ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: 'என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்'

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரின் மனைவி
Image caption குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரின் மனைவி

ஹைதராபாத் நகரில் 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்களில் நிறைய மாற்றங்கள் செய்த பிறகும், இந்தியாவில் பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பான சூழ்நிலை இருக்கிறதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள நான்கு பேரில், மூவரின் குடும்பத்தினருடன் பிபிசி தெலுங்கு செய்தியாளர் தீப்தி பத்தினி சந்தித்துப் பேசினார்.

இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரில் மூன்று பேர், ஹைதராபாத்தில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நான்காவது நபர், அருகிலுள்ள வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது இன்னும் விசாரணை தொடங்கவில்லை, குற்றவாளிகள் என நிரூபிக்கப்படவில்லை என்பதால், அந்தக் குடும்பத்தினரைப் பற்றிய அடையாளங்களை எங்களால் வெளியிட முடியவில்லை.

பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவம் பற்றிய செய்தி வெளியானதில் இருந்து, இது தொடர்பாகக் கைதானவர்களின் கிராமங்களுக்கு, கடந்த சில தினங்களாக ஊடகத் துறையினர் படையெடுத்து வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரைப் பேட்டி எடுக்க அவர்கள் செல்கின்றனர்.

Image caption குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவருடைய பெற்றோர்

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களில் ஒருவருடைய குடும்பத்தினரை இந்தக் கிராமத்தில், அவர்களின் வீட்டில் நாங்கள் சந்தித்தபோது, வீடுகளைக் காட்ட கிராமவாசி ஒருவர் முன்வந்தார். தங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டிருப்பதை அறிந்து தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக கிராம மக்கள் கூறினர்.

``எங்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத் தொழிலாளர்கள். தினமும் கூலிக்குச் சென்றுதான் வாழ்க்கை நடத்தி வருகிறோம்'' என்று கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

சாக்கடை நீர் வழிந்தோடும் தெருக்களின் வழியாக எங்களை அழைத்துச் சென்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடைய வீட்டைக் காட்டினார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் தாயார், இரண்டு அறைகள் கொண்ட, ஓலை வேய்ந்த கூரை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடல் தளர்ந்து, உட்கார முடியாமல் இருந்த அவர், தனது கணவரை நோக்கி கை காட்டினார்.

என்ன நடந்தது என தமக்குத் தெரியாது என்று, தினசரி கூலித் தொழிலாளியான அவருடைய கணவர் கூறினார். ``எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நாளைக்கு என் மகளுக்கு இப்படி நடந்தால் நான் அமைதியாக உட்கார்ந்திருக்க மாட்டேன். அதனால்தான், காவல் துறையினர் சொல்லும் செயலை என் மகன் செய்திருந்தால், அவனை தூக்கில் போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கரங்களை கூப்பியபடி அவர் குறிப்பிட்டார்.

Image caption சிவப்பு கோடு - வல்லுறவுக்கு உட்பட்ட பெண் வந்து, வண்டியை நிறுத்திய இடம். நீலக்கோடு - பாலியல் வல்லுறவு செய்தவர்கள் அந்த பெண்ணின் வண்டியை எடுத்து சென்ற வழி.

நவம்பர் 28 ஆம் தேதி வேலை முடித்து வந்த பிறகு அன்றிரவுதான் கடைசியாக தன் மகனுடன் பேசியதாக அவர் தெரிவித்தார்.

``என்னிடம் என் மகன் எதுவும் சொல்லவில்லை. வீட்டில் தூங்கினான். அன்று நள்ளிரவில் காவல் துறையினர் வந்து, என் மகனை அழைத்துச் சென்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதை, அப்போது கூட நான் அறிந்திருக்கவில்லை. காவல் நிலையத்துக்கு வருமாறு என்னிடம் காவல் துறையினர் கூறியபோதுதான், இந்தச் சம்பவத்தின் விவரங்கள் பற்றி தெரிய வந்தது. என் மகனுக்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் நிலையில் கூட நான் இல்லை. அவ்வாறு வழக்கறிஞர் நியமிக்கவும் விரும்பவில்லை. இந்தச் செயலை என் மகன் செய்திருந்தால் அவனுக்காக வாதாட என் பணத்தையோ அல்லது சக்தியையோ செலவிட நான் தயாராக இல்லை'' என்று அந்தத் தந்தை கூறினார்.

அங்கிருந்து சில வீடுகள் தள்ளி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இன்னொருவரின் வீடு உள்ளது. மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டின் முன்புற களத்தில் அவருடைய தாயாரும் மனைவியும் அமர்ந்திருந்தனர்.

தாம் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவி தெரிவித்தார். ``நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அவரை நான் அறிவேன். 8 மாதங்களுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. அவருடைய பெற்றோர்கள் ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பிறகு ஒப்புக்கொண்டனர்'' என்று அவருடைய மனைவி தெரிவித்தார்.

Image caption குற்றஞ்சாட்டப்பட்ட இன்னொருவரின் பெற்றோர்.

தனது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கு அவன் மருத்துவம் பார்த்து வருவதாகவும் தாயார் கூறினார். ``இதுபோன்ற ஒரு செயலை என் மகன் செய்திருப்பான் என என்னால் நம்ப முடியவில்லை. யாரோ கட்டாயப்படுத்தி அவனை மது குடிக்க வைத்து இந்த வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிகவும் கவலையடைந்ததாக அவருடைய மனைவி கூறினார்.

``பாதிக்கப்பட்டவரும் ஒரு பெண்தான். நான் கவலைப்பட்டேன். என் கணவர் அதைச் செய்தாரா, செய்யவில்லையா என்பது பற்றிப் பேச நான் விரும்பவில்லை. ஆனால், நடந்திருக்கும் சம்பவம் சரியானதல்ல. அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை'' என்றார் அவர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் மூன்றாவது நபரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர். நாங்கள் சென்றபோது அவருடைய வீட்டில் யாரும் இல்லை.

குற்றஞ்சாட்டப் பட்டுள்ள நான்காவது நபர் இந்தக் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். அவருடைய வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். ஓர் அறை கொண்ட குடிசைக்கு வெளியே, அவருடைய தாயும், தந்தையும் அமர்ந்திருந்தனர். தளர்வடைந்து, பேச முடியாத நிலையில் இருந்த அவர்கள், தங்கள் மகன் என்ன செய்தான் என்று தங்களுக்குத் தெரியாது என்று கூறினர்.

Image caption காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டம்

``வீட்டில் அரிதாகத்தான் தங்குவான். வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு வெளியில் சென்றுவிடுவான். குடும்பத்தில் சம்பாதிக்கக் கூடிய ஒரே ஆள் என்பதால் அவனிடம் அதிகமாக எதையும் நாங்கள் கேட்க மாட்டோம்'' என்று அவருடைய தாயார் தெரிவித்தார்.

அருகில் வசிப்பவர்கள் வீட்டின் எதிரே கூடிவிட்டனர். நடந்த சம்பவம் பற்றி பெற்றோருக்கு அதிகம் தெரியாது என்று அவர்கள் கூறினர்.

தனது மகன் 28 ஆம் தேதி மாலையில் வீட்டுக்கு வந்ததாக தந்தை தெரிவித்தார். ``தான் லாரி ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டுவிட்டதாக அவன் கூறினான். ஸ்கூட்டரில் சென்ற ஒரு பெண் மீது லாரி மோதியதில் அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் கூறினான். அவனை கோபித்துக் கொண்ட நான், கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கண்டித்தேன். அப்போதுதான் முதல் முறையாக, தன்னைப் பற்றிய விஷயத்தை அவன் எங்களிடம் கூறினான். அவனைக் கைது செய்வதற்குக் காவல் துறையினர் இரவில் வந்தபோதுதான், அவன் செய்த செயல் பற்றித் தெரிய வந்தது'' என்று தந்தை கூறினார்.

இதற்கிடையில், அருகில் வசிக்கும் ஒருவர், இந்தச் சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

``இப்படியொரு சம்பவத்தில் அவன் ஈடுபட்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தான். சுமார் பத்து ஆண்டுகளாக அவனை எனக்குத் தெரியும். வேறு தொழிலுக்கு மாறிவிடுமாறு நான் கூறியிருக்கிறேன். ஒருபோதும் வீட்டுக்கு வருவது கிடையாது'' என்று அவர் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், இன்னும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகக் கூறி, அவர்களை தங்களின் காவலில் ஒப்படைக்குமாறு காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப் பட்டுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி, இந்த வழக்கு பற்றி காவல் துறையினர் எந்தத் தகவலும் வெளியிட மறுத்து வருகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், ``ஆள்கடத்தல், திருட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவை தொடர்ந்து கொலை செய்தது மற்றும் கிரிமினல் சதி'' குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக, நீதிமன்றக் காவல் அறிக்கையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்யுமாறு தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல்கொடுமை; '' முதல்ல இப்படி நடந்துருச்சேன்னு பதறாதீங்க''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: