மேட்டுப்பாளையம் விபத்து; இறந்தும் உலகை பார்க்கும் குழந்தைகள் - நெகிழ்ச்சி கதை 

இறந்தும் தங்கள் கண்கள் தானம் செய்யப்பட்டதால் உலகில் வாழும் நிவேதா மற்றும் ராமநாதன்
Image caption இறந்த பின்னர் கண்கள் தானம் செய்யப்பட்டதன் மூலம், உலகில் “வாழும்” நிவேதா மற்றும் ராமநாதன்

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் காலனியின் அருகே விதிமுறைகள் மீறி கட்டப்பட்டிருந்த கருங்கல் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த உறவினர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்த மீளவில்லை.

இறந்த 17 நபர்களும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 4 வீடுகளில் வசித்து வந்தனர். இந்த விபத்தில், தனது இரு குழந்தைகளும் இழந்து தவிக்கிறார் செல்வராஜ்.

Image caption செல்வராஜ்.

''நானும் எனது மனைவியும் கட்டிட வேலை செய்து வந்தோம். திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவள் நிவேதா, அவளுக்கு பிறகு பிறந்தான் ராமநாதன். இருவரும் துருதுருவென விளையாடிக் கொண்டே இருப்பார்கள். நிவேதா, படிப்பில் கெட்டிக்காரி. ஆதிதிராவிடர் காலனியில் அதிக மதிப்பெண் எடுப்பவள். இப்போதுதான் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்தாள். அவளுக்கு ஏழு வயது இருக்கும்போது எனது மனைவி உயிரிழந்துவிட்டார்''

''அதற்கு பின்னர் எனது தம்பியின் வீட்டில் தங்கி படித்து வந்தாள். எனது மகனை தாயைப்போல பார்த்துக்கொள்வாள். நான் தினமும் அவர்களை இரவு சென்று பார்த்துவிட்டு, அருகே இருக்கும் எனது வீட்டிற்கு வந்து தூங்கிவிடுவேன். விபத்து நடந்த முந்தைய நாள் இரவு நான் பணிபுரியும் டீ கடையிலேயே தங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை என் பிள்ளைகள் இறந்துவிட்டனர் என கூறினர். இன்னும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியேவர முடியவில்லை. மனைவி, மகன், மகள் என அனைவரையும் இழந்துவிட்டு அனாதையாக இருக்கிறேன்'' என கண்கலங்கியபடி தெரிவித்தார்.

Image caption 17 பேரை பலி கொண்ட சுற்றுச்சுவர்

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தனது இரு குழந்தைகளின் கண்களையும் தானமாக வழங்கியுள்ளார் செல்வராஜ்.

''குழந்தைகளின் கண்கள் நல்ல நிலையில் இருப்பதால், யாருக்காவது தானம் செய்து உதவுங்கள் என மருத்துவ ஆலோசகர்களும், சொந்தங்களும் கூறினர். உயிரிழந்த பின்னர் என் பிள்ளைகள் மண்ணிலோ நெருப்பிலோ சென்றுவிடப்போகின்றன. எனவே, அவர்களின் கண்கள் யாருக்காவது உதவட்டும் என்ற எண்ணத்தில் கண்களை தானம் செய்தேன்'' என்கிறார் இவர்.

குழந்தைகளை வளர்த்து வந்த இவரது தம்பியின் குடும்பத்திலும் இரு ஆண்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

''எனது அண்ணனின் மகளையும் மகனையும் தாயில்லாத காரணத்தால் நானும் என் மனைவியும்தான் வளர்த்து வந்தோம். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் பிரதாப் திருமணம் முடிந்து தனி வீட்டில் இருக்கிறார். எனது மனைவி சிவகாமி (வயது 45), மகள் வைதேகி (வயது 22), அண்ணனின் குழந்தைகள், அவர்களின் பாட்டி ஓவியம்மாள் (வயது 56) என எங்களது குடும்பத்தின் எல்லா பெண்களையும் இழந்துவிட்டோம்''' என கதறுகிறார் செல்வராஜின் தம்பி சின்னதுரை.

Image caption சின்னதுரை

இதேபோல், மற்றொரு வீட்டில் வசித்துவந்த அருக்காணி (வயது 55), அவரது தங்கை ருக்கு (52), மகள் அரிசுதா (16), மகாலட்சுமி (8), தாய் சின்னம்மாள் (71) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய வீடுகள் அமைந்திருந்த தெருவிலுள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்தவர் திலகாவதி (வயது 55). அருக்காணியின் வீட்டிற்கு வந்து பேசிவிட்டு அங்கேயே தூங்கிய இவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

இவர்களோடு, அடுத்தடுத்த வீடுகளில் வசித்துவந்த மங்கம்மாள் (வயது55), குருசாமி (45), ஆனந்தகுமார் (46), அவரின் மனைவி நதியா (30), பிள்ளைகள் அட்சயா (7) மற்றும் லோகுராம் (7) ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

"அனாதைங்க நானு"- கண்ணீருடன் கண்தானம் செய்த தந்தை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்