"திருவள்ளுவருக்கு காவி பூசி, ஜாதி ரீதியாக ஆள் பிடிக்கிறது பாஜக" - ஆ.ராசா சிறப்பு பேட்டி

ஆ. ராசா பேட்டி படத்தின் காப்புரிமை Getty Images

திராவிட இயக்கங்கள் முன்னெடுத்து வந்த திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசியும், ஜாதி ரீதியாக தமிழ்நாட்டில் ஆள் பிடித்தும் கட்சியை வளர்க்க பாரதிய ஜனதா கட்சி முற்படுவதாக கூறியுள்ளார், இந்திய முன்னாள் அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசா. பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலின் முழு விவரம்.

கேள்வி: நாடாளுமன்ற மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி பிரக்யா தாக்கூர், கோட்சேவை தேச பக்தர் என அழைப்பது போன்ற கருத்துகளை பதிவு செய்தது சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு முன்பு அவையில் நீங்கள் பேசியபோதே குறுக்கிட்டுப் பேச நேர்ந்ததாக பிரக்யா கூறுகிறார். நீங்கள் என்ன பேச முற்பட்டீர்கள்? எதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது?

பதில்: இந்தியாவில் பிரதமர், முன்னாள் பிரதமர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படை தொடர்பாக ஒரு சட்டம் இருக்கிறது. அதில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படிதான், பிரதமர், முன்னாள் பிரதமருக்கும் தற்போது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மற்ற தலைவர்களுக்கு கறுப்பு பூனைப்படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழங்கப்படுகின்றன. அவை, பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படை வழங்கப்பட்டது. ஆனால், திடீரென பிரதமர் நீங்கலாக மற்றவர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படை தேவையில்லை. வேறு பாதுகாப்பு வழங்கலாம் என்பதற்கான திருத்தத்தைத்தான் மத்திய அரசு கொண்டு வந்தது.

அதில் முக்கியமானதாக, தலைவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலுக்கான மதிப்பீடு நடவடிக்கை நீக்கப்பட்டிருந்தது. அந்த மசோதா மீது அனைவரும் பேசியதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் நான் பேசினேன். ஆபத்தை மதிப்பிடக்கூடிய முறையை ஏன் நீக்கினீர்கள்? என்று நான் கேள்வி எழுப்பி வரலாற்றில் நடந்த இரு சம்பவங்களை மேற்கோள்காட்டி பேசினேன்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து தற்போதுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. அதில் 350 பேரை கொன்று குவித்த மோசமான தளபதி மைக்கேல் டயர். அந்த சம்பவத்தை இளம் சிறுவனமாக இருந்த உத்தம் சிங் என்ற சிறுவன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து, வஞ்சம் தீர்ப்பதற்காக தேச பக்தியோடு லண்டனில் படிப்பதற்காக சென்றபோது, மைக்கேல் டயரை சுட்டுக் கொள்கிறார். உத்தம் சிங் பார்வையில் அது தேசபக்தி. ஆனால், லண்டனில் பணியில் இருந்து ஓய்வு பெற்று வாழ்ந்து வந்த மைக்கேல் டயர் பார்வையில், அவரது உயிருக்கு இருந்த ஆபத்தை மதிப்பிட முடியாமல் போனதன் விளைவால் அவரது உயிர் பறிபோக நேர்ந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

எது எப்படியிருந்தாலும், நடந்த சம்பவம் ஒரு கொலைதான் என்றவாறு மக்களவையில் பேசினேன். மேலும் அது நேர்மறையான சம்பவம் என்று கூறிய நான், நேர்மறையான சம்பவத்தையும் கூறுகிறேன் என்று தெரிவித்து காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி பேசினேன். நீதிமன்றத்தில் கோட்சே பேசியதை அவையில் மேற்கோள்காட்டியவாறு, "எனக்கும் காந்திக்கும் தனிப்பட்ட முறையில் பகை அல்ல. ஆனால், காந்தி கொண்டிருக்கிற அரசியல் தத்துவம் இஸ்லாமியர்களுக்கு சாதகமாகவும் இந்துத்துவாவுக்கு எதிராகவும் உள்ளது.

எனவே அவரை இனிமேல் விட்டு வைக்கக் கூடாது என்று கருதி நான்தான் சுட்டேன்" என்று கோட்சே பேசியதை குறிப்பிட்டு அவையில் பதிவு செய்தேன். ஆனால், முன்னர் கூறிய டயர் கொலை சம்பவத்திலும், காந்தி கொலை சம்பவத்திலும் அவர்களுக்கான ஆபத்தை மதிப்பிடாத நிலையில், பல வருடங்களுக்கு பிறகு அவை நடந்துள்ளன என்று பேசினேன். அதன்படி ஒருவரை கொலை செய்ய ஒரு நபர் முடிவு செய்து விட்டால், அவர் அதறஅகாக 21 ஆண்டுகள் கூட காத்திருந்து பிறகு அதை செய்யலாம் என்று தெரிவித்தேன்.

காந்தி விவகாரத்தில், ஆபத்து என்பது தனி மனிதரோடு முடியவில்லை. அவர்களுக்கு பின்னால் இருக்கிற, அவர்கள் கடைப்பிடித்த கொள்கை, தத்துவம், நெறி ஆகியவற்றுடன் தொடரலாமே.

இன்றைக்கு காங்கிரஸ் ஒரு கொள்கையை கொண்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஒரு கொள்கையை கொண்டுள்ளது. இரண்டுக்கும் இடையே மோதல் வரும்போது யாரோ ஒரு தரப்புக்கு ஆபத்து நேரலாம்.

ஆர்எஸ்எஸ், சங் பரிவார் ஆதரவுடன் கூடிய ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிரான தத்துவத்தை கொண்டுள்ள தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். அவருக்கு கொள்கை ரீதியிலான ஆபத்து இருக்கலாம் அல்லவா? அவரது கணவர் ராஜீவ் காந்தி இறந்து விட்டார். அதனால் அவருடன் ஆபத்து நீங்கி விட்டது. அந்த ஆபத்து சோனியாவுக்கும் ஏற்படும் என கருதலாகாது என சொல்ல முடியாது.

ஏனென்றால், அச்சுறுத்தல் மதிப்பீடு என்ற வார்த்தை, தற்போதைய திருத்த மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து இருக்கிறதா இல்லையை என்பதை மதிப்பிடாமலேயே அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் பாதுகாப்புப் படை திரும்பப்பெறப்பட்டுள்ளது. அது நியாயமானது அல்ல என்று நான் மக்களவையில் பேசினேன்.

படத்தின் காப்புரிமை Getty Images

நான் பேசிக் கொண்டிருந்தபோது, கோட்சே என நான் கூறியபோது, பின்னால் இருந்த ஒரு பெண் எம்.பி, அவர் ஒரு தேச பக்தர் என பொருள்படும் வார்த்தையை ஹிந்தி மொழியில் பேசினார். மொழியாக்க வசதி மூலம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தேசபக்தர் என்பதை அறிந்தேன். அதே நொடி, காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டார்கள். அதற்கு மத்தியில் நான் பேசி முடித்தேன். மறுநாள் காலையிலும் இதே விவகாரத்தை காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பின. பிறகுதான் அந்த பெண் எம்.பி மன்னிப்பு கேட்டார்.

கேள்வி: ஆனால், வி.பி. சிங் இந்திய பிரதமராக இருந்தபோதும் கூட ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட இதே சிறப்பு பாதுகாப்புப்படை திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே இது புதிய நடவடிக்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் (நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு), சோனியா காந்தி குடும்பத்தினருக்கு சிறப்புப் பாதுகாப்புப் படை திரும்பப் பெறப்பட்டுள்ளதை பற்றி பேசும்போது, விடுதலைப்புலிகளால் தொடர்ந்து ஆபத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ள அறிவிக்கையை மேற்கோள்காட்டி பேசினார். தமிழகத்தில் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கட்சிகளின் கோரிக்கைக்கு, உங்கள் கட்சியின் மூத்த தலைவர் பதிவு செய்த கருத்து பாதகமாக அமையாதா?

பதில்: அது ஏதோ பழைய சம்பவங்களை வைத்து அவர் பேசியிருக்கலாம். யார் அப்படி பேசினார்கள் என்பது பற்றி எனக்கு தெரியவல்லை. ஆனால், ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் "உங்களுக்கு நக்சல் தீவிரவாதத்தால் பாதிப்பு உள்ளது" என்று மத்திய அரசே கடிதங்கள் எழுதியிருப்பதாக அறிகிறோம்.

மேலும், "வயநாடுக்கு செல்லும்போது ஜாக்கிரதையாக செல்லுங்கள்" என்றெல்லாம் அதில் கூறப்பட்டுள்ளது என்ற தகவலை காங்கிரஸ் கட்சி நண்பர்களே நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ராஜிவ் காந்தியை இவர்கள்தான் கொலை செய்தார்கள் என்பதற்காக, அதே நபர்களால் சோனியா காந்திக்கும் அச்சுறுத்தல் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. அந்த படுகொலையை அவர்கள்தான் (விடுதலைப்புலிகள்) செய்தார்களா என்பதே சரியாக தெரியவில்லை. அந்த இயக்கமே இப்போது இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அவர்கள் மீது பழிசுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ராஜிவ் சம்பவத்துக்கு பிறகு, சோனியா குடும்பத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏராளமாக இருக்கிறது என்பதுதான் எனது வாதம்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏனென்றால் அவர் சித்தாந்தத்தை தூக்கி நிறுத்துகிறார். மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டும், மதசார்பின்மை தேவை என்பதை வலியுறத்தக் கூடிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதற்கு நேர் எதிராக உள்ள கட்சி, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி.

காந்தியை கொன்றது, ஒரு இந்து மத வெறியனான கோட்சே என்று சொல்கிறோமோ, அதேபோல, மீண்டும் இந்து மதம் மீது வெறியோடு இருக்கும் ஒருவர் சோனியா காந்தியையோ அவரது குடும்பத்தாரையோ கொல்ல மாட்டார் என யாரால் உறுதியாக சொல்ல முடியும்? ஒரு பெரும் தலைவருக்கு பழைய சம்பவங்களை வைத்தே அச்சுறுத்தல் அளவை பார்ப்பீர்களா? அவருக்கு புதிதாக அச்சுறுத்தல் வராதா? இவை தான் எனது கேள்விகள்.

கேள்வி: இந்திய திரை உலக ஆளுமைகளாக கருதப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்துக்கு முற்பட்டிருக்கிறார்கள். ரஜினி அவ்வப்போது தோன்றி, அரசியல் புகுவேன் என்கிறார். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் களத்திலும் வேட்பாளர்களையும் நிறுத்தியிருக்கிறார். இருவருடைய அரசியல் களம் புகுதலை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இருவரிடமே எனக்கு புரியாத புதிராக ஒரு விஷயம் உள்ளது. ஒரு அரசியல் கட்சியை முன்னெடுக்கும்போது, அந்த கட்சியின் தத்துவம் என்ன? நெறி என்ன? சித்தாந்தம் என்ன? என்பதை இருவரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. எம்ஜிஆரை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தார். அதிமுகவை அவர் தோற்றுவித்தபோது, அதன் முழு கொள்கையும், திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து கடன் வாங்கப்பட்டதாகவே அது இருந்தது.

தமிழ் மொழி, திராவிட இனம், திராவிட மொழி, தமிழர் நலன், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பனவாக அவரது கொள்கைகள் இருந்தன. ஆக, திமுகவுக்கு இணையான ஒரு கட்சியாக நான் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறேன் என்று அவர் கூறியபோது, அவரது திரையுலக கவர்ச்சி அதற்கு பயன் அளித்தது. அவருக்கு என இருந்த சினிமா புகழ் அவருக்கு உதவியாக இருந்தது. "நானும் அண்ணா, பெரியார் வழிதான்" என்று அவர் முழங்கினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், கமலுக்கும் ரஜினிக்கும் புலப்படாத பிரச்னைகள் உள்ளன. இப்போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சித்தாந்தம் உள்ளது. ஒரே நாடு, ஒரே கலாசாரம், இந்துத்துவா என அந்த கட்சி கோரி வருகிறது.

திமுகவை எடுத்துக் கொண்டால், "தமிழ் மொழி, திராவிட இனம், அந்த இனம் மற்றொரு இனத்துக்கு கட்டுப்பட்டது அல்ல" என்றெல்லாம் நாங்கள் சொல்கிறோம். அதேபோல இடதுசாரி கட்சிகளுக்கு பொதுவுடைமை சித்தாந்தம் உள்ளது. உலக அளவில் அரசியல் கட்சிக்கு ஒரு கொள்கையும் நோக்கமும் அவசியம்.

பாட்டாளி மக்கள் கட்சி கூட, பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதாரம், கல்வியில் இடஒதுக்கீடு பெற்றுத்தருவோம், அவர்களின் நலன் காப்போம் என்று கூறுகிறது. அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், எதுவும் இல்லாமல், என்ன செய்யப்போகிறோம் என்பதே அறியாமல், தாங்கள் சினிமாவில் நடித்தோம் என்று கூறி அந்த புகழை வைத்துக் கொண்டு மட்டும் அரசியலுக்கு வருவது என்பது ஏற்புடையதுதானா என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்றும் கேள்வி எழுகிறது.

என்னை பொருத்தவரை, தமிழகத்தில் எத்தனையோ இயக்கங்கள், தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பதற்கு ஒறு பூர்வாங்க அடையாளத்துடன் சிறை சென்றுள்ளன. திமுகவில் மு.க.ஸ்டாலின் பொதுவாழ்வுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார், சிறை சென்றுள்ளார், பொதுமக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

ஆனால், ரஜினிக்கும், கமலுக்கும் கடந்த காலங்களில் சமூக அக்கறை இருந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் மன்றங்கள் வைத்துக் கொள்வது என்பது வேறு. சமூகத்தில் நடக்கக்கூடிய விஷயங்களுக்காக கடந்த காலங்களில் அவர்கள் குறைந்தபட்சம் கருத்து கூட சொன்னது கிடையாது.

படத்தின் காப்புரிமை Getty Images

திடீரென இன்று வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். எப்படி வெற்றிடம் வரும்? அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு வெற்றிடம் வந்தது. அதை சசிகலா, எடப்பாடி பழனிசாமி மூலம் நிரப்பினார். சசிகலா சிறைக்கு சென்று விட்டார். அந்த கட்சித் தலைமையின் வெற்றிடத்தை அரசியல் ரீதியாக இன்றி, அரசு ரீதியாக எடப்பாடி பழனிசாமி நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவில்தான், 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் அந்த வெற்றிடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைவராக உருவானவர் கிடையாது. அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். பல முறை எம்எல்ஏ ஆக இருந்தவர் என்பதை தவிர அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. முழுக்க, முழுக்க, சசிகலாவால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

சசிகலாவிடம் எப்படி போய் அவர் காலைத் தொட்டு கும்பிட்டார் என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அப்படியெல்லாம் காலை தொட்டுக் கும்பிட்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததால் அந்த கட்சியில் வெற்றிடம் உள்ளது என்றால் அதில் ஒரு நியாயம் உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், திமுகவில் அப்படி கிடையாது. திமுகவில் சிறு வயதில் இருந்தே தந்தையுடனேயே அரசியலில் இருந்து, மாவட்ட பிரதிநிதி, இளைஞர் அணி செயலாளர், துணை பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என கட்சியிலும், ஆட்சியில் பார்த்தால், மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்று நியாயமான, அடிப்படை வாதங்களோடு, ஒரு பரிணாம வளர்ச்சியை திமுக தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார்.

திமுகவில் அவரது தலைமையை ஏற்க மறுத்து, அவருக்கு தகுதியில்லை என்று யாராவது கூறுகிறார்களா? மிகப்பெரிய நாடாளுமன்ற தேர்தலை அவரது தலைமையில் சந்தித்து திமுக வெற்றி பெற்றுள்ளது. அதுவே அவரது தலைமை தத்துவத்தை காட்டவில்லையா? அவரது தலைமையில் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால், இங்கே எங்கே வெற்றிடம் இருக்கிறது.

கேள்வி: திமுகவில் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் கட்சித் தலைமைக்கு படிப்படியாக கொண்டு வரப்பட்டார். தற்போது ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கும், அதே பாணியில் தலைமை பதவிக்கு தயார்படுத்தவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவும் ஒரு சர்ச்சை விவாதிக்கப்படுகிறதே. அதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இதை குடும்ப அரசியல் என்று கூட யாரோ வேண்டுமென்றே பேசுவார்கள். நான் ஒன்றே கேட்க விரும்புகிறேன். கலைஞருக்கு பிறந்த பிள்ளை, அதிமுகவுக்கோ காங்கிரஸுக்கோ செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? எனது மகனோ, மகளோ எனது கொள்கையை தாங்கி நிற்க வேண்டும் என நான் விரும்புவேனே தவிர, மற்றொரு கட்சிக்கு அனுப்புவேனா? அதுபோலவே, ஸ்டாலினுடைய மகன், ஒரு நடிகர். இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை அவருக்கு வழங்கியிருக்கிறோம்.

அவர் பொறுப்பேற்றவுடனேயே மிகப்பெரிய பயிற்சி முகாமை விருதுநகரில் நடத்தினார். இளைஞர்கள், திராவிட சிந்தனையில் இருந்து விலகுகிறார்களா? அல்லது திராவிட சிந்தனை மீது அக்கறை காட்டாத சூழல் உருவாகிறதா என்ற ஆழ்ந்த கவலை, உதயநிதிக்கு வந்த காரணத்தால்தான், மிகப்பெரிய பயிற்சி முகாமை அவரே நடத்தியிருக்கிறார். இது கொள்கை வழியாக தொடரும் உறவு. யார் மீதும் திணிக்கப்படவில்லை.

மறைந்த தலைவர் கருணாநிதி நினைத்திருந்தால், ஸ்டாலினை எப்போதோ மிகப்பெரிய இடத்தில் கட்சியின் பொதுச்செயலாளராகவோ, பொருளாளராகவோ அமர வைத்திருக்கலாம். அதை இயற்கையின் பரிணாமத்துக்கு அவர் விட்டு விட்டார். அதன்படியே ஸ்டாலின் உருவெடுத்தார். அதுபோல, உதயநிதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE

அவர் திறம்பட நடந்து கொண்டால் மட்டுமே, தனது தியாகத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினால் மட்டுமே, நாளடைவில் அவருக்கு உயர்வு கிடைக்கும். எதுவுமே இல்லாமல் திமுகவில் உயர் பொறுப்பு கிடைத்து விடாது. அதற்காக, திமுகவில் குடும்ப அரசியல் என வேண்டுமென்றே திணிக்கிறார்கள், வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்ற வாதமெல்லாம் பொய்.

கேள்வி: 1950களில் தொடங்கி புத்தாயிரத்தைக் கடந்த 10 ஆண்டுகள்வரை தமிழகத்தில் திராவிட சிந்தனை கடுமையான தாக்கத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியதை, வரலாறு பார்த்துள்ளது. ஆனால், அதன் பிறகு, திராவிடத்தால் வளர்ச்சியை தொலைத்தோம் போன்ற பிரசாரங்கள் மாநிலத்தில் தீவிரமாகியுள்ளன. எதிர்கால தலைமுறைக்கு திராவிட சிந்தனையை கொண்டு செல்ல உங்கள் கட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது?

பதில்: உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதுகூட அதனால்தான். திராவிட இயக்க சிந்தனையையும், சித்தாந்தத்தையும் எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.

திராவிட தத்துவம், சித்தாந்தம் என்பது, மொழி மற்றும் இன உணர்ச்சி, ஜாதியற்ற ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம், பெண் விடுதலை - இவற்றை எல்லாம் முன்னெடுத்துச் செல்வது. அடிப்படையில் பிறப்பால் எல்லோரும் சமத்துவம், நமது மொழியான தமிழுக்கு செம்மொழி அடையாளம் உள்ளது. அதை தூக்கிப் பிடிக்க வேண்டும். திராவிட இனத்துக்கான கலாசாரம், பண்பாடு ஆரிய கலாசாரத்தில் இருந்த மாறுபட்டது.

நாம் மொழியால் பிரிந்திருந்தாலும் இனத்தால் திராவிடர்கள்தான். ஆரிய பண்பாட்டுக்கும் திராவிட பண்பாட்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்பதை பூர்வமாங்கமாக உணர்ந்து கொண்டு செயல்படுவதுதான் திராவிட இயக்கத்தின் பணியும் பாணியும். சில தொய்வுகள் ஏற்பட்டதால்தான் அதை திறம்பட செயலாற்றுவதற்கான பணியை மிகுந்த எதிர்பார்ப்புடன் உதயநிதியிடம் வழங்கியிருக்கிறோம். நீங்கள் குறிப்பிடுவதை போல, திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்வதற்கு சிலர் இருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE

திராவிடமா, தேசியமா, திராவிட தேசியமா என்றும் சிலர் விதண்டாவாதமாக பேசுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மட்டுமல்ல, கடந்த நூறாண்டுகால வரலாற்றில், எல்லா மாற்றங்களும் திராவிட இயக்க சிந்தாந்தத்தால்தான் வந்தன. அமெரிக்காவில் கூட பெண்களுக்கு 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகே ஓட்டுரிமை வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே, பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைக்க காரணம், திராவிட இயக்கம் முன்னெடுத்த சிந்தனை. சொத்துரிமை, ஜாதிகளற்ற சமுதாயம் போன்றவற்றையம் அதுவே உருவாக்க காரணமானது.

ஒரு காலத்தில் பஞ்சமர்களுக்கு பேருந்துகளில் இடமில்லை என பயணச்சீட்டிலேயே இருக்கும். அந்த நிலையை மாற்றியது அன்றைக்கு ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி அரசு. என்றைக்கு திராவிட இயக்கம் தோன்றியதோ, நீதிக்கட்சி வந்ததோ, சுயமரியாதை இயக்கம் வந்ததோ, அன்றில் இருந்தே, தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு பொருளாதார, சமூக உள்பட எல்லா மாற்றத்தையும் செய்தது திராவிட இயக்கங்கள்தான்.

கேள்வி: அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகு, இஸ்லாமியர் சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் அதை எதிர்த்தும் அதிருப்தியும் அடைந்தவர்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அதே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்கெனவே மறுஆய்வு செய்து வழங்கிய தீர்ப்பை ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது. இரு வேறு சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த இரு வேறு வழக்குகளில் கையாளப்பட்ட அணுகுமுறையை திமுக எப்படி பார்க்கிறது?

பதில்: அயோத்தி பிரச்னையில், திமுக தலைவர் ஸ்டாலின் உச்ச நீதிமன்றம் கடைசியாக வழங்கிய தீர்ப்பை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சட்ட வல்லமை படைத்த வி.ஆர். கிருஷ்ணய்யர் மிக அழகாக கூறுவார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்பு இறுதியானது. அதற்காக அது சரியானதா அல்லது தவறே இல்லை என்றோ கருதலாகாது என அவரே கூறியுள்ளார்.

எனவே, அதற்குள் நாம் செல்லத்தேவையில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது என்பதால், அதற்கு மேல் தீர்ப்பை எடுத்துச்செல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மை. அந்த அடிப்படையில் அயோத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சபரிமலையை பொருத்தவரை, மறுஆய்வு செய்யப்பட்ட ஒரு மனுவை மீண்டும் ஏற்று, அதிக நீதிபதிகள் அமர்வுக்கு ஏன் அனுப்பினார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. திமுகவின் நிலைப்பாட்டை கேட்டால், அந்த கோயலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

படத்தின் காப்புரிமை Getty Images

கேள்வி: இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் விவகாரத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், சிறுபான்மை அமைப்புகள் அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து வலுவான கருத்தை பதிவு செய்யாத வேளையில், திடீரென திமுக அந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தது, பிரசார பொதுக்கூட்டத்தை முன்னெடுத்தது. எங்கோ உள்ள காஷ்மீர் விவகாரத்துக்கு, மாநில அளவில் உள்ள திமுக இவ்வளவு அவசரத்தை காட்ட வேண்டிய அவசியம் ஏன்?

பதில்: டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மட்டுமின்றி எல்லா கட்சியினரும்தானே வந்திருந்தார்கள். திமுக மட்டும் அதை நடத்தியதாக கூற முடியாது,. அதை முன்னின்று கொண்டு சென்றது திமுக. எப்போதும், மாநில சுயாட்சி, மாநில உரிமை என வரும்போது, அவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவும் கலைஞரும் எங்களுக்கு கற்றுத்தந்த பாடம்.

அன்றைக்கு சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல் சட்டத்தில் வல்லபபாய் படேல், நேரு போன்ற தலைவர்கள், ஹரி சிங் என்ற மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி எடுத்த முடிவு தனிக்கதை.

ஆனால், நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எம்.சி. சாக்லா என்ற மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஐ.நா சபையில் 1950களில் பங்கேற்றார். அப்போது நேரு சார்பில் பேசிய அவர், "காஷ்மீர் மக்களுடைய மன இசைவுக்கு எதிராக நடந்து கொள்ள மாட்டோம். அவர்கள் பிரிந்து போக விரும்பினால் கூட ஓட்டெடுப்பு நடத்தி அதன்படி செயல்படுவோம்" என உறுதிமொழி கொடுத்தார்.

"நேருவின் வார்த்தையில், உலக சமூகத்துக்கு ஐ.நா சபை வாயிலாக நாங்கள் கொடுத்த வாக்குறுதியை எந்த காலத்திலும் மீற மாட்டோம்" என்று என்.சி. சாக்லா மூலமாக அந்த வரிகள் பதிவு செய்யப்பட்டன. நாடாளுமன்றத்திலும் அது பற்றி நேரு பேசியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆகவே, 370ஆவது பிரிவை நீக்கும் முன்பு, காஷ்மீர் மக்களின் விருப்பம் என்ன என்று அறிந்திருக்க வேண்டும். அதை கேட்காமலேயே அதை நீக்கியது தவறு என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒருவேளை 370ஆவது பிரிவை நீக்குவதற்கு செய்வதற்கு முன்னால், சட்டமன்றத்திலேயே அதற்கு வகை செய்யும் தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், சட்டமன்றமே காஷ்மீரில் இல்லை.

இதை ஒரு தந்திரமான, அசிங்கமான செயலாக பாரதிய ஜனதா கட்சி அரங்கேற்றியிருக்கிறது. காஷ்மீரில் சட்டமன்றம் இல்லாத வேளையில், அந்த காலகட்டத்தில் அந்த மன்றம் ஆற்ற வேண்டிய பணிகளை எல்லாம் நாடாளுமன்றம்தான் கவனித்து வருகிறது. எனவே, நாடாளுமன்றத்தையே சட்டமன்றமாக கருதி அந்த மசோதாவை நாடாளுமன்றத்திலேயே முன்வைக்கிறோம் என ஆளும் கட்சியினர் கூறுகிறார்கள். அதை எப்படி ஏற்க முடியும்?

ஏனென்றால் நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்காக இரண்டு, மூன்று உறுப்பினர்கள்தான் இருப்பார்கள். அதுவே, சட்டமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தால், எல்லா பகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்களும் அதன் மீதான விவாதத்தில் பங்கேற்று ஒரு முடிவை எடுத்திருப்பார்கள்.

மக்களின் விருப்பத்தை எதிரொலிக்கக்கூடிய அமைப்புதான் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் அது முழுமையாக எதிரொலிக்காது. சட்டமன்றம் இல்லாதபோது, ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட் மற்றும் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம். அரசியலமைப்பும் அதைத்தான் கூறுகிறது. அது சபை நடவடிக்கைகளுக்கானது. ஆனால், மாநிலம் பிரிக்கப்படுவது பற்றிய மக்களின் கருத்தை அறிய வேண்டும் என விரும்பினால், அதற்கு அந்த மாநில சட்டமன்றம்தான் கூட்டப்பட்டு விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆக, சட்டப்படி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்தது தவறு. மற்றொன்று, நேருவும், வல்லபபாய் படேலும் ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதி, மத்திய அரசின் செயல்பாடு மூலம் மீறப்பட்டிருக்கிறது. அந்த களங்கத்துக்கு இந்தியா ஆளாகியிருக்கிறது. நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தபோது, அதற்காக மிகப்பெரிய எண்ணிக்கையில் படையினரை காஷ்மீருக்கு மத்திய அரசு அனுப்பியது.

அதேபோல, அங்கு படையினரை அனுப்பி, ஏன் சட்டமன்ற தேர்தலை அப்போதே நடத்த முற்படவில்லை? அப்படி செய்திருந்தால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நியாயமானவர்கள், வெளிப்படையானவர்கள், உள்நோக்கமில்லாதவர்கள் என்று நாங்கள் கருதுவோம். ஆனால், அவை ஏதுமின்றி மத்திய அரசு நிறைவேற்றிய காஷ்மீர் தொடர்புடைய சட்டம் தவறானது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.

கேள்வி: நாடாளுமன்ற அலுவல் இல்லாதபோது, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும்போது அதே எதிர்ப்புடனும், வேகத்துடனும் செயல்படவில்லையே?

பதில்: நாங்கள் தினமும் அதை எழுப்புமாறு வலியுறுத்த முயல்கிறோம். சமீபத்திய மக்களவை அலுவல் ஆய்வுக்குழு (பிஏசி) கூட்டத்தில் கூட திமுக சார்பில் அதன் உறுப்பினர் என்ற முறையில் காஷ்மீர் 370-ஆவது பிரிவு நீக்கம் தொடர்பான விவகாரத்தை எழுப்ப அனுமதி கோரினேன். ஆனால், அதை அலுவல் விவாத பட்டியலில் அந்த விவகாரத்தை சேர்க்காமல் இருக்கிறார்கள். அதை அனுமதிக்கும்போது நிச்சமயாக எழுப்போம்.

கேள்வி: மகராஷ்டிரா அரசியல் திருப்பங்களை நாடு சமீபத்தில் சந்தித்த வேளையில், சிவசேனை தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தபோதும் அதன் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கூட்டத்தில், அம்மாநில முதல்வரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், உங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் அதில் கலந்து கொண்டு புதிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து கூறினார். பொதுவாகவே வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான நிலையை கொண்ட சிவசேனை கட்சியினர், தமிழர்களை கூட பல முறை தாக்கியிருக்கிறார்கள். அத்தகைய ஒரு கட்சியின் தலைமையில் அமையும் ஆட்சிக்கு உங்கள் கட்சித் தலைவருக்கு நேரில் வாழ்த்து கூறி வந்துள்ள செயலை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

பதில்: அப்படியெல்லாம் ஒரு காலத்தில் பால் தாக்கரேவும் அவரது கட்சியும் இருந்தது உண்மைதான். இப்போது அத்தகைய சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. 1950,60,70களில் எல்லாம்தான் அப்படி இருந்தன. என்றைக்கு இவர்கள் அதிகாரத்துக்கு வந்தார்களோ, எனக்கு தெரிந்தவரையில், அத்தகைய கோட்பாட்டை எல்லாம் கைவிட்டு விட்டு, இன்றைக்கு மராட்டிய மாநிலத்தில் வாழும் மராட்டியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் தற்போதை சிவசேனை கட்சியினருக்கு இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்றைக்கு ஆட்சியில் அவர்கள் இருக்கும் காரணத்தாலேயே, சிவசேனை தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவா கொள்கை திமுகவுக்கு ஏற்புடையது என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பிஜேபி உடைய இந்துத்துவா கொள்கை மற்றும் குறுக்கு வழியில் போய் கர்நாடகாவிலும் கோவாவிலும் போய் ஆட்சி அமைத்து, மிருகத்தனமான எண்ணிக்கை பலத்தை பெறலாம் என்ற போக்குகளை முறியடிக்கக் கூடிய சக்திகளாக தேசிவாத காங்கிரஸ் சிவசேனை, காங்கிரஸ் இணைந்துள்ளன. அவை அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஒரு நிலையை எடுத்துள்ளன. அதை தொடக்கி வைப்பதில் தவறில்லை. இதில் சிவசேனையின் கொள்கை மற்றும் திமுகவின் கொள்கை ஒன்றா என பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பிஜேபி என்ற ஒரு பொது எதிரியை, எதிர்காலத்தில் பிஜேபி அல்லாத ஒரு அரசு மத்தியில் வர வேண்டும் என திமுக விரும்புகிற காரணத்தால், அதே உணர்வில் இருக்கும் சிவசேனையை அரசியல் ரீதியாக திமுக ஆதரிக்கிறதே தவிர அதன் சமூக கொள்கைகளுக்காக திமுக ஆதரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

கே: மேற்கு வங்கம், மகராஷ்டிரா என தொடர்ச்சியாக மாநில முதல்வர்களின் பதவியேற்பு நிகழ்வுகளுக்கு சென்று அந்த மாநில முதல்வர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கமாக்கி வருகிறாரே. முன்பு கருணாநிதி காலத்தில் இதேபோல மாநில அரசுகளை ஒருங்கிணைக்க ஒரு முயற்சியை அவர் எடுத்தார். ஒருவேளை அதுபோல, தனது அடையாளத்தை தேசிய அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற சந்திப்புகளை அவர் வாய்ப்பாகக் கருதுகிறாரா?

பதில்: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, பாரதிய ஜனதா கட்சி அல்லாத, இதர கட்சிகள், மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கவும், அவற்றின் தலைமைகளை ஒருங்கிணைக்கவும், கலந்து பேசவும், அவர்களின் கூட்டத்தை முன்னெடுக்கும் தலைமையும் ஆற்றலும் வலிமையும் மு.க.ஸ்டாலின் மட்டுமே இருப்பார். ஏனென்றால், எல்லா தலைவர்களுக்கும் தான் பிரதமராக ஒருவேளை வரலாமோ என்ற எண்ணம் இருக்கும். அது மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர், நவீன் பட்நாயக் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாம் மத்திய அரசு மீது ஒரு கண் உள்ளது.

ஆனால், ஸ்டாலினுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அவர் மத்தியில் அமைச்சராக வேண்டும் என்றோ, பிரதமராக வேண்டும் என்றோ அவருக்கு எண்ணம் இல்லை. அவரது ஒரே நோக்கம், இந்தியாவுக்கு காவி நிறம் அடிப்பது நிறுத்தப்பட வேண்டும். மத்தியில் மதசார்பற்ற ஆட்சி வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

எனவே, எதிர்பார்ப்பு எங்கே இல்லையோ அவரது குரல் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கையான உணர்ச்சி. எனவே எதிர்பார்ப்பு இல்லாத ஒரு தலைவராக மு.க.ஸ்டாலின், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மாநில தலைவர்களையும் சந்தித்து, மிகப்பெரிய கூட்டணியை உருவாக்குவார். ஆட்சியை மாற்றுவதற்கான முழு முதல் முயற்சிக்கு அவரே தலைமையேற்பார். ஆனால், மத்திய அரசுக்கு எப்போதும் அவர் வரமாட்டார்.

கேள்வி:தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெறவில்லையென்றாலும் கூட, மாநிலத்தில் அந்த கட்சி எந்த விவகாரத்தை எழுப்பினாலும், அது உடனடியாக சர்ச்சையாகிறது அல்லது மிகப்பெரிய விவாதத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்துகிறது. உதாரணத்துக்கு திருவள்ளுவர் விவகாரம், திமுக தொடர்புடைய முரசொலியின் நிலம் அமைந்த இடம், பஞ்சமி நிலம் என அக்கட்சி எழுப்பிய சர்ச்சையை கூறலாம். அதை அந்த கட்சிக்கான, மக்களை ஈர்க்கும் வளர்ச்சியாக பார்க்கலாமா?

பதில் : முதலில் நம்மை எதிர்ப்பார்கள். திரித்துப் பார்ப்பார்கள். இயலவில்லை என்றால் சாப்பிட்டு செரித்து விடுவார்கள் என்று பெரியார் தெளிவாகக் கூறியுள்ளார். திருவள்ளுவரை எதிர்த்தார்கள். "சதுர்வர்ணம் மாயா சிருஷ்டம்."| அதாவது நான்கு வருணத்தையும் நானே படைத்தேன் என்று பகவத் கீதை சொல்கிறது. அது அவர்களுடைய நூல்.

ஆனால்,"நான்கு வருணம் கிடையாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என கூறுவது திருவள்ளுவர். எனவே கருத்தியல் ரீதியில் இரு தரப்பும் எதிரணியில் இருக்கக் கூடியவர்கள். அப்போது அவர்கள் வள்ளுவரை எதிர்த்தார்கள். அவர்களை திராவிட இயக்கம் தூக்குப்பிடித்தது. வள்ளுவரை அவர்களால் வெல்ல முடியவில்லை.

கிராமந்தோறும் திருக்குறளை முன்னெடுத்து, பேருந்துகளில் குறளை எழுத வைத்து திருக்குறளை பரப்பியது திராவிட இயக்கங்கள். அதுவே நமது நூல், அதுதான் உலக பொதுமறை என்று நாங்கள் செய்தோம். அதை முறியடிக்க 1950, 60களில் அவர்கள் முயன்றார்கள். ஆனால், இயலவில்லை. பிறகு, பகவத் கீதையும் திருக்குறளும் ஒன்றுதான் என்று கூறித் திரித்துப் பார்த்தார்கள். அதுவும் முடியவில்லை. இப்போது திருவள்ளுவரை செறிக்கும் முயற்சி நடக்கிறது. அவருக்கு பட்டையை பூசி, காவி நிறம் தரிக்கச் செய்து அவர் எங்களுக்கும் வேண்டியவர்தான் என்று கூறி, செரிக்கப்பார்க்கிறார்கள். அதை தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

கே: அப்படியென்றால் தமிழகத்தில் பாஜகவுக்கு எழுச்சியே இல்லை என கூற வருகிறீர்களா?

பதில்: இரண்டு முறை மத்தியில் ஆட்சியை அடுத்தடுத்து பிடித்து விட்டதால், ஒரு வித சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு மிருக பலத்தோடு போன முறையும் இம்முறையும் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். தமிழகத்தில் பலருக்கு பதவி கொடுத்தார்கள். ஒருவருக்கு ஆளுநர் பதவியை கூட கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு சமூகமாக பார்த்து ஆள் பிடிக்கிறார்கள்.

உதாரணமாக, தேவேந்திர குல வேளாளர் சமூகமா, அங்கு என்ன செய்யலாம்? நாடார், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து சமூகத்திலும் என்ன செய்யலாம் என பார்த்துப் பார்த்து ஆள் பிடிக்கும் வேலையைத்தான் அவர்கள் தமிழ்நாட்டில் செய்கிறார்கள். சித்தாந்த ரீதியில், தமிழ்நாடு திராவிட இயக்க உணர்வுள்ள பூமி. அங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு இடமிருக்கும் என நான் நம்பவில்லை.

கே: மத்தியில் ஆளும் அரசுகள் எதுவாக இருந்தாலும், அவை மத்திய புலனாய்வுத்துறையை தங்களுக்கு வசதியாக பயன்படுத்திக் கொள்ளும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. கடந்த முறை, ஆட்சியில் அங்கம்வகித்தபோதே, உங்களைக் கூட 2ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்தார்கள். நீண்ட நெடிய சட்டப்போராட்டத்துக்கு பிறகே அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டீர்கள். தற்போது எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் உள்ளபோது அதன் மூத்த தலைவரான ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து 100 நாட்களைக் கடந்து காவலில் வைத்திருக்கிறது. உங்களுக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவத்தையும் சிதம்பரம் கைது நடவடிக்கையையும் எப்படி பார்க்கிறீர்கள்?

ப: எல்லா காலகட்டத்திலும் அழுத்தத்துக்கு ஆளாகும் ஒரு அமைப்பாகத்தான் சிபிஐ இருந்து வந்திருக்கிறது. அது எனது நிதர்சனமான கருத்து. நான் வார்த்தையை மிக கவனமாக பயன்படுத்துகிறேன். மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் நான் அமைச்சராக இருந்தேன். எல்லாமே பிரதமரிடம் கூறி விட்டே செயல்படுத்தினேன். நான் சொன்னது தான் சரி என்று வலியுறுத்தினேன். அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், வினோத் ராய் (மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்தவர்) என்ற தனி மனிதர். அவரை சிஏஜி என்று கூட நான் அழைக்க மாட்டேன். சிஏஜி என்ற தனி மனிதர், தனக்கு கீழ் உள்ள எந்த அதிகாரியும் 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்று எழுதவில்லை. அந்த அறிக்கையை வினோத் ராயே தயாரித்தார்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை ராசா மாற்றி விட்டார் என்றெல்லாம் மிகப்பெரிய அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை ஊடகங்கள் பெரிதுபடுத்தின. அந்த எண்ணிக்கைக்குரிய பூஜ்ஜியத்தின் நீளம், அனைவரையும் வியக்க வைத்தது. அதை தெரிந்தோ தெரியாமலோ சிலர் பொது நல மனுவாக தாக்கல் செய்தார்கள்.

பொதுவாக சிஏஜி அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அங்குள்ள குழுக்கள் அதில் உள்ள விவரங்கள் சரியா, தவறு உள்ளதா என்பதை ஆய்வு செய்வார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கொடுத்ததன் விளைவால், அங்கே உள்ள இரண்டு நீதிபதிகள், சிஏஜி கொடுத்த அறிக்கை அடிப்படையில், பெரிய தவறு நடந்திருக்கிறது.

சிபிஐ வழக்கு தொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். அப்படியொரு அழுத்தம் சிஏஜி, ஊடகம், உச்ச நீதிமன்றம் வாயிலாக சிபிஐக்கு கொடுக்கப்பட்டது. இது எனது தனிப்பட்ட அனுபவத்தில் பார்த்தவை. அது வெளியில் இருந்து வந்த நிர்பந்தம்.

ஆனால், இப்போது சிதம்பரம் மீதான நிர்பந்தம், உள்ளிருந்து வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டை பார்த்தால், முதலில் ரூ.100 கோடி தொடர்புடைய பரிவர்த்தனை என்று கூறினார்கள். அதுவும் சொன்னவர், வேறொரு வழக்கில் சிறையில் உள்ள பெண்மணி. அவர் கொடுத்த வாய்மொழி புகார் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES/GETTY IMAGES
Image caption ப. சிதம்பரம்

அதன் அடிப்படையில் குற்றச்சாட்டை பதிவு செய்த செயலை, வேறு எங்கும் நடக்காத ஒன்றாகவே நான் பார்க்கிறேன். முதலில் அவர்கள் சொன்ன ரூ. 100 கோடி, பிறகு ரூ. 50 கோடி ஆகி, கடைசியில் எழுத்துப்பூர்வமாக ரூ. 10 லட்சமோ அதற்கு மேல் உள்ள தொகை என்றோ கூறுகிறார்கள். மலையை காட்டி, கடைசியில் ஒரு மயிரிழையில் நிற்பது போல, வேண்டுமென்றே ஒரு அரசியல் உள்நோக்கத்தோடு சிதம்பரத்தை சிறையில் வைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு, இந்த அரசாங்கம் செய்த நடவடிக்கைக்கு சிபிஐ ஆளாகியுள்ளது. அதனால்தான் சிபிஐ எப்போதுமே ஒரு நிர்பந்தத்துக்கு ஆளான அமைப்பு என்பது எனது தனிப்பட்ட கருத்து.

கே: நாடாளுமன்ற மக்களவையில் திமுக தலைமையிலான கூட்டணி எம்.பி.க்கள் பெரும்பான்மையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு மத்தியில் வெறும் ஒற்றை உறுப்பினராக, தமிழகத்தில் ஆளும் அதிமுக பிரதிநிதியாக மட்டுமின்றி மாநிலத்தில் ஆளும் அரசின் பிரதிநிதியாகவும் ரவீந்திரநாத் குமார் செயல்படுகிறார். அவரால் தமிழகத்துக்காக குரல் கொடுக்க முடியும் என நம்புகிறீர்களா?

ப: அவர் பாவம், என்ன செய்வார்? ஏதாவது பதவி வருமா என்பதற்காக, எந்த மசோதா வந்தாலும், மத்திய அரசுக்கு பாராட்டு, பாராட்டு என்று அவர் துதி பாடிக்கொண்டே இருக்கிறார்.

எந்த விதியின்கீழோ, ஜீரோ ஹவர் என்று சொல்லக்கூடிய நேரமில்லா நேரத்தில் பேசினாலும் கூட, இந்த அரசாங்கத்துக்கு எப்படி துதி பாடுவது, எப்படி புகழ்மாலை சூட்டுவது, அதன் மூலம் தனக்கோ தனது தந்தையாருக்கோ தமிழ்நாட்டு அரசியலில் பாதுகாப்பான இடம் கிடைக்குமா என்பதை நோக்கித்தான் அவரது உரைகள் எல்லாம் இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டுக்காக அவர் குரல் கொடுத்ததாக எப்போதும் எனக்குத் தெரியவில்லை.

கே: புகை மாசுபாடு பிரச்னையை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது. டெல்லியிலேயே குடும்பத்துடன் வசித்து வருபவர் என்ற முறையிலும், மத்தியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவியை வகித்தவர் என்ற முறையிலும் இந்த மாசுபாடு தீவிரமாவதற்கும், இது எங்கு நாட்டை கொண்டு போய் விடும் என்பதையும் நீங்கள் எப்படி அனுமானிக்கிறீர்கள். இதை வளர்ச்சித் திட்டங்களுக்கும், சூழலியலுக்கும் இடையிலான பிரச்னைகள் ஏற்படுத்திய தாக்கமாக கருதலாமா?

ப: சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காரணத்தால் இதை நான் சொல்கிறேன். சுற்றுச்சூழல் விவகாரத்தில், மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலை நிலவவில்லை. இன்னும் சொல்வதென்றால், பல்வேறு மாநில அரசுகளுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான போதுமான புரிதலும் போதுமான திட்டமிடலும் இல்லை. மத்திய அரசு, ஒரு அமைச்சரையும் மாசு கட்டுப்பாடு வாரியத்தையும் வைத்துக் கொண்டும், மாநில அரசு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை வைத்துக் கொண்டும் எவ்வளவு தூரத்துக்கு சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த முடியும்?

அடுத்த பருவநிலை ஆண்டில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் முன்கூட்டியே கணித்து செயல்படக்கூடிய மாநில அரசுகள் இன்றைக்கு இல்லை. அதற்கான ஒரு கொள்கையையோ, ஒரு பொது திட்டத்தையோ மத்திய அரசு வகுத்து செயல்படுத்தக்கூடிய போக்கு, இந்தியாவில் இதுவரை இல்லை. காற்று மாசுபாடு வேறு, சுற்றுச்சூழல் அனுமதி வேறு.

உலகம் முழுவதும் வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், நீடித்த வளர்ச்சியாக கருதப்பட வேண்டும் என்ற நிலை கடைப்பிடிக்கப்படுகிறது. நமக்கு வளர்ச்சியும் வேண்டும். அதே நேரம், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படக்கூடாது. உதாரணத்துக்கு ஒரு சிமென்ட் தொழிற்சாலை தொடங்குவதாக வைத்துக் கொண்டால், மாசு ஏற்படுகிறது என்ற காரணத்தால் சிமென்டே தேவையில்லை, இரும்பே வேண்டாம் என்று கூற முடியுமா?

அப்படி வசதிகளை அமல்படுத்தும்போது, மாசு மிகாமல் பார்த்துக் கொள்ள அறிவியல் அடிப்படையிலான செயல்திட்டங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் ஏராளமாக உள்ளன. மத்திய அரசும் அதை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அடிப்படையில், மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து இந்த விஷயத்தில் ஒரு செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

இந்த பேட்டியின் காணொளியை பிபிசி தமிழின் யூடியூப் பக்கத்தில் பார்க்க:

பிபிசி தமிழுக்கு ஆ.ராசா அளித்த சிறப்பு நேர்காணல் - காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்