தந்தையை கவனிக்க தவறிய மகன்: சொத்தை பறித்து பாடம் சொன்ன சார் ஆட்சியர்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: தந்தையைப் பராமரிக்காத மகனிடமிருந்து சொத்து பறிமுதல்

பட மூலாதாரம், Johnrob / GETTY

திருநெல்வேலியில் சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தந்தையைப் பராமரிக்காத மகனிடமிருந்து சொத்தைப் பறிமுதல் செய்து தந்தையிடமே சார்ஆட்சியா் ஒப்படைத்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர், கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் பூதத்தான்பிள்ளை (85). இவரது முதல் மனைவி அம்மாபொன்னுவுக்கு மகாலிங்கம் என்ற மகனும், 2ஆவது மனைவி பார்வதிக்கு முருகன் என்ற மகனும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.

பூதத்தான்பிள்ளை, முருகனுடன் மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டை பூதத்தான்பிள்ளையிடமிருந்து முருகன் எழுதி வாங்கிக்கொண்டு, அதை தனது மனைவியின் பெயருக்கு மாற்றியுள்ளார். பின்னர், அவர் தந்தையைப் பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பூதத்தான்பிள்ளை வழக்குரைஞர் ஜெனி என்பவர் மூலம் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து, முருகன் வசமுள்ள ரூ. 75 லட்சம் மதிப்பிலான வீட்டை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்குமாறு திருநெல்வேலி சார்ஆட்சியருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சார்ஆட்சியா் மணீஷ் நாராணவரே விசாரணை நடத்தி, மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2007, பிரிவு 23இன் படியும், மனுதாரர், எதிர்மனுதாரர் வாக்குமூலங்களின் அடிப்படையிலும், முருகன் எழுதிய வாங்கிய, அவர் தன் மனைவி பெயருக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மென்ட் ஆவணங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, பூதத்தான்பிள்ளையிடம் அவரது சொத்தை சார்ஆட்சியர் வியாழக்கிழமை ஒப்படைத்தார் என அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர்: நமிதாவை களமிறக்க தமிழக பா.ஜ.க, திட்டம்

பட மூலாதாரம், NAMITHA / FACEBOOK

தமிழக பா.ஜ.,வில் உள்ள, நடிகர், நடிகையர், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் களமிறக்கப்பட உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில், அதிக பதவிகளை பிடிக்க வேண்டும் என்பதில், தமிழக பா.ஜ., முனைப்புடன் உள்ளது.

தேர்தல் பணிக்காக, பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில், பிரசாரம் மேற்கொள்ள, தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், கலைத் துறையை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து, பிரசாரம் மேற்கொள்ளும் பணி, மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில், தமிழக பா.ஜ., கலைப்பிரிவு ஆலோசனைக் கூட்டம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

மாநிலச் செயலர் கே.டி.ராகவன், நடிகர்கள் எஸ்.வி.சேகர், ராதாரவி, கங்கை அமரன், நடிகையர் நமிதா, காயத்ரி ரகுராம் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நடிகர், நடிகையர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சிலர், தங்களை முறையாக பயன்படுத்தவில்லை என ஆதங்கப்பட்டனர். பெரும்பாலானோர், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு வர, சம்மதம் தெரிவித்துள்ளனர். திரையுலகப் பிரமுகர்களின் தேதிகள் பெறப்பட்டு, அவர்கள் பிரசாரம் செய்யும் இடம், தேதி ஆகிய விபரம், பின்னர் அறிவிக்கப்படும் என, வானதி சீனிவாசன் தெரிவித்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'சென்னை அண்ணா நகரை விட ஸ்டெர்லைட் பகுதி பாதுகாப்பானது'

பட மூலாதாரம், Getty Images

சென்னை அண்ணா நகரை விட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பவர் பாதுகாப்பாக இருப்பதாக, அந்த நிறுவனத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடியதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று மற்றும் நீர் மாசு அளவின் தரவுகளை வைத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே இருக்கும் சிப்காட் பகுதியில் காற்றின் தரம் ஆலை மூடுவதற்கு முன்பு 90 என்ற அளவிலும், மூடப்பட்ட பின்பு 93 என்ற அளவிலும் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், சென்னை அண்ணாநகரில் காற்றின் அளவு மொத்த சராசரியாக 108 உள்ளது என்று ஆலை சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிஎஸ் ராமன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 2018ஆம் ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டது.

"நாங்கள் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். ஆனால், தமிழக அரசு தடை விதித்துவிட்டது. இது அதிகாரிகளின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை காண்பிக்கிறது" என பி.எஸ் ராமன் வாதாடினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: