பாலியல் வல்லுறவுக்கு 21 நாளில் மரண தண்டனை: ஆந்திராவின் புதிய சட்டம் சொல்வதென்ன?

பாலியல் வல்லுறவு செய்தால் 21 நாளில் மரண தண்டனை - ஆந்திரப் பிரதேசத்தின் புதிய சட்டத்தின் சிறப்பம்சங்கள் படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் அமில வீச்சு போன்ற கொடூரமான குற்றச் செயல்களில், அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் திஷா சட்ட மசோதா 2019 (ஆந்திரா குற்றவியல் சட்டத் திருத்த மசோதா 2019) என்றழைக்கப்படும் இந்த சட்டத்துக்கு ஆந்திரப் பிரதேச அமைச்சரவை நேற்று (வியாழக்கிழமை) ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அது அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் `திஷா' எனும் புனை பெயரால் அழைக்கப்படும் பெண் கால்நடை மருத்துவர் கடந்த மாதம், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது.

இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்தச் சம்பவம் அண்டை மாநிலத்தில் நடந்திருந்தாலும், இதை முக்கியமானதாக தமது அரசு எடுத்துக் கொண்டுள்ளது என்று கூறினார். தற்போது ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளதாகவும், அதன் மூலம் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த புதிய சட்டத்தின்படி, பாலியல் வல்லுறவு வழக்குகளில் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் 21 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கும்.

காவல் துறையினர் 7 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். அடுத்த 14 நாட்களுக்குள் நீதிமன்ற விசாரணையை முடிக்க வேண்டும். மொத்தத்தில் 21 நாட்களில் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்.

முன்னதாக, `திஷா' சட்டத்துடன் சேர்த்து, இந்திய தண்டனைச் சட்ட நடைமுறைகளில் 354 (e) மற்றும் 354 (f) பிரிவுகளைச் சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு 10 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க 354 (f) பிரிவு வகை செய்யும். அதுமட்டுமின்றி, கொடும் குற்றச் செயல்களுக்கு ஆயுள் சிறை விதிக்கவும் இது வழிவகை செய்கிறது.

இப்போதுள்ள நிலையில், இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

இ-மெயில், சமூக வலைத்தளம் மற்றும் பிற இணையதளங்களில் பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பதிவிட்டால், 354 (e) பிரிவின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும். முதல் முறையாக குற்றஞ்சாட்டப்படும் நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே குற்றத்தைச் செய்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

விரைவான நீதி கிடைக்க தொடக்க நிலை நடவடிக்கைகள்

ஆந்திரப் பிரதேச `திஷா' சட்டம் 2019 உருவாக்கும் முடிவுக்கு திரைப்பட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

"பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பிரிவினராக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பைத் தருவதாக இந்தச் சட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. `திஷா' சம்பவம் நம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட உணர்வுகள், உடனடி நீதி தேவை என்ற அவசியத்தை உணர்த்தின. உடனடி நீதி என்பதைவிட, விரைவான நீதி என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எல்லோரும் நம்புகின்றனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது'' என்று தன்னுடைய அறிக்கையில் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை VAMSIKAKA / TWITTER
Image caption சிரஞ்சீவி

``4 மாதங்களுக்கும் மேல் என இருந்த விசாரணை காலத்தை 21 நாட்கள் குறைப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது, மற்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது முதலிய முயற்சிகளை பாராட்டுகிறேன். குற்றம் செய்யக் கூடிய சூழ்நிலையில் இருப்பவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டங்களை உருவாக்கும் அரசுக்கு முழு மனதுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பெண்கள் சுதந்திரமாக, அச்சமின்றி வாழ முடியும் என நம்புகிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

`பிரச்சனையின் வேரை தொடவில்லை'

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், உணர்ச்சிகளின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்குவது புத்திசாலித்தனமானது அல்ல என்று ஆந்திரப் பிரதேச பார் கவுன்சில் உறுப்பினர் முப்பல்ல சுப்பாராவ் கூறியுள்ளார்.

பிபிசி செய்தியாளரிடம் பேசிய அவர், விரைவான நீதி வழங்குவது தொடர்பாக பல ஆணையங்கள் மற்றும் நாடாளுமன்ற கமிட்டிகளின் ஏராளமான பரிந்துரைகள் உள்ளதாகத் தெரிவித்தார்.

``10 லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தது 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று தேசிய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இப்போது 13 பேர் என்ற நிலைதான் உள்ளது. அதிலும்கூட, பல இடங்கள் காலியாக உள்ளன. ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் 24 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் 13 பேர் மட்டுமே உள்ளனர். நிலைமை இப்படி இருக்கும் போது 21 நாட்களுக்கு தீர்ப்பளிக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியமாக இருக்கும்'' என்று அவர் சந்தேகங்கள் எழுப்பினார்.

Image caption நாடு முழுக்க ஒவ்வொரு ஆண்டும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

``பாலியல் பலாத்கார குற்றம் நடந்தால், தடயவியல் துறையின் அறிக்கையைப் பெறுவதற்கே பல நாட்கள் ஆகும். இந்த நிலையில், இதுபோன்ற வழக்குகளில் ஒரு வாரத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மசோதா கூறுகிறது. அது எப்படி சாத்தியம்? இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்வது நல்லது'' என்று அவர் கருத்து தெரிவித்தார்.

`நடவடிக்கைகள் தேவையின் அடிப்படையில் அமையவில்லை'

``குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், அதை செயல்படுத்தத் தேவையான அமைப்புகள் பற்றி மசோதாவில் எதுவும் கூறப்படவில்லை'' என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) தேசியச் செயலாளர் டி. ரமாதேவி கூறியுள்ளார்.

``100 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், பதில் அளிப்பதற்கு போதிய அலுவலர்கள் கிடையாது. இதுபோன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீதித் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. தேவைக்கு ஏற்ப பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெண்கள் கடத்தப்படும் குற்றச் செயல்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் 4வது இடத்தில் உள்ளது. இவற்றில் எதுவுமே இந்த மசோதாக்களில் குறிப்பிடப்படவில்லை'' என்று அவர் கூறினார்.

``கௌரவக் கொலைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி இந்த மசோதாக்களில் எதுவும் இல்லை. அவர்களை ஏன் இந்த அரசு புறக்கணித்துள்ளது? பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் மசோதாக்களில் எதுவும் குறிப்பிடவில்லை'' என்று ரமாதேவி கருத்து தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: