உன்னாவ் வழக்கு: நட்பு, திருமணம், பாலியல் வல்லுறவு மற்றும் எரித்துக் கொலை - நடந்தது என்ன? #GroundReport

உன்னாவ் வழக்கு: நட்பு, திருமணம், பாலியல் பலாத்காரம் மற்றும் எரித்துக் கொலை -நடந்தது என்ன?

உன்னாவ் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில் மரணம் அடைந்தார்.

தீக்காயங்கள் அடைந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக லக்னோவில் இருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இரண்டு நாட்களில் அவர் தீக்காயங்களுக்குப் பலியானார்.

பெண்ணின் வீட்டில் ஏற்கெனவே துயரம் படர்ந்துவிட்டது. ஆனால், அந்தப் பெண்ணின் மரணத்துக்குப் பிறகு கிராமம் முழுக்க சோகத்தில் மூழ்கியுள்ளது. அதேசமயத்தில், அதே கிராமத்தில் வசிக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் உறவினர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். கிராமத்தில் பெருமளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரும் முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

எரிக்கப்பட்ட பெண் உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில், அடுத்த சில மணி நேரங்களில் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரின் நிலைமை

உன்னாவ் நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்துபூர் கிராமம், பிகார் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. கிராமத்தில் நுழைந்தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வசிக்கும், களிமண்ணால் கட்டி, ஓலைக் கூரை வேய்ந்த வீட்டை சிறிது தொலைவில் காண முடிகிறது.

அந்தப் பெண்ணின் வயதான தந்தை வீட்டுக்கு வெளியே அமைதியாக நின்றிருக்கிறார். வழக்கமாக அவர் தான் அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வார். ஆனால் வியாழக்கிழமை என்ன காரணத்தாலோ, அந்தப் பெண் தனியாகவே சென்றார் என்று அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், நீதிமன்ற விசாரணை தொடர்பான அல்லது தனிப்பட்ட வேறு வேலைகளுக்குத் தனது சகோதரர் அல்லது சகோதரியுடனோ அல்லது தனியாகவோ செல்வார் என்று வீட்டுக்குள் இருந்த அவருடைய அண்ணி கூறினார். உயிரிழந்த பெண், ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் கடைசிக் குழந்தையாக இருந்துள்ளார்.

காதல் திருமணத்தைத் தொடர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு

அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் இந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டு, காதல் திருமணமாகவும் முடிந்தது. ஆனால் அந்த திருமண உறவு நீடிக்கவில்லை.

அந்த ஆண் மற்றும் அவருடைய நண்பர் ஒருவருக்கு எதிராகக் கடந்த மார்ச் மாதம் கூட்டுப் பாலியல் வல்லுறவு புகார் ஒன்றை அந்தப் பெண் கொடுத்தார். அதன்பேரில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்படும் சிவம் திரிவேதி என்பவர் சிறைக்குச் செல்ல நேரிட்டது. சில தினங்களில் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

இருவரும் எப்போது திருமணம் செய்து கொண்டார்கள் என தங்களுக்குத் தெரியாது என்று அந்தப் பெண்ணின் அண்ணி தெரிவித்தார். "அந்த ஆளும் அவருடைய குடும்பத்தினரும் இங்கே வந்து தகராறு செய்து, எங்களைத் தாக்கிய போது தான் இதுபற்றி எங்களுக்குத் தெரியவந்தது. சிவத்தை நீதிமன்றத்தில் தாம் திருமணம் செய்து கொண்டதாகவும், இப்போது திருமணத்தை ஏற்க அவர் மறுப்பதாகவும் அந்தப் பெண் எங்களிடம் கூறினார்'' என்று அவர் குறிப்பிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளில் உள்ள சூழ்நிலை

இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படுபவர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட இதர நால்வரின் வீடுகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.

கோவில் எதிரே நிறையப் பெண்கள் கூடி, ஆறுதல் கூற முடியாத அளவுக்கு அழுது கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு உறவினர்கள். அவர்கள் அனைவரும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினர்.

படத்தின் காப்புரிமை சமீர் அத்மஜ் மிஸ்ரா

தனது மகன் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது அந்த சம்பவத்தில் ஈடுபடவோ இல்லை என்று முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் - சிவம் திரிவேதியின் - தாயார் கூறினார். ரேபரேலியில் அந்தப் பெண்ணுடன் ஒரு மாத காலம் தன் மகன் தங்கி இருந்ததாகக் காவல் துறையினரும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் கூறுவதை அவர் மறுத்தார்.

இந்துபூர் கிராமத்தின் தலைவரான சாந்தி தேவியின் கணவர் மற்றும் மகனும் இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். "அதிகாலையில் காவல் துறையினர் வந்து என் கணவர் மற்றும் மகனை அழைத்து சென்றனர். மற்ற பையன்களையும் அவர்கள் அழைத்துச் சென்றனர். இவ்வளவு பெரிய குற்றத்தை ஒருவர் செய்திருந்தால், எப்படி வீட்டுக்கு வந்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்க முடியும் என்று கேட்க நான் விரும்புகிறேன். உரிய விசாரணை ஏதும் இல்லாமல் எங்கள் பிள்ளைகளுக்கு கிரிமினல்கள் என்று முத்திரை குத்திவிட்டார்கள்'' என்று சாந்தி தேவி கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் மாதம் அளித்த புகாரின் பேரில் பதிவான முதல் தகவல் அறிக்கையில், சிவம் திரிவேதியுடன் சேர்த்து, சாந்தி தேவியின் மகனுடைய பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சிவம் திரிவேதி மட்டும் கைது செய்யப்பட்டார் என்றாலும், உண்மையை வெளிக் கொண்டு வருவதற்கு இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் இடையே நல்லுறவு இருந்துள்ளது

அந்தப் பெண் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4 மணி அளவில் நடந்துள்ளது. ரேபரேலி செல்லும் ரயில் அதிகாலை 5 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வரும். அதைப் பிடிப்பதற்காக, இந்தப் பெண் சென்று கொண்டிருந்த போது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவருடைய வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் நிலையம் உள்ளது. பகல் நேரத்திலேயே அந்தப் பாதையில் அதிக நடமாட்டம் இருக்காது. இதனால் தான், தீயிட்டுக் கொளுத்திய நிலையில் அந்தப் பெண் நீண்ட தூரம் ஓடிய போதிலும், யாரும் உதவிக்கு வர முடியாமல் போய்விட்டது என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் தெரிவித்தார்.

இரண்டு குடும்பத்தினருக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் நல்லுறவு இருந்து வந்தது என்று கிராமத்தினர் கூறினர். கிராமத் தலைவருடனும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு நல்ல இணக்கம் இருந்தது. தங்களுடைய ஏழ்மை நிலை காரணமாக, அரசின் திட்டங்களின் கீழ் உதவிகள் பெறுவதற்கு, கிராமத் தலைவர் நிறைய உதவிகள் செய்திருக்கிறார் என்று பெண்ணின் தந்தையும் கூறினார்.

ஆனால் இந்தச் சம்பவத்துக்கு பிறகு, அந்தக் குடும்பத்தினருக்கு இடையில் மட்டுமின்றி, அவர்களுடைய உறவினர்களின் குடும்பத்தினருக்கு இடையிலும் பகை ஏற்பட்டது. சிவம் திரிவேதி கிராமத் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தான் இதற்குக் காரணம்.

"பல முறை எங்களுக்கு மிரட்டல்கள் வந்தன. என் வீடு புகுந்து என்னைத் தாக்கி, கிராமத்தைவிட்டு ஓடிவிடுமாறு கூறினர். பல முறை காவல் துறையில் நான் புகார் அளித்தும், யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறினார்.

விடை தெரியாத பல கேள்விகள்

இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் சிவம் திரிவேதி அல்லது சுபம் திரிவேதிக்கு எதிராகக் காவல் துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

பிகார் காவல் நிலையம் இவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இது மட்டுமல்ல. சம்பவம் நடந்த உடனே, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளில் காவல் துறையினர் சோதனைகள் நடத்தியபோது, ஏறத்தாழ அவர்கள் அனைவருமே வீட்டிலிருந்துள்ளனர்.

"இந்தப் பையன்களைக் குழந்தைப் பருவத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும். அவர்கள் கிராமத்தில் எதையும் செய்ததாகப் புகார்கள் இல்லை. இதுபோன்ற கொடிய செயலை அவர்கள் எப்படி செய்திருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவரை எங்கள் கிராமத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது கிடையாது. ஒருவரை தீயிட்டு கொளுத்தும் அளவுக்கு எங்கள் கிராமத்தில் யாரும் இருக்கிறார்கள் என்பதை எங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை'' என்று கிராமத்தைச் சேர்ந்த சீதாராம் என்ற முதியவர் கூறினார்.

உன்னாவ் வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் பலரும், முதியவரின் கருத்தை ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்க மறுக்கின்றனர். மற்றவர்களுடன் சேர்த்து, ஊடகங்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது அனுதாபம் காட்டுகின்றன என்று கிராமத்தினர் சிலர் கூறினர்.

அதேசமயத்தில், இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சமும் விசாரிக்கப்படுவதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். "எரிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தான் எங்களுடைய முதன்மையான பணியாக இருக்கும். குற்றம் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதும் எங்களுடைய முக்கிய கடமையாகும்'' என்று சட்டம் ஒழுங்கு பிரிவு ஐ.ஜி.யான பிரவீண் குமார் தெரிவித்தார்.

இந்த வழக்கைக் காவல் துறை விசாரித்து வருகிறது. ஆனால் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் கவலை அடைந்துள்ளனர். உலகைவிட்டு பிரிந்த பெண்ணுக்காகவும், சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்களுக்காகவும் - அவர்கள் கவலைப்படுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: