மேட்டுப்பாளையம் விபத்து: சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் கைது

ஸ்டாலின் படத்தின் காப்புரிமை M.K.Stalin/Facebook

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்துக்கு காரணமான சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் என்பவரை கோவை மாவட்ட காவல்துறையால் நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதனை `தீண்டாமைச் சுவர்` என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "இது அந்த வட்டாரத்தில் `தீண்டாமைச் சுவர்` என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்தச் சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது." என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

பலியானவர்களுக்கு உகந்த இழப்பீடு தர வேண்டும் என போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்தும் கண்டித்துள்ள ஸ்டாலின் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள், 11 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

நொறுங்கி விழுந்த நான்கு வீடுகளும் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த, ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட எளிய வீடுகள் என்று கூறுகிறார் செய்தியாளர் ஹரிஹரன். வரிசையாக அமைந்திருந்த இந்த நான்கு வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டின் சுற்றுச்சுவர் சுமார் 25 அடி உயரத்துக்கு, கருங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கட்டும்போதே தற்போது பாதிக்கப்பட்ட வீட்டைச் சேர்ந்தவர்களும், அந்தப் பகுதி மக்களும் இவ்வளவு உயரமான சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அது இடிந்து விழலாம் என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அப்போது அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் சொல்வதாகக் கூறுகிறார் பிபிசி தமிழுக்காக செய்தி சேகரித்த செய்தியாளர் ஹரிஹரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்