மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்: பா.ஜ.க. மாநில துணைத் தலைவருக்குத் தடை

மு.க. ஸ்டாலின் படத்தின் காப்புரிமை Facebook
Image caption மு.க. ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராவார் என பேசிய பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் கட்சிக் கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமணம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் பி.டி. அரசகுமார், "எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் தளபதி அவர்கள்தான். அவர் நாம் வாழ்கிற காலத்தில் வாழ்கிறார். அது நமக்குக் கிடைத்த பெருமை. முதல்வர் இருக்கையைத் தட்டிப் பறிக்க வேண்டுமென நினைத்திருந்தால், ஒரு இரவுக்குள் கூவத்தூர் சென்று அதைச் செய்திருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயக முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறார்" என்று கூறினார்.

பி.டி. அரசகுமாரின் இந்தப் பேச்சுக்கு, பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

இதையடுத்து, தனது பேச்சு குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசகுமார் விளக்கமளித்தார். "நான் யதார்த்தமாகப் பேசினேன். எதையும் திட்டமிட்டுப் பேசவில்லை. ஜனநாயக ரீதியில் முதல்வராக விரும்புகிறார். முதல்வராக வாழ்த்துகிறேன் என்று சொன்னேன். எனது தனிப்பட்ட உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தினேன். பா.ஜ.க. கட்சியின் குரலாகவோ, வார்த்தைகளாகவோ வெளியிடவில்லை" என்று விளக்கமளித்தார்.

இந்த நிலையில், பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ். நாகேந்திரன், பி.டி. அரசகுமாருக்கு கட்டுப்பாடு விதித்து அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அவரது இந்தப் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறிய செயலாகக் கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியத் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேசியத் தலைமையில் இருந்து பதில் வரும்வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக்கூடாது" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு தொடர்பாக கேட்பதற்கு பி.டி. அரசகுமாரைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்