இவர்களில் ஏழு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் கேரளா மாநிலத்தினர்.

ஏன் ஏமன் சென்றார்கள், என்ன நடந்தது, எப்படி தப்பி வந்தார்கள்? இந்த கேள்விகளுக்கான பதில் சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யத்துடன் இருக்கிறது.

துபாயில் பணி என கூறி இவர்களை ஏமனுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

யார் இவர்கள்?

Image caption தப்பி வந்த மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சகாயம் ஜெகன் (28), நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த ரவிக்குமார், ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த வினிஸ்டன் (47), எஸ்கலின் (29), ஆல்பிரட் நியூட்டன் (35), பெரியகாடு பகுதியை சேர்ந்த விவேக் (33), மணக்குடியை சேர்ந்த சாஜன், மற்றும் கேரள மாநில மீனவர்கள் இருவர் என மொத்தம் 9 மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏமன் நாட்டில் அரேபிய முதலாளியால் மீன்பிடி வேலைக்காகப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்பு படம்

அந்த அரேபிய முதலாளி தங்களுக்கு உரிய ஊதியத்தையும், சில சமயங்களில் சரியான உணவையும்கூட தரவில்லை என்று குற்றஞ்சாட்டும் மீனவர்கள், இதன் காரணமாக அங்கிருந்து தப்ப கடந்த சில மாதங்களாகத் திட்டம் தீட்டியதாகக் கூறுகிறார்கள்.

குறிப்பிடப்பட்ட அரேபிய முதலாளி குறித்து இந்த மீனவர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை.

கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி அந்த அரேபியரின் விசைப்படகை எடுத்துக் கொண்டு கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கிய இந்த மீனவர்கள் எட்டு நாள் பயணத்துக்குப் பின் லட்சத்தீவு பகுதியை வந்தடைந்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்பு படம்

நவம்பர் 27ஆம் தேதி அவர்கள் தங்கள் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, தாங்கள் இந்தியக் கடல் எல்லைக்கு வந்துவிட்டதாகவும், லட்சத்தீவு கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், தங்களை உடனடியாக மீட்கும்படியும் கூறி இருக்கிறார்கள்.

உதவிய அருட்தந்தை

இதனை அடுத்து மீனவர்களின் உறவினர்கள் குமரியில் உள்ள தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் அருட்தந்தை சர்ச்சிலிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக சர்ச்சில் குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கொச்சின் கடற்படைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் மீனவர்களைத் தேடி லட்சத்தீவு பகுதிக்கு சிறிய ரக விமானத்தை அனுப்பித் தேடியுள்ளனர்.

அப்போது மீனவர்கள் ஏமன் நாட்டுப் படகுடன் டீசல் இல்லாமல் நடுக்கடலில் தத்தளித்து நின்று கொண்டிருப்பதை கண்ட கடற்படையினர் இந்தியக் கடலோர காவல் படைக் கப்பலை அனுப்பி மீனவர்களைப் படகுடன் மீட்டு கொச்சின் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதன் பின் மீனவர்களை தங்களது உறவினர்களிடம் ஒப்படைத்தது கடற்படை.

அபாயகரமான வாழ்வும், பயணமும்

ஏமனிலிருந்து ஏறத்தாழ 3000 கி.மீ தூரத்தில் இருக்கிறது கொச்சின். ஏன் இந்த அபாயகரமான பயணத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற நம் கேள்விக்கு, "அங்கு வாழ்க்கை இதனை விட அபாயகரமானதாக இருந்ததும்," என்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அபாயகரமான வாழ்வும், பயணமும் (சித்தரிப்பு படம்)

இது குறித்து ஏமனில் இருந்த தப்பி வந்த படகு ஓட்டுநர் ஆல்பர்ட் நியூட்டன் பிபிசி தமிழிடம், "நாங்கள் பணியில் சேர்ந்த முதல் சில நாட்கள் எல்லாம் சரியாகவே சென்றது. ஆனால், அதன்பின் எங்களுக்குரிய பங்கு தொகையைக் கொடுக்க ஏஜெண்ட் மறுத்துவிட்டார். ஏறத்தாழ எங்களது பத்து மாத பங்கு தொகையை எங்களுக்கு அவர் தரவில்லை. எங்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. நாங்கள் கேள்வி எழுப்பினாலும், அவர் எங்களுக்குச் சரியான எந்த பதிலையும் தரவில்லை,"என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 25 நாட்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.

"நாங்கள் வேலை நிறுத்தம் செய்ததை அடுத்து எங்களுக்கு உணவு அளிப்பதை அவர் நிறுத்திவிட்டார்," என்கிறார் ஆல்பர்ட்.

மேலும் அவர், "இது குறித்து ஏமன் கடற்படை அதிகாரிகளிடம் நாங்கள் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்குக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. மீண்டும் தொழிலுக்குச் சென்றோம்," என்றார்.

இரான் கடற்படை

இதற்கு முன்பு ஆல்பர்ட் இரான் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்பு படம்

இது குறித்து விவரிக்கும் ஆல்பர்ட், "இதற்கு முன்பு இதேபோல் துபாயிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக இரான் நாட்டுக் கடற்படையால் கைது செய்யப்பட்டு 4 மாதங்கள் சிறையிலிருந்தேன். பின் சொந்த ஊருக்கு வந்து இருந்து விட்டுத் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் வெளிநாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்றதில் இப்படி அரேபிய முதலாளியிடம் ஏமாந்து நாடு திரும்பியுள்ளேன்." என்கிறார்.

மீனவர் வெனிஸ்டனும் இரான் கடற்படையால் முன்பே ஒரு முறை கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

Image caption தப்பி வந்த ,மீனவர்கள்

"கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு 4 மாதங்கள் சிறையிலிருந்தேன். அந்த நேரத்தில் எனது மகனின் பள்ளி கட்டணம் செலுத்த முடியாததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக மகனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு என் மனைவி கடல் தொழிலுக்கு அனுப்பிவிட்டார். நான் இரான் சிறையிலிருந்த திரும்பி வரும் போது எனக்கு 14 லட்சம் ரூபாய்க் கடன் இருந்தது. எனவே, இந்த வாய்ப்பு வந்தபோது நான் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால், 10 மாதங்கள் எந்த பணமும் கிடைக்காமல் எனது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறேன். இனிமேல் வெளி நாடுகளுக்குச் சென்று ஏமாற மனதளவில் தைரியம் இல்லாததால் உள்ளூர் கடலில் மீன் பிடிக்கச் செல்ல இருக்கிறேன்," என்கிறார் வெனிஸ்டன்.

மீனவர் வெனிஸ்டன் மனைவி கெவின் பிபிசி தமிழிடம், "எனது கணவர் இரான் நாட்டுச் சிறைகளிலிருந்த போது எனது மகனின் பள்ளிப் படிப்பு பாதிக்கப்பட்டது மீண்டும் அங்கு இருந்து தமிழக வந்தார் இங்கு போதிய வருமானம் இல்லாததால் மீண்டும் என் கணவரை வெளி நாட்டுக்கு மீன் பிடி தொழில் செய்ய அனுப்பி வைத்தேன். 10 மாதங்கள் சம்பளம் கிடைக்காமல் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கு இருந்து தப்பி வந்துள்ளார். எனவே மீண்டும் நான் என் கணவரை வெளி நாட்டிற்கு அனுப்ப போவதில்லை," என கூறுகிறார்.

துபாய் என்று அழைத்து சென்றார்கள்

இவர்களை மீன்பிடிக்க அழைத்த போது துபாயில்தான் வேலை என்று கூறி இருக்கிறார்கள்.

"துபாய் சென்றதும், இங்கு வேலை இல்லை. ஓமன் என்று கூறினார்கள். நாங்களும் ஓமன் என்று நம்பிக்கையாகச் சென்றோம். ஆனால்,ஓமனுக்கு அழைத்துச் செல்லாமல், ஏமனுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஊதியம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் அப்போது இருந்தோம்," என்கிறார் மீனவர் விவேக்.

ஏமனிலிருந்து தப்பி வந்தது எப்படி?

ஏமனிலிருந்து தப்பி வந்தது எப்படி, வழியில் சந்தித்த பிரச்சனைகள் என்ன? என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவர் ஜெகன், "அது ஒரு நீண்ட திட்டமிடல்" என்கிறார்.

அவர், "எங்களால் விமான மார்க்கமாகத் தப்பி வர முடியாது. எங்களுக்கு இருக்கும் ஒரே வழி கடல்தான். கடல்தான் எங்களுக்கு நன்கு தெரிந்த வழியும் கூட... அதனால், நான்கு மாதம் இதற்காகத் திட்டமிட்டோம்" என்கிறார்.

அவர், "மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல எங்களுக்கு ஒவ்வொரு முறையும் எங்களுக்கு சில ஆயிரம் லிட்டர் டீசல்களை அந்த அரேபியர் தருவார். நாங்கள் அதிலிருந்து எங்கள் பயணத்துக்குத் தேவையான டீசலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த நான்கு மாதங்களாகப் பதுக்கத் தொடங்கினோம். ஏறத்தாழ 7000 லிட்டர் டீசல் சேகரித்தோம்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 19ஆம் தேதி வழக்கம் போல அவர்களைப் பணியமர்த்திய அரேபியரிடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கிறோம் என்று இவர்கள் கூறி இருக்கிறார்கள். கடலில் தங்கி மீன்பிடிக்க வேண்டும் என்பதால் அந்த அரேபியர் 10 நாட்களுக்குத் தேவையான உணவைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

அதனை எடுத்துக் கொண்டு இந்தியா நோக்கி விசைப் படகைச் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள் இந்த மீனவர்கள்.

ஆனால், கடல் பயணம் அவ்வளவு சுலபமாக இவர்களுக்கு இருந்துவிடவில்லை.

ஜெகன் , "புறப்பட்டதிலிருந்து கடல் சீற்றமாக இருந்ததால் நாங்கள் சரியான திசையில்தான் செல்கிறோமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது? நமது திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மீண்டும் ஏமன் செல்லலாமா என்று யோசித்தோம். ஆனால், அந்த யோசனையே அச்சமூட்டியது. நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து படகைச் செலுத்தினோம்" என்கிறார்.

லட்சத்தீவை நெருங்கும் சமயத்தில் உறவினர்களுக்கு இவர்கள் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதன்பின், இவர்கள் உறவினர்கள் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் மூலமாக கொச்சின் கடற்படைக்குத் தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

ஜெகன், "லட்சத்தீவு அருகே 58 நாட்டிக்கல் தூரத்தில் கடலோர காவல் படை அதிகாரிகள் எங்களை மீட்டு படகுடன் பத்திரமாக கொச்சின் அழைத்து வந்தனர்," என்கிறார்.

ஏமன் உள்நாட்டுப் போர்

ஏமனில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்கிறார் இந்த மீனவர்கள்.

அவர்கள், "நாங்கள் கடலிலேயேதான் இருப்போம். மிகவும் சொற்ப நாட்கள்தான் கரையிலிருந்திருக்கிறோம். அதனால், எங்களுக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியாது,"என்கிறார்கள்.

கடலோடுதான் வாழ்வு

"மீண்டும் நீங்கள் மீன் பிடிக்க வெளிநாடு செல்வீர்களா?" என்ற நமது கேள்விக்கு, "நான் மீனவன். மீன் பிடிக்க மட்டும் தான் தெரியும். மீன் பிடி தொழிலை விட்டால் எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. மீன் பிடி வேலை கிடைத்தால் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வேன். ஏனெனில் என் குடும்பச் சூழல் அப்படி," என்கிறார் மீனவர் நியூட்டன்.

எப்படி ஏமனில் இருந்து தப்பி வந்தார்கள், வரும் வழியில் என்ன பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பது குறித்துத் தப்பி வந்த மீனவர் ஜெகன் பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில் நாங்கள் இந்தியா திரும்பி வருவதற்கு விமானம் மூலமாக வர முடியாது என்பதால் ஒரே வழி கடல் வழியாகச் செல்வது என்பதால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பிலிருந்து அரேபிய முதலாளிக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக டீசலை சேமிக்க ஆரம்பித்தோம்" என்றார்.

ஏன் வெளிநாடு?

தமிழக கடற்பரப்பு மிகவும் நீளமானது. அதனைவிட்டு வெளிநாடுகளில் மீன்பிடிக்கச் செல்வது ஏன்? என்ற கேள்விக்கு, ஏமனிலிருந்து மீண்டு வந்த மீனவர் விவேக், "நான் 7 ஆண்டுகளாக மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். தமிழகத்தில் பிடிக்கும் மீன்களுக்கு உரிய விலை இல்லை,அதே போல் கடலில் மீன் வரத்தும் மிகவும் குறைந்து விட்டது என்பதால் வெளிநாட்டில் மீன் பிடி தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் சென்றேன்," என்கிறார்.

இந்த சம்பவம் தமது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர் கூறுகிறார்.

"இப்போது நடந்த இந்த சம்பவத்தால் எனக்குக் கடலில் கால் வைக்கவே பயமாக உள்ளது எனவே, எனது எதிர்கால வாழ்வாதாரத்திற்காக மீன் பிடி தொழிலை விட்டு விட்டு மாற்றுத் தொழில் தேடிச் செல்ல உள்ளேன்," என்று கூறுகிறார்.

நீதி வேண்டும்

இவர்களை போல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ளனர் என்கிறார் இவர்களை மீட்க உதவிய தெற்காசிய மீனவர் அமைப்பின் தோழமை பொதுச் செயலாளர் அருட்தந்தை சர்ச்சில்.

"இவர்களைப் போல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் அரேபிய முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டு தாயகம் திரும்பி வர முடியாமல் தூதரக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் .எனவே இந்திய அரசு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அதே போல் இந்தியத் தூதரகத்தில் மீனவர்கள் குறித்த பிரச்சனைகளைச் சரி செய்யத் தனி அலுவலரை நியமிக்க வேண்டும்" என்கிறார் சர்ச்சில்.

மேலும் அவர், "மீனவர்கள் அரேபிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டால் அதற்கான ஒப்பந்தத்தை அரேபிய முதலாளிகள் இந்தியத் தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அதன் நகலை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரேபிய முதலாளிகளால் மீனவர்கள் ஏமாற்றப்படும் நேரத்தில் அந்த அரேபிய முதலாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மீனவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.,"என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :