ஹைதராபாத் என்கவுன்டர்: இதுவா பெண்கள் கோரும் நியாயம்? - வினவும் செயற்பாட்டாளர்

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

( ஹைதராபாத் என்கவுன்டர் குறித்த இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

இறந்த கால்நடை பெண் மருத்துவரின் குடும்பம் மற்றும் இவர் இறப்பதற்கு 3 நாட்கள் முன்பு ஆசிஃபாபாத்தில் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட டேக்கு கோபுவின் மனைவியின் குடும்பம் ஆகியோருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

கொல்லப்பட்ட கால்நடை பெண் மருத்துவரைவிட டேக்கு கோபுவின் மனைவி 3 நாட்கள்தான் பெரியவர். கூலி வேலை மற்றும் சிறு விற்பனை செய்து அவர்கள் குடும்பம் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தது.

பாலியல் வல்லுறவு தொடர்பாக கடுமையான மற்றும் திருத்தப்பட்ட சட்டங்களும், இது தொடர்பாக விரைவான நீதிமன்ற நடைமுறையும் தற்போது அமலில் உள்ள சூழலில், நாட்டில் இரண்டு பெண்கள் மிகவும் மோசமான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஹைதராபாத் பாலியல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும் என பெண் அரசியல்வாதிகளான ஜெயா பச்சன் மற்றும் மாயாவதி ஆகிய இருவரும் பொதுவெளியில் கருத்து வெளியிட்டனர்.

அதேவேளையில், ஒரு முரண்பாடாக பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர், நாட்டின் மிக பெரிய மாநிலத்தில் முதல்வராக உள்ளார் (அவர் குற்றம் சாட்டப்பட்டவர், அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட சிலர் இறந்துவிட்டனர். அவர் இன்னும் இருக்கிறார்). இதேபோல் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் நாட்டை விட்டு தப்பி செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது சொந்தமாக ஒரு புதிய நாட்டை உருவாக்கப்போவதாக அவர் கூறுகிறார்.

இவர்கள் மீது சட்டத்தின் கரங்கள் நீளவில்லை. பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு தீவைத்து தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு பெண் தன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில் இது தொடர்பான அரசியல்வாதியின் வழக்கின் வேகம் குறையக்கூடும்.

இந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அதிகாரத்தில் இருப்பவர்கள் உள்ளார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் உணர்வெழுச்சி மற்றும் துக்கம் ஆகியவை எனக்கு நன்றாக புரிகிறது. தங்களின் ஆருயிர் இழப்புக்கு பதிலாக மற்றொரு உயிர் போகவேண்டும் என்று தங்கள் தரப்பில் அவர்கள் சில சமயங்களில் கேட்கக்கூடும்.

ஆனால், அனைவரும் அப்படி கோருவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு கருணை அளிக்க சோனியா காந்தி கேட்டுக் கொண்டதை நாம் மறந்துவிடுகிறோம்.

பாலியல் வல்லுறவு தொடர்பாக கடுமையான சட்டம் வேண்டும் என்று கேட்டோம். இது தொடர்பான பொதுமக்களின் அறைகூவலின் விளைவாக நீதியரசர் வர்மா தலைமையிலான கமிட்டியின் நீண்ட பரிந்துரை மற்றும் ஆலோசனைக்கு மிக கடுமையான, திருத்தப்பட்ட சட்டம் 2013இல் நமக்கு கிடைத்தது.

டெல்லியில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் போராட்டங்கள் வீண்போகவில்லை என்பது இதில் முக்கியமான விஷயம்.

நிர்பயாவின் தைரியம் மற்றும் அவரது இழப்பால் அவரது குடும்பம் மற்றும் நாட்டுக்கு மரியாதை தரும் வகையில் நிர்பயா சட்டம் உள்ளது.

இந்த பிரச்சனையின் தீர்வு சட்டத்தை மதிக்காத துப்பாக்கி விசையை அழுத்தி மகிழ்வடையும் போலீசார் அல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வருத்தம், இழப்பால் தீர்மானிக்கப்படுவதல்ல நீதி வழங்கல் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு.

மிக அதிக போலீஸ் பாதுகாப்பு வளையத்தில், எந்த ஆயுதமும் இல்லாமல் இருந்த நான்கு சந்தேக நபர்களை கொல்வதில் என்ன நோக்கம் உள்ளது? ஒரு உயிரிழப்பை மற்றொரு உயிரிழப்பால் சரிசெய்ய இயலாது.

Image caption சித்தரிப்புக்காக

இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது சட்டவிதியின்படி ''எந்த மனிதரின் உயிரையும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழியில் எடுக்கக்கூடாது'. ஆகவே இந்த சட்டவிதியை தாண்டி பறிக்கப்படும் உயிர்கள் சட்டத்தை மீறிய செயலாகும்.

ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக நான்கு சந்தேக நபர்கள் ஒரு வாரத்துக்குள் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை தொடங்கி எந்த முன்னேற்றமும் ஏற்படாமலே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் பங்கு இந்த விவகாரத்தில் முழுவதும் விசாரிக்கப்படவில்லை. அவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படவில்லை.

இவர்கள் தப்பியோட முயற்சித்தபோது தற்காப்பு காரணங்களுக்காக போலீஸ் சுட்டதாக அதிகாரபூர்வ தரப்பு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை UGC
Image caption என்கவுன்டர் நடந்த இடம்

தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது என்பது ஆயுதம் ஏந்திய ஒருவர் மற்றவரை கொல்ல முயற்சிக்கும்போது செய்வது தானே? போலீஸ் காவலில் இருந்த இந்த நால்வரிடமும் எந்த ஆயுதமுமில்லை. இம்மாதிரியான என்கவுன்டர் சம்பவங்கள் குறித்து ஆந்திர பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தியுள்ளோம்.

மாநிலத்தை சேர்ந்த போலீசார் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு குற்றவியல் நடைமுறைகள் மற்றும் தண்டனை சட்டத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வழங்கியிருப்பதன் காரணம், மக்களை பாதுகாக்க தானே தவிர, யாரையும் கொல்லவோ, அச்சுறுத்தவோ அல்ல.

நீதிக்காக கடுமையான, வலி நிறைந்த பயணம் மேற்கொள்ளும் சூழலிலும், போலீசாரின் ரத்த வேட்கைக்கு உடன்படுவது பெண்களாக எங்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். நீதிக்காக போராடுவது கடுமையான பயணமாக இருந்தாலும், நீதி, நியாயம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் நமக்கு மாற்று வழி பயணம் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: