குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்பட வாய்ப்புள்ளதா?

பிரதமர் நரேந்திர மோதியுடன் முக்தர் அப்பாஸ் நக்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரதமர் நரேந்திர மோதியுடன் முக்தர் அப்பாஸ் நக்வி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல பகுதிகளில் போராட்டம் வன்முறையாக உருமாறியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறிவருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர் சரோஜ் சிங், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியுடன் நடத்திய நேர்காணலை கேள்வி-பதில் வடிவில் காண்போம்.

கேள்வி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கியபோதோ அல்லது அதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் விவாதம் நடைபெற்றபோதோ, இதை எதிர்த்து இவ்வளவு பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்று நீங்களோ அல்லது உங்களது கட்சியோ எதிர்பார்த்தீர்களா?

பதில்: 1951இல் தொடங்கிய தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் பணி 1971இல் அடுத்த கட்டத்தை அடைந்தது. அதன் பிறகு, 2003இல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, அப்போதிருந்த காங்கிரஸ் அரசு மீண்டும் அந்த பணியை ஆரம்பித்தது.

எந்தவொரு நாடாவது ஊடுருவல்களை அனுமதிக்குமா அல்லது ஒரு நாடு தனது பிராந்தியங்களுக்குள் சட்டவிரோத ஊடுருவல்களின் காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்குமா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

கேள்வி: நாடுமுழுவதும் மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். குறிப்பாக, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் காவல்துறையினர் நுழைந்து மாணவர்களை தாக்கப்பட்டது குறித்து அனைவருக்கும் தெரியும். அதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இல்லை, அதை விடுங்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். எதற்காக இந்த போராட்டம் நடக்கிறது? நரேந்திர மோதி அவர்களை சுட்டுவிட்டாரா? அவர்கள் இனி படிப்பை தொடர முடியாது என்று மோதி சொன்னாரா? அவர்கள் இனி சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நரேந்திர மோதி சொன்னாரா? இல்லை, பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் இருக்கவே முடியாது என்று அவர் சொன்னாரா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முக்தர் அப்பாஸ் நக்வி

கேள்வி: மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, இது முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டது. அதாவது, இந்த சட்டத்தில் முஸ்லிம்களுக்கு இடமளிக்காதது அவர்கள் குடியுரிமை பெறுவதை தடுக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு என்று கூறப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இப்படி எப்போது அரசாங்கம் சொன்னது? முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா?

கேள்வி: ஆனால், முஸ்லிம்களும் இந்தியாவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றும் அந்த சட்டத்தில் கூறப்படவில்லையே?

பதில்: நீங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் தொடர்புபடுத்துகிறீர்கள். சம்பந்தம் இல்லாத இரு விடயங்கள் தொடர்புப்படுத்தப்படுவதால், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதுகுறித்து குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது.

கேள்வி: இதன் மூலம், குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் வெவ்வேறானவை என்று நீங்கள் கூறுகிறீர்களா?

பதில்: கண்டிப்பாக, அவை இரண்டும் வெவ்வேறானவைதான்.

கேள்வி: அப்போது அவை இரண்டும் துளியும் தொடர்பே இல்லையா?

பதில்: ஆமாம், அவை இரண்டுக்கும் தொடர்பில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மதரீதியிலான அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கானது.

கேள்வி: குடியுரிமையை நிரூபிக்க மக்கள் ஆவணங்களை வழங்க வேண்டும்; ஆனால், பலரிடம் ஆவணங்கள் இல்லை. அதனால்தான் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு எழுந்தது. எனவே, எந்த வகையில், என்.ஆர்.சி. மற்றும் சி.ஏ.ஏ. ஆகியவை வேறுபடுவதாக நீங்கள் கருதுகிறீர்கள்? என்.ஆர்.சி-யில் உள்ள முஸ்லிம்களை இந்துகளிடமிருந்து பிரிக்க சி.ஏ.ஏ. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது என்று ஏன் கருதக்கூடாது?

பதில்: இது சமூகத்தில் பயத்தையும், குழப்பத்தையும் விளைவிக்கக் கூடிய கருத்து.

கேள்வி: இதில் உண்மையே இல்லை என்று கூறுகிறீர்களா?

பதில்: கண்டிப்பாக, உண்மை இல்லை. ஒரு சதவீதம் கூட இதில் உண்மை இல்லை. இந்தியாவில் பல தலைமுறைகளாக வாழும் முஸ்லிகளுக்கு இந்த சட்டத்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதை நான் மீண்டுமொருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: ஆனால், அவர்களும் தங்களது ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டுமல்லவா?

பதில்: முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும் தங்களது ஆவணங்களை காண்பிக்க வேண்டும். அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இதுகுறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் பல்வேறு விளக்கங்களை அளித்த பிறகும் கூட, சிலர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்.

கேள்வி: நாடு முழுவதும் 22 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்துவதில், மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதா?

பதில்: சரியான தகவல்களை பரப்புவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒரு சில சமயங்களில் போலிச் செய்திகள் ஆக்கிரமித்து தடுத்துவிடுகின்றன.

கேள்வி: நாடுமுழுவதும் ஒரே மாதிரியான சட்டம் வேண்டும் என்று சொல்லி அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அதன் பிறகு, என்.ஆர்.சி. கொண்டுவரப்பட்டு, அதிலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் சிலவற்றுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டது. அது எப்படி, உங்களது தேவைக்கேற்ப சட்டத்தை மாற்ற முடியும்?

பதில்: இல்லை, அரசமைப்பு சட்டத்தின்படியே நாங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்தோம்.

கேள்வி: ஆனால், இந்த சட்டங்கள் உங்களது கட்சியின் வசதிக்கேற்ப இயற்றப்படுவது போன்றுள்ளதே?

பதில்: இல்லை, நாட்டைவிட எங்களது கட்சி மேலானது அல்ல. அதே சமயத்தில், நாங்கள் செய்வதாக உறுதியளித்தவற்றை கண்டிப்பாக செய்வோம். நாங்கள் பழிவாங்கும் எண்ணத்துடன் எதையும் செய்யவில்லை.

கேள்வி: ஆனால், மதத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்படுகிறார்களே? இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் சம உரிமை உள்ளது, ஆனால் அதை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். நீங்கள் அந்த மதத்தை சேர்ந்த மக்களையும் முன்னிறுத்தியே நாடாளுமன்றத்திலும், அரசாங்கத்திலும் செயல்படுகிறீர்கள்.

பதில்: இல்லை, ஊடகங்களால் பரப்பப்படும் அடிப்படை ஆதாரமற்ற கதைகளை மக்கள் நம்பவில்லை. மக்களுக்கு மோதி மீது முழு நம்பிக்கை உள்ளது. அரசமைப்பு, சமூக, பொருளாதார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாக்க மோதி உறுதிபூண்டுள்ளதை மக்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

கேள்வி: அரசமைப்பு சட்டம் 370 நீக்கம், முத்தலாக், அதற்கடுத்து அயோத்தி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் நாட்டிலுள்ள முஸ்லிம்களிடையே ஒருவித அச்சம் நிலவுவதை போன்றுள்ளது. சிறுபான்மையின சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் உங்களிடம், இதுதொடர்பாக மக்கள் சந்தித்து கவலைகளை வெளிப்படுத்தவில்லையா?

பதில்: ஆம், நான் தினமும் முஸ்லிம்கள் உள்பட 300 - 400 மக்களை சந்தித்து பேசி வருகிறேன்.

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: அவர்கள் இதுதொடர்பாக தங்களது அச்சத்தை வெளிப்படுத்தினார்களா?

பதில்: ஊடகங்கள்தான் அச்சத்தை பரப்புகின்றன. மக்களிடம் எவ்வித பயமும் இல்லை. பாரபட்சமான மனநிலை கொண்டவர்களால்தான், மக்களிடையே அச்சம் ஏற்படுத்தப்படுகிறது. மோதி ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்கள் அரசு வேலைகளை இழந்துள்ளார்களா? அவர்கள் கல்வி அதிகாரம் இழந்துவிட்டார்களா? அல்லது மற்றவர்களைப் போல அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லையா?

கேள்வி: தற்போது நிலவும் சூழ்நிலையை சரிசெய்வதற்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு விதிக்கப்படுமா அல்லது மோதல் நிலை தொடர்ந்து நீடிக்குமா?

பதில்: எது செய்யப்பட வேண்டுமோ அது செய்யப்படும். நாங்கள் ஜனநாயக விழுமியங்களை நம்புகிறோம். நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவது மோதி தலைமையிலான அரசாங்கத்தின் முன்னுரிமை. நாட்டில் பிளவு மற்றும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளை வலியுறுத்துவோம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

எந்தவொரு கிளர்ச்சியாலும் நாங்கள் மிரட்டப்படுவதில்லை. கிளர்ச்சிகள் காரணமாக நாங்கள் பின்வாங்க மாட்டோம். போராட்டங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும்; அவை நடக்க வேண்டும். ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை அச்சம், குழப்பம், வன்முறை ஆகியவற்றைப் பரப்புவதற்குப் பயன்படுத்த கூடாது. வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது.

கேள்வி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால், முடிவை திரும்ப பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா?

பதில்: அனுமானத்திற்கு பதில் சொல்ல முடியாது. இதன் காரணமாகவே மக்களிடையே தற்போது குழப்பம் நிலவுகிறது.

கேள்வி: இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் எழுபது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பதில்: இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு தக்க நேரத்தில் தனது நிலைப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: