ஜாமியா மாணவர் போராட்டம்: டெல்லி போலீசார் பேருந்துகளுக்கு தீ வைத்தார்களா? #BBCFactCheck

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் படத்தின் காப்புரிமை Ani

டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த ஆர்பாட்டங்களின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களின் காணொளிகள் வைரலாகி வருகின்றன.

இந்த காணொளி ஒன்றில், எரிந்து கொண்டிருக்கும் இரு சக்கர வாகனம் ஒன்றின் தீயை அணைக்க முயற்சிக்கிறார் ஒருவர். அருகிலேயே ஒரு டெல்லி போக்குவரத்துக்கு கழகப் பேருந்து ஒன்றும் நிற்கிறது.

காவல்துறையைச் சேர்ந்த சிலர் மஞ்சள் பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பப்பட்ட சில பொருட்களை காரில் கொண்டு செல்கின்றனர். இந்த 20 வினாடி நீளமுள்ள காணொளியில், "அணைந்துவிட்டது... அணைந்துவிட்டது..." என்ற குரல் பின்னால் இருந்து கேட்கிறது.

இந்த காணொளியை ட்வீட் செய்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோதியா டெல்லி காவல்துறையினர் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினார். "தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தில் டெல்லியில் பாஜக தீ வைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி எந்தவொரு வன்முறைக்கும் எதிரானது. இது பாஜகவின் மலிவான அரசியல். இந்த காணொளியில், காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் எவ்வாறு தீ வைக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்," என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பிறகு, மற்றொரு ட்விட்டர் பதிவை வெளியிட்ட அவர், "சீருடை அணிந்த இவர்கள் பேருந்துகளில் தீ எரியத் தொடங்கும் முன்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற கேன்களில் இருந்து பேருந்துகளின் மீது தெளிப்பது என்ன? இதைப் பற்றி உடனடியாக ஒரு நடுநிலையிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது யாருடைய உத்தரவின் பேரில் செய்யப்பட்டது? மோசமான அரசியல் செய்யும் பாஜக காவல்துறையினர் மூலம் தீ வைத்தது என்பதை இதில் தெளிவாக பார்க்கலாம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

இதையடுத்து, தீ வைத்தது காவல்துறையினரா அல்லது போராட்டக்காரர்களா என்பது குறித்த விவாதங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இந்த காணொளியின் உண்மைத் தன்மையை கண்டறிய பிபிசியின் உண்மை கண்டறியும் குழு ஆய்வைத் தொடங்கியது. டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் எம்.எஸ்.ரந்தாவாவை தொடர்புகொண்டோம். "காணொளி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. காவல்துறை தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது," என்றார்.

இதன் பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "பேருந்துக்கு காவல் துறையினரே தீ வைத்ததாக வதந்திகள் பரவி வருகின்றன," என்றார். காணொளியில் காணப்படும் DL1 PD-0299 எனும் பதிவெண் கொண்ட பேருந்தில் தீ பிடிக்கவேயில்லை. அதில் ஏற்பட்ட ஒரு தீயை அணைக்கும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார் அவர்.

இதன் பின்னர், பிபிசி குழு டெல்லியில் உள்ள நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல் நிலையத்திற்கு சென்றது. ஏராளமான காவல்துறையினர் தலையில் ஹெல்மெட் அணிந்து கையில் தடிகளை ஏந்தியவாறு நின்று கொண்டிருந்தனர். காவல் நிலைய கூடுதல் பொறுப்பாளர் மனோஜ் வர்மாவை சந்தித்து பேசினோம்.

இந்த காணொளியை நாங்கள் அவருக்குக் காட்டியபோது, ''இந்த காணொளி எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்ததுதான். காணொளியில் நிற்கும் பேருந்தில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். அது சேதப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் இரு சக்கர வாக்கங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நாங்கள் அதை அணைக்க முயற்சித்தோம்,'' என்று அவர் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் பேருந்து இல்லை. இது டிப்போவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று காவல்துறையினரிடம் கேட்டோம். முதலில், இதுவரை இல்லை என்று சொன்னார் மனோஜ் வர்மா.

ஆனால் அவரிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டபோது, "முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சில பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன, விஷயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அதுபற்றி உங்களிடம் விளக்கமாக பேசவோ அல்லது அதைக் காட்டவோ முடியாது," என்று கூறினார்.

இந்த பகுதியில் எரிந்துபோன நான்கு டெல்லி போக்குவரத்துக்கு கழகப் பேருந்துகள், சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் முற்றிலும் சேதமடைந்த பேருந்து, கார் ஆகியவற்றைக் கண்டோம்.

இந்த விஷயத்தில் மணீஷ் சிசோதியாவின் நிலைப்பாட்டை அறிய பிபிசி அவரை தொடர்பு கொண்டது. ஆனால் எங்கள் தொலைபேசி அழைப்பிற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சம்பவ இடத்தில் தானும் இருந்ததாக என்.டி.டி.வி பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் கூறுகிறார். அவர் தனது ட்விட்டரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "கும்பல் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தது. அதை அணைக்க காவல்துறையினர் முயற்சி செய்தார்கள். நான் அங்கே இருந்தேன் அது ஒரு கட்டுக்கடங்காத கும்பல். இது போராட்டம் நடத்துவதற்கான வழிமுறை கிடையாது.''

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில சாட்சிகளுடன் பேசினோம். அப்பகுதியில் உள்ள தனியார் வளாகத்தின் பாதுகாப்பு ஊழியர் ராகுல் குமார் என்பவரிடம் பேசினோம். "இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு முதல் மூன்று மணியளவில் நடந்தது. ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தனர். அப்போதுதான் தீ வைக்கப்பட்டது. காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை நாங்கள் பார்க்கவில்லை,'' என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்.

எனினும், அவரின் கூற்றை பிபிசி குழு காணொளியாகப் பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

காணொளியைப் பகிர்வதன் மூலம் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக காவல்துறையினர் மீது குற்றம் சாட்டுவது தவறு என்று பிபிசி தனது விசாரணையில் கண்டறிந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: