உன்னாவ் வன்புணர்வு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குற்றவாளி என தீர்ப்பு

குல்தீப் சேங்கர் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கர்.

உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கர் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், வழங்கவேண்டிய தண்டனை குறித்து நாளை செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் வாதிடுவார்கள். பாலியல் வன்புணர்வு குற்றத்தில் சேங்கர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடத்தல் குற்றச்சாட்டில் என்ன முடிவு என்று இன்னும் தெரியவில்லை.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான சஷி சிங் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் போக்சோ சட்டத்தை பயன்படுத்திய விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டிய சிபிஐ போக்கை கண்டித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்புணர்வு) மற்றும் பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) பிரிவு 5(C) மற்றும் 6 ஆகியவற்றின் கீழ் சேங்கர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

உன்னாவ் சட்டமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற 19 வயது இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார்.

இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அந்தப் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நடவடிக்கை கோரி அந்தப் பெண் உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

அதற்கு மறுநாள் போலீஸ் காவலில் அவரது தந்தை இறந்தார். குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வின் தம்பி அவரை தாக்கியதாகக் கூறப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சேங்கருக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும் கொல்கத்தாவில் நடந்த ஒரு போராட்டம்.

இதையடுத்து எம்.எல்.ஏ. சேங்கர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் அவரது உறவினர் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் தீவிர காயம் அடைந்தனர்.

கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.

முதலில் இது விபத்து என்று போலீஸ் கூறியது. எனினும், பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆகஸ்டு 1ஆம் தேதி சேங்கர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவித்தது.

சில வாரங்களுக்கு முன்பு, உன்னாவில் வேறுறொரு வன்புணர்வு சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண் ஒருவர், அதுகுறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: