கோவை சிறுமி வன்புணர்வு வழக்கில் பிரதான சந்தேக நபர் சரண்

கோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சரணடைந்துள்ளார்.
கோவையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை, 6 நபர்கள் வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26ஆம் தேதி, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 நபர்கள் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. இதனையடுத்து, சிறுமியின் தாயார் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் சிறுமியை மிரட்டி வன்புணர்வு செய்த கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமியை வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்னர், கைது செய்யபட்டவர்களை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
'பூங்காவில் இருந்த சிறுமியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.
சிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்', என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சிறுமியை அழைத்துச் சென்ற நபர் தான், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரோடு கூட்டு சேர்ந்து வன்புணர்வு செய்தார், எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை முறையான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.
இந்நிலையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
மற்றொரு முக்கியசந்தேக நபரான கார்த்திக் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- மேட்டுப்பாளையம் விபத்து: சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் கைது
- விக்ரம் லேண்டர் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி? சண்முக சுப்ரமணியம் சிறப்பு பேட்டி
- "கொள்கை இல்லாத ரஜினி, கமலை மக்கள் ஏற்பார்களா?" - ஆ. ராசா பிரத்யேக பேட்டி
- 'வாசி' வானதி: வனம் சுமக்கும் ஒரு பறவை #iamthechange
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்