உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: இந்தி கற்றுக் கொடுப்பது ஏன்? - மஃபா பாண்டியராஜன் விளக்கம்

அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுக் கொடுப்பது தொடர்பான விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் விளக்கமளித்திருக்கிறார்.

சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் திங்கட்கிழமையன்று துவக்கிவைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

ஆனால், தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் இயக்குனர் விஜயராகவன் உள்ளிட்டோருடன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"தமிழாய்வு மாணவர்களை சிறந்த பன்மொழி வல்லுநர்களாக இலக்கிய ஒப்பாய்வு அறிஞர்களாக உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம். அந்த லட்சியத்திற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் என்றைக்கும் தடை போடும் பாதையில் தொடர்ந்து தி.மு.க. பயணிக்கிறது" என குற்றம்சாட்டிய பாண்டியராஜன், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தமிழ் கற்றுத் தரும் வகுப்புகள் துவங்கப்பட்டிருப்பதாகவும் தமிழ் வளர்ச்சிக்காக செய்யப்பட்ட எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியின்போதுதான் செய்யப்பட்டன என்றும் தி.மு.க. எதையும் செய்யவில்லையெனன்றும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், "இங்கு இந்தி தனி ஒரு பாடமாக கற்றுத்தரப்படவில்லை. இது ஒரு உயர் கல்வி நிறுவனம். இங்கே எம்.ஏ., எம்ஃபில், பிஎச்.டி என 101 மாணவர்கள் படிக்கிறார்கள். இதன் பல பணிகளில் கல்வி அளிப்பதும் ஒரு அங்கமாக இருக்கிறது. மொழியியல் படிப்பவர்களுக்கு கூடுதலாக வேறு மொழிகள் - ஒரு உலக மொழி, ஒரு இந்திய மொழி - தெரிந்திருப்பது நல்லது என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2014ல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தி, மராத்தி, வங்கமொழி, தெலுகு ஆகிய நான்கு மொழிகளில் ஒன்றை கற்றுத்தர முடிவெடுக்கப்பட்டது. அதேபோல, உலக மொழிகளில் ஃப்ரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்ச்சுகீசிய மொழி ஆகிய நான்கு மொழிகளில் ஒன்றைப் படிக்கலாம். இரண்டு மொழிகளையும் சேர்த்துக்கூட படிக்கலாம். 2014லேயே வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இந்த ஆண்டு புதிதாக நிதி ஒதுக்கினோம்.

முன்பு, ஒட்டுமொத்தமாக நிதி ஒதுக்கி, அதிலிருந்து பிரித்து செலவழிப்பார்கள். இந்த ஆண்டு திட்டங்கள் சார்ந்து நிதி ஒதுக்க ஆரம்பித்தோம். கடந்த பட்ஜெட்ல் இதற்கு அறிவிப்பு அளிக்கப்பட்டது. பல அறிவிப்புகளோடு சேர்த்து இதை நான் சொல்லும்போது தி.மு.கவினர், குறிப்பாக துரைமுருகனும் தங்கம் தென்னரசு அவர்களும் வரவேற்றார்கள்.

ஆனால், இப்போது திடீரென எதிர்க்கிறார்கள். இந்தி பிரச்சார சபா புதிதாக கடை துவங்கிவிட்டதைப் போல பேசுகிறார்கள். அதில் உண்மையில்லை. மாணவர்கள் ஒட்டு மொத்தமாக 100 மணி நேரம்தான் வகுப்புகள் நடக்கும். வாரத்திற்கு இரண்டு மணி நேரம்தான். மாணவர்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிதான் இது. எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது. மாணவர்கள்தான் இந்த மொழிகளைத் தேர்வுசெய்தார்கள்.

இதனை முடித்த பிறகு மாணவர்கள் இந்தி பிரச்சார சபாவின் சான்றிதழை வேண்டுமானால் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் அந்தச் சான்றிதழைப் பெற வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. ஒருவர் ஒரு மொழியைப் படித்து திறமைசாலியாக இருக்கவே முடியாது. கூடுதலாக இரண்டு மொழிகளைப் படித்தால்தான் தன் மொழியின் மேன்மையை மாணவர் உணர முடியும்." என்று கூறினார்.

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பது, அதன் நோக்கங்களுக்கு முரணானது அல்லவா என்று கேட்டபோது, அதனை அமைச்சர் மறுத்தார். "இந்த இடம் ஃப்ரெஞ்ச் அகாதெமியைப் போல இருக்க வேண்டுமென்பதுதான் அவருடைய கனவு. அவருடைய கனவை நிறைவேற்றுவது நாங்கள்தான். தி.மு.க. இதில் ஒன்றைக்கூட செய்யவில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு கட்டடமும் நாங்கள் கட்டியது. உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம் எல்லாம் நாங்கள் அமைத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

கருணாநிதி நல்ல தமிழறிஞர். ஆனால், மற்றவர்கள் தமிழ் கற்பதற்கான கட்டமைப்பை அவர் உருவாக்கவே இல்லையே. கீழடி ஆராய்ச்சி, சொற்குவை உருவாக்கியது எல்லாமே அ.தி.மு.கதான். என்னை நோக்கி கேள்வி எழுப்பும் தங்கம் தென்னரசு, நாங்கள் இதைச் செய்தோம் என்று சொல்லட்டுமே" என்றார்.

அ.தி.மு.க. சார்பில் அமைச்சராக இருந்தபடி, பா.ஜ.கவின் கொள்கைகளை செயல்படுத்தவதாக பாண்டியராஜன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

"நான் பா.ஜ.கவில் இருந்தேன். இல்லையென்று சொல்லவில்லை. 8 ஆண்டுகள் இருந்தேன். அவர்கள் மீது எனக்கு எந்த எதிர்ப்புணர்வும் கிடையாது. அதே நேரத்தில் என்னைக்கு நான் ஜெயலலிதாவைப் பார்த்து அ.தி.மு.கவில் சேர்ந்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கட்சிதான் என்னுடையது. ஆறரை ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய எந்த நடவடிக்கையும் அ.தி.மு.கவின் கொள்கைகளுக்கு மாறுபட்டு இருந்து இல்லை.

அந்த கொள்கைகளும் சித்தாந்தங்களும் வேறு கட்சிகளின் சித்தாந்தங்களோடு பொருந்திப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் இறந்தால், என் மீது அ.தி.மு.க. கொடிதான் போர்த்தப்பட வேண்டும்.

என்னுடைய நிலைப்பாடு எல்லாமே அ.தி.மு.கவின் நிலைப்பாடுதான். நான் பல ஆண்டுகள் அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக இருந்திருக்கிறேன். எப்போதாவது என்னுடைய கருத்து அ.தி.மு.கவுக்கு எதிரானதாக பா.ஜ.கவுக்கு ஆதரவானதாக என்றைக்காவது இருந்திருக்கிறதா?

'பெய்டு மீடியா'வை வைத்தும் சைபர் கூலிகளை வைத்தும் திரும்பத் திரும்ப இந்தக் கருத்துகளைப் பதியவைத்து வருகிறார்கள். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்." என்றார் பாண்டியராஜன்.

முன்னதாக, சிறப்பு மொழி பயிற்சித் திட்டத்தை துவக்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் குறிப்பு ஒன்றில் மாணவர்கள் கையெழுத்திட்ட பிரதி ஒன்று செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆய்வு மாணவர்கள், செய்தியாளர்கள் முன்பும் நிறுத்தப்பட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்