ஹைதராபாத் என்கவுன்டருக்கு எதிராக உச்ச நீதிமன்றதில் பொது நல வழக்கு

ஹைதராபாத் படத்தின் காப்புரிமை UGC

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில் இறந்தவர்களின் சடலங்களை டிசம்பர் 9ம் தேதி, இரவு 8 மணி வரை பாதுகாத்து வைத்திருக்க வேண்டுமென தெலங்கானா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கருதப்படும் நான்கு குற்றவாளிகளை என்கவுன்டர் செய்த தெலங்கானா காவல் துறை அதிகாரிகளின் மீது (FIR) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜி எஸ் மணி மற்றும் பிரதீப் குமார் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

என்கவுன்டர் தொடர்பாக 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சில விழிமுறைகளை விதிக்கப்பட்டன. அந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்றும் வழக்கு தொடர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சடலங்களின் பிரேத பரிசோதனையின் காணொளி நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது.

இந்த என்கவுன்டர் சம்பவம், சட்டத்திற்கு புறம்பான கொலை என பெண்கள் குழு ஒன்றும், சமூக உரிமை செயற்பாட்டாளர்களும் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்த பின்னர், இந்த உத்தரவை தெலங்கானா உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வியாழன் இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், ``ஆள்கடத்தல், திருட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவை தொடர்ந்து கொலை செய்தது மற்றும் கிரிமினல் சதி'' குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக, நீதிமன்றக் காவல் அறிக்கையில் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்யுமாறு தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தான் வெள்ளிக்கிழமையன்று காலை எண்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சைபராபாத் போலீஸ் ஆணையர் வி.சி.சஜநார், "குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சத்தன்பல்லியில் அதிகாலை மூன்று 3 மணி முதல் 6 மணி வரையளவில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளேன்; மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும்," என தெரிவித்தார்.

காவல்துறைக்கு ஆதரவான கோஷங்கள்

என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 2000 பேர் கூடியுள்ளனர் என்கிறார் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து பிபிசி தெலுகு சேவையின் செய்தியாளர் சதிஷ் பல்லா.

"அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன பலர் போலீஸாருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புகின்றனர்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் போலீஸாரின் மீது மலர் தூவி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

’எனது மகள் திரும்ப வரப்போவதில்லை’

"எனது மகள் இறந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. காவல்துறைக்கும் அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும்," என கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

"என்னால் இப்போது பேச முடியவில்லை. எனது உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. எனது மகள் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் அவளின் ஆத்மா தற்போது சாந்தியடைந்திருக்கும். போலீஸாருக்கும், அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகள் திரும்ப வருவாள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவள் கடைசியாக வீட்டை விட்டு சென்றபோது உணவு உண்ணாமல் சென்றுவிட்டாள்," என்று கொலைசெய்யப்பட்ட மருத்துவரின் தாய் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

"இவர்கள்தான் குற்றம் செய்த புரிந்தனர் என்று சொல்வதற்கு நம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளனவா? எந்த நீதிமன்றமாவது அந்த ஆதாரத்தை பார்த்ததா? எந்த நீதிமன்றமாவது தீர்ப்பு வழங்கியதா? அவர்கள் குற்றம் செய்ததாக நாமாக நினைத்துக் கொள்கிறோம். எதற்குமே ஒரு முறை உண்டு" என மனித உரிமை ஆர்வலர் ரபேக்கா மாமென் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இம்மாதிரியான என்கவுன்டர்கள் பெண்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் உறுதி செய்யாது.

"டெல்லி வழக்கில் நாம் கோவத்துடன் செயல்பட்டு சட்டத்தின்மூலம் நீதி பெற்றோம். ஆனால் தற்போது என்கவுன்டர் செய்தது மூலம் நாம் பின்னோக்கி சென்றுள்ளோம்." என மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் ஜி.எஸ். ராம்மோகன்

இது பற்றி பிபிசி தெலுங்கு மொழிப்பிரிவு ஆசிரியர் ஜி.எஸ். ராம்மோகன் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் என்கவுன்டர்கள் தெலுங்கு மொழி பேசப்படும் மாநிலத்தில் நடைபெறும் வழக்கமான ஒன்றுதான். இது புதிய அர்த்தத்தை பெற்றிருக்கிறது.

தெலுங்கு மொழி மாநிலங்களில் நக்சலைட்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையாளப்பட்ட காவல்துறையின் என்கவுன்டர்கள் மனித உரிமை மீறல் பற்றிய விவாதங்களை பொது மக்களிடம் ஏற்படுத்தியது.

அவ்வாறான காவல்துறை என்கவுன்டர்களால் பழகிப்போன ஒரு சமுதாயத்தில் இதுவொரு பெரிய விஷயமாக தெரியாமல் போகலாம்.

இந்த மனப்பான்மைதான் திஷா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் பிரதிபலிக்கின்றது. இந்த வழக்கு சமுதாயத்தில் ஏற்கெனவே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பை வழங்க முடியாத சட்ட அமைப்பு மீது நம்பிக்கை இழந்த மக்கள் வேறுபட்ட தீர்வை வரவேற்கின்றனர். இதுவே, நிறுவப்பட்ட அமைப்புகள் மற்றும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட நீதியை தேடும் நிலைமையை உருவாக்குகின்றது.

காவல்துறையினர் என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று மக்கள் காவல்துறையினரிடம் கேட்டுகொள்ளும்படி இந்த சம்பவம் தூண்டியிருந்தது.

ஏற்கனவே வாரங்கல்லில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தபோது, அமில வீச்சு வழக்கு குற்றவாளிகளை இதேபோல என்கவுன்டர் செய்தவர்தான் தற்போது சைபராபாத்தில் ஆணையராக இருக்கும் வி.சி. சஜநார். அதனை நினைவுகூர்ந்து இப்போதைய என்கவுன்டருக்காக அவரை "கதாநாயகன்" என மக்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.

பொதுவாக பார்த்தால், இந்த என்கவுன்டர்கள் மக்களிடம் வரவேற்பை பெறுகிறது. ஆனால், சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதை எதிர்த்து வருகின்றனர். இதை வரவேற்பவர்களின் மத்தியில் எதிர்ப்பவர்களின் குரல் எடுபடவில்லை. இவ்வாறு என்கவுன்டர்களைக் கொண்டாடுவது சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்பதன் வெளிப்பாடு.

என்ன நடந்தது?

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்