நர்சரி தொழில்: "அன்று சாராயம் காய்ச்சினோம்; இன்று வனம் உருவாக்குகிறோம்" - ஒரு கிராமத்தின் வெற்றிக் கதை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அன்று மரம் வெட்டினார்கள்; இன்று மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள் - நம்பிக்கை கதை

எல்லாரும் விவசாயத் தொழிலைவிட்டு நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஒரு கிராமமே விவசாய தொழிலை நோக்கி திரும்பி இருக்கிறது.

ஆம். இந்தக் கட்டுரையை இப்படிதான் தொடங்க வேண்டும்.

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக மரம் வெட்டி, சாராயம் காய்ச்சி வாழ்ந்த இந்த கிராமம், இன்று வெற்றிகரமாக விவசாயத்தின் ஒரு பிரிவான தோட்டக்கலையில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கல்லுக்குடியிருப்பு கிராமம் அது.

அன்று மரம் வெட்டினார்கள்; இன்று வனத்திற்கான பதியம் போடுகிறார்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கல்லுக்குடியிருப்பு கிராமம். இங்கு சுமார் 350 குடும்பங்கள் உள்ளன. அதில் சிலரை தவிர அனைவரும் நர்சரி தொழிலை சார்ந்தே இருக்கிறார்கள்.

Image caption அடைக்கலம்

ஒவ்வொரு வீட்டிலும் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் உள்ளன.

கழுகுப் பார்வையிலிருந்து இந்த கிராமத்தைப் பார்த்தால், இந்தக் கிராமமே ஒரு வனம் போலக் காட்சி தருகிறது.

இந்த கிராம மக்கள் தோட்டக்கலை தொழிலுக்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

"செம்மண் பூமி இது. ஒரு காலத்தில் இங்கு எந்த வளமும் இல்லை. 90களில் சாராயம் காய்ச்சி, மரம் வெட்டிதான் பிழைப்பு நடத்தினோம். ஏராளமான வழக்குகளையும் சந்தித்தோம். நிம்மதியற்ற நாட்கள் அவை. என் அண்ணன் முத்துதான் முதல்முதலாக இந்த தொழிலைவிட்டு விலகினார். பக்கத்து ஊர்களுக்குச் சென்று மரக்கன்றுகளை வாங்கி விற்கத் தொடங்கினார். அதன்பின் தான் எங்கள் வாழ்க்கை மாற தொடங்கியது," என்கிறார் அடைக்கலம்.

அரசு அதிகாரிகளும் இவர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

மேலும் அவர், "அந்த சமயத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத். "ஏன் சட்டவிரோதமாகத் தொழில் செய்கிறீர்கள்? நியாயமாகத் தொழில் செய்து கெளரவமாக வாழ உதவுகிறோம்," என்றார். சொல்லியதோடு மட்டுமல்லாமல், தோட்டக்கலை சார்ந்த பயிற்சியையும் அளித்தார்," என்கிறார்.

நர்சரி தொழிலை முதன்முதலாக இந்த கிராமத்தில் முத்துதான் தொடங்கி இருக்கிறார்.

Image caption பி.கே.முத்து

பி.கே. முத்து, "எங்க ஊரை சுற்றி காடுதான். சவுக்கு, யூகலிப்டஸ், செம்மரம் விதைகள் கொட்டிக் கிடக்கும். அதை எடுத்துட்டு வந்து உடைத்து விதை எடுப்போம். பின் அதனை பைகள்ல மண் நிரப்பி விதைப்போம். பின் அந்தக் கன்றுகளை எடுத்துக்கிட்டு போய் பக்கத்து ஊர்ல விற்போம்," என்கிறார்.

"முன்பெல்லாம் பத்து விதை போட்டால், ஒன்றுதான் பிழைக்கும். ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் மரம்வெட்டி பிழைக்கவும் விருப்பம் இல்லை. கடுமையாகப் போராடினோம். பிழைகளிலிருந்து பாடம் கற்றோம். இப்போதெல்லாம் பத்தில் ஒன்பது பிழைத்து விடுகிறது," என்கிறார் முத்து.

அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி

இப்போது அண்டை மாநிலங்களுக்கும் இவர்கள் மரக்கன்றுகளை ஏற்றுமதி செய்கிறார்கள்.

அடைக்கலம், "முதலில் பக்கத்து ஊர்களுக்குத்தான் கன்றுகளை விற்றோம். ஆனால், இப்போது வெளிமாநிலங்களான ஆந்திரா, கேரளா, ஒடிசா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்," என்கிறார்.

விலை குறைவாக இருப்பதுதான் இங்கிருந்து மரக்கன்றுகளை வாங்க முதன்மையான காரணம் என்கிறார் அவர்.

Image caption சிவகாம சுந்தரி

பழம், பூ, மூலிகை என ஏராளமான ரகம் இருப்பதாகப் பட்டியலிடுகிறார் இந்த ஊரைச் சேர்ந்த சிவகாம சுந்தரி.

"மல்லிகை, முல்லை, சந்தன முல்லை, அலமண்டா, அரளி, செம்பருத்தி, ரோஸ், பலா, மாதுளை, கொய்யா, பூவரசன், மகிழம், வேம்பு, செம்மரம், ரோஸ்வுட், மகாகனி, துளசி, தூதுவளை, பிரண்டை" என ஏராளமான வகைகள் இங்கு இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

மேலும் அவர், "ஐந்து ரூபாயிலிருந்து, 500 ரூபாய் வரையிலான விலையில் இங்கு மரக்கன்றுகள் கிடைக்கின்றன," என்று குறிப்பிடுகிறார்.

"பெண்கள் கைகளில் பொருளாதாரம்"

வீட்டுக்கு ஒரு பெண் இந்த நர்சரி தொழிலில் ஈடுபடுகிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் மரக்கன்று உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதும் அவர்கள்தான்.

"ஏறத்தாழ முந்நூற்றுக்கும் பெண்கள் நர்சரி தொழிலில் ஈட்டுப்பட்டுள்ளோம். பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டி இருப்பதில்லை. குடும்பமாக உழைக்கிறோம். நியாயமான வருவாய் கிடைக்கிறது," என்கிறார் சிவகாமசுந்தரி.

Image caption காமாட்சி

குறிப்பாக, பையில் மண்ணை நிரப்பி விதைப் போடும் பணிகளைப் பெண்கள் பார்க்கிறார்கள்.

நர்சரியில் பணி செய்யும் காமாட்சி, "ஒரு நாளைக்குக் குறைந்தது 500 பை போடுவோம். ஒரு பைக்கு 30 பைசா சம்பளம்," என்று கூறுகிறார்.

"ஊர் திரும்பும் மக்கள்"

விவசாய தொழிலிருந்து விலகி நகரங்களில் கூலிகளாகச் சென்றவர்கள் கூட இப்போது மீண்டும் ஊர் திரும்பி இருக்கிறார்கள்.

"சாராயம் காய்ச்சியவர்கள், மரம் வெட்டியவர்கள் என எல்லாரும் அந்த தொழிலைவிட்டு நர்சரி தொழிலுக்கு வந்துவிட்டார்கள். ஏன் வெளியூர் சென்றவர்கள் கூட மீண்டும் ஊர் திரும்பி இருக்கிறார்கள். இந்த தொழிலில் பிரச்சனை இல்லாமல் இல்லை. மண் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. தண்ணீர் வசதியும் தேவை. ஆனால், இதனை எல்லாம் கடந்து மனதார சந்தோஷமாக இருக்கிறோம்," என்கிறார் அடைக்கலம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: