விக்ரம் லேண்டர் உடைந்த பாகங்களை அடையாளம் காட்டிய தமிழர் - நாசா அங்கீகாரம்; சந்திரயான்-2 புதிருக்கு விடை

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் காட்டும் நிலவின் புகைப்படம். படத்தின் காப்புரிமை NASA
Image caption விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவில் விழுந்து கிடக்கும் இடத்தைக் காட்டும் புகைப்படம். இதில் S என்று குறிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் சண்முகசுந்தரம் உடைந்த பாகங்கள் இருப்பதை அடையாளம் காட்டினார்.

சந்திரயான் -2ல் இருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் தரையிறங்கு கலனின் உடைந்த பாகங்கள் தற்போது நாசா செயற்கைக்கோள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாசா விண்கலன் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு இந்தப் பாகங்களை அடையாளம் கண்டவர் சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டன என்று செய்தி வெளியிட்ட நாசாவின் அதிகாரபூர்வ இணைய தளம், அதில் இந்தப் பாகங்களை அடையாளம் கண்டவர் சண்முக சுப்ரமணியன் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

மேலே காணும் புகைப்படத்தில் S என்று குறிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் விக்ரம் தரையிறங்கு கலனின் உடைந்த பாகங்களை சண்முகசுந்தரம் அடையாளம் காட்டியுள்ளார்.

சண்முக சுப்ரமணியனின் ட்விட்டர் பதிவு:

இதில் உள்ள பச்சைப் புள்ளிகள் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் சிதறிய இடங்கள் (உறுதிப்படுத்தியவையோ அல்லது சாத்தியமுள்ளவயோ) என்றும், நீலப் புள்ளிகள் இந்த விண்கலன் மோதியதால் மண் கலைந்த இடங்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

விக்ரம் விண்கலனின் முக்கிய பாகம் உடைந்து மோதி விழுந்த இடத்தில் இருந்து 750 மீட்டர் தொலைவில் இருக்கிறது சண்முக சுப்ரமணியன் முதல் முதலில் அடையாளம் காட்டிய பாகம் என்றும் நாசா தமது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.

நாசா அந்த செய்தியில் மேலும் இப்படிக் கூறுகிறது:

இந்திய நேரப்படி செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் விண்கலன், நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கி.மீ. தொலைவில் சமவெளிப் பரப்பில் மென் தரையிறக்கம் செய்ய முயன்றபோது துரதிருஷ்டவசமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்த விண்கலத்துடன் தொடர்பை இழந்தது. ஆனால், இந்த அளவு மிக அருகாமையில் சென்றது மிக அற்புதமான சாதனை.

நாசாவின் 'லூனார் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர் கேமரா' என்கிற நிலவை சுற்றிவரும் கண்காணிப்பு கேமரா எடுத்த படக் கோவைகளை (மொசைக் இமேஜ்) இந்த கேமராவை நிர்வகிக்கும் குழுவினர் செப்டம்பர் 26-ம் தேதி வெளியிட்டனர். இந்த படங்கள் செப்டம்பர் 17-ம் தேதி பெறப்பட்டவையாகும்.

இந்த படக்கோவைகளை பலரும் தரவிரக்கம் செய்து விக்ரம் விண்கலன் விழுந்த இடம் தெரிகிறதா என்று ஆராய்ந்தனர்.

நிலவின் தரையில் உடைந்த பாகங்களை அடையாளம் கண்டு நிலவு கண்காணிப்பு கேமரா குழுவை சண்முக சுப்ரமணியன் தொடர்பு கொண்டார். அவர் துப்பு கொடுத்த பிறகு, விக்ரம் லேண்டர் விழுவதற்கு, முன்பும் பின்பும் எடுத்த படங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து அவரது கண்டுபிடிப்பை நாசா உறுதி செய்தது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
’வாசி’ வானதி: மலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: