குடியுரிமை திருத்தச் சட்டம்: ஜாமியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், MONEY SHARMA via getty images

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்றும் (வெள்ளிக்கிழமை) இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது, நேற்று காவல் துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்த இருவரது உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெறும் போராட்டத்தில் காவல்துறையினரும் போராட்டக்கார்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகியுள்ளது.

மாநிலத் தலைநகர் லக்னௌ மட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோதியின் மக்களவைத் தொகுதியான வாரணாசி, பிரோசாபாத், பிஜ்னோர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைகளும் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால், அலகாபாத் உயர் நீதிமன்றம் இது குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு இன்று சென்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு, அங்கு டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரித்தது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த டெல்லி காவல்துறையினர் நூலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாகவும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

பட மூலாதாரம், Getty Images

டெல்லி காவல் துறை மத்திய காவல் படை என்பதால் டெல்லி மாநில அரசின்கீழ் இல்லாமல், இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் தொடரும் போராட்டம்

டெல்லியில் வட கிழக்கு பகுதியில் 12 காவல்நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற எடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கை இது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலையங்களின் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

டெல்லியில் அணிவகுப்பில் ஈடுபட்ட துணை ராணுவத்தினர்

நேற்று டெல்லியின் சில பகுதிகளில், அரசு அதிகாரிகளின் உத்தரபடி, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேலும் வோடஃபோன், ஜியோ, பிஎஸ்என்எல் சேவைகளும் குறிப்பிட்ட பகுதிகளில் முடக்கப்பட்டிருந்தன.

சென்னை போராட்டக்காரர்கள் மீது வழக்கு

நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற டி.எம். கிருஷ்ணா, திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த போராட்டத்தில், பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், பேராசிரியர்கள், திரைப்பட நடிகர் சித்தார்த், கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

படக்குறிப்பு,

மேட்டுபாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கோவையில் கடையடைப்பு

பட மூலாதாரம், Getty Images

கோவை அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அனைத்து சுன்னத் ஜமாத் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு மற்றும் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புகடை உட்பட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கபட்டுள்ளனர். காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படக்குறிப்பு,

கோவை போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் திரள்

திறக்கப்பட்ட கடைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலமர்த்தப்பட்டுள்ளனர்.

குஜராத் போராட்டம்

வியாழக்கிழமையன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் நடந்தது. அகமதாபாத்தில் புது சட்டத்தை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.

ஆனால் அகமதாபாத்தின் ஷா ஆலம் பகுதியில் நிலைமை கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது. ஏகப்பட்ட போராட்டக்காரர்கள் கைகளில் பதாகைகளுடன் போராடினர்.

மறுபக்கம் போலீசார் நின்று கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் காவல்துறையை தாக்கத் துவங்கினார்கள்.

இந்த மோதலில் பத்துக்கும் அதிகமான போலீசார் காயமடைந்தனர்.

3 பேர் பலி

நேற்று கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் போலீஸ் நிலையத்துக்கு தீவைக்க முயன்றவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டது.

தற்போது மங்களூருவில் அமைதி நிலவுவதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மூத்த கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று காலை தெரிவித்தார்.

நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

உ.பி. தலைநகர் லக்னௌவில் பரிவர்த்தன் சௌக் பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 20 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள், 3 பேருந்துகள், 4 ஊடக நேரலை வண்டிகள் கொளுத்தப்பட்டன என்று ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், லக்னௌ போராட்டத்தில் ஒரு போராட்டக்காரர் இறந்தது பற்றி பேசிய உ.பி. போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், "எங்கள் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. எப்படி மரணம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. போராட்டத்தாலோ, போலீஸ் நடவடிக்கையாலோ அது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறினார்.

பூக்கொடுத்த போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாருக்கு ரோஜா மலர்களை வழங்கினர். அதில் பெண் ஒருவர் போலீஸ் ஒருவருக்கு மலர் கொடுக்கும் மேற்கண்ட புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

மம்தாவிற்கு கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்து ஐ.நா சபை முன்னிலையில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள மம்தா பேனர்ஜிக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா இந்திய நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: