ஜாமியா போராட்டம் - தடியடி: வலுக்கும் போராட்டங்கள் - மோதி வேண்டுகோள்; பிரியங்கா தர்ணா

டெல்லியில் நடைபெற்ற போராட்டம் படத்தின் காப்புரிமை Getty Images

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வன்முறைப் போராட்டங்கள் துரதிருஷ்டவசமானவை, ஆழமான வருத்தத்தை தருபவை என்று பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி.

"விவாதம், உரையாடல், மாறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் அவசியமான அம்சங்கள். ஆனால், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், சஜக வாழ்க்கையை கெடுத்தல் ஆகியவை நமது விழுமியங்களில் இல்லை" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பேருந்துகளுக்கு போலீசாரே தீவைப்பது போல காட்டும் வீடியோக்கள் வெளியாவது குறித்தோ, போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்தோ அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பிரியங்கா காந்தி போராட்டம்

படத்தின் காப்புரிமை ANI

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில், டெல்லியிலுள்ள 'இந்தியா கேட்' அருகே தனது கட்சியினருடன் வந்த பிரியங்கா காந்தி, "மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்" என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடரும் போராட்டங்கள்

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலையில் லக்னோ நட்வா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்னோ மாணவர் போராட்டங்கள் குறித்து போலீஸ் கண்காணிப்பாளரான கலாநிதி நைதானி கூறுகையில், கிட்டத்தட்ட 30 வினாடிகள் அளவுக்கு கல்லெறி சம்பவங்கள் நடந்தன. ஏறக்குறைய 150 பேர் இந்த போராட்டத்துக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். தற்போது மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்' என்று கூறினார்.

இதேபோல் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image caption புதுவை மாணவர்கள் போராட்டம்

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோல் தமிழகத்திலும் இந்திய மாணவர் கூட்டமைப்பால் மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றன.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி நடைப்பயணம் மேற்கொண்டார்.

வழக்கு தொடருவோம்

படத்தின் காப்புரிமை ANI

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் மற்றும் போலீசாரின் நடவடிக்கைகளை குறித்து இன்று (திங்கள்கிழமை) பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் நுழைந்ததற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடரவுள்ளோம். பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து வளாகத்தை புதுப்பிக்கமுடியும். ஆனால் மாணவர்களுக்கு நிகழ்ந்ததை நீங்கள் சரிசெய்ய முடியாது'' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ''நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அளவு விசாரணை நடத்த நாங்கள் கோரிக்கை வைப்போம்'' என்றார்.

''மாணவர்கள் நடத்தப்பட்ட விதத்தை கண்டு நான் வேதனை அடைகிறேன். இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டும் தனியாக இல்லை என்பதை இந்நேரத்தில் தெரியப்படுத்துகிறேன். நானும் அவர்களுடன் இருக்கிறேன்'' என்றார்.

ஜாமியா பல்கலைகழகத்தில் போலீசாரின் நடவடிக்கைள் - துணைவேந்தர் கூறுவது என்ன?

என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்?

ஜாமியா மற்றும் அல்கர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட "வன்முறை" தொடர்பாக, தாமாக முன் வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது.

ஆனால் அதே சமயம் போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தாலோ அல்லது பொதுச் சொத்துக்கு சேதாரம் விளைவிக்கப்பட்டால் தாங்கள் இதனை விசாரிக்கப்போவதில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இன்று (திங்கள்கிழமை) தலைமை நீதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் ஜாமியா மற்றும் அலிகர் பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

நாடு முழுவதும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கோரினார்.

"நாடு முழுவதும் மனித உரிமைக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நாட்டில் அமைதியாக நடக்கும் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். போலீஸாரே பேருந்துகளுக்கு தீவைத்து கொளுத்திவிட்டு மாணவர்கள் மீது பழி சுமத்துகின்றனர்" என்று இந்திரா ஜெய்சிங் குறிப்பிட்டார்.

”வன்முறை தொடர்ந்தால் விசாரிக்கப்போவதில்லை” - உச்ச நீதிமன்றம்

என்ன நடந்தது?

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகாமை பகுதிகளான சராய் ஜுலேனா பகுதி மற்றும் மதுரா சாலையில் பல பேருந்துகள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை ANI

இது வரை நடந்தது என்ன?

 • டெல்லியின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன.
 • ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் வலுக்கட்டாயமாக போலீசார் நுழைந்ததாகவும், மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பல்கலைக்கழகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
 • இந்த போராட்டங்களின் எதிரொலியாக அருகாமை பகுதிகளான ஓக்லா, ஆர்.கே. புரம், முனிர்கா உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 • மாணவர்கள் போராட்டம் குறித்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் கூறுகையில், ''போராட்டக்காரர்கள் யார்? நூலகத்தில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் யார் என போலீசாரால் இனம்காண முடியவில்லை. ஏராளமான மாணவர்கள் மற்றும் பல்கலைகழக பணியாளர்கள் போலீசாரின் நடவடிக்கையில் காயமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கைள் தொடர்பாக போலீசார் அனுமதிகூட வாங்கவில்லை என கொந்தளிப்பு நிலவுகிறது'' என்று கூறியுள்ளார்.
 • தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை ஜாமியா பல்கலை. மாணவர்கள் கண்டித்துள்ளனர்.
 • போலீஸார் மாணவர்களை அடிப்பது போன்றும், மாணவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் போன்றும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
 • போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படத்தின் காப்புரிமை ANI
Image caption டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
 • போராட்டம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
 • காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹோலி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், "ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 26 மாணவர்கள் காயங்களுக்காக இங்கு அனுமதிக்கப்பட்டனர்; அதில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையை சேர்ந்த இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என தெரிவித்தார்
 • இரவில் இந்த சம்பவம் குறித்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
 • இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "டெல்லியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
 • இதேபோல், டேராடூன், அசாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
 • இதனிடையே ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கையை கண்டிப்பதாக தெரிவித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.
படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA / BBC
 • குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோஷங்கள் எழுப்பிவந்த அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
 • இதனை தொடர்ந்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பதிவாளர் அப்துல் ஹமித் விடுத்துள்ள செய்தியில், 'தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு குளிர்கால விடுமுறையை உடனடியாக அறிவிக்கிறோம். ஜனவரி 5-ஆம் தேதி மீண்டும் பல்கலைக்கழகம் திறக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 • உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி விடுத்த செய்தியில், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எந்த ஒரு வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும், மக்கள் அமைதி காக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: