குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சென்னையில் நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குப்பதிவு

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்குபெற்றதற்காக எம்.பி. திருமாவளவன், பாடகர் டி.எம்.கிருஷ்ணா, நடிகர் சித்தார்த், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், முன்அனுமதி பெறாமல் பங்குபெற்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் பிபிசிதமிழிடம் உறுதிப்படுத்தினார்.

''ஐந்து நபர்களாக இருந்தாலும், 500 நபர்களாக இருந்தாலும் முன்அனுமதி பெற்று போராட்டம் நடத்தவேண்டும். அனுமதி வாங்கவில்லை என்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். இது நாங்கள் எப்போதும் பின்பற்றும் நடைமுறை. பிரபலங்கள், மாணவர்கள் என யாராக இருந்தாலும் இந்த விதி பொருந்தும்,''என விஸ்வநாதன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

வழக்கு பதிவாகியுள்ளது குறித்து பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, ''தற்போதுவரை எனக்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எதற்காக இந்த வழக்கு என தெரிந்துகொண்டு பேசுவேன்,'' என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த வாரம் முதல் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் போராட்டத்தில் மாணவர்கள், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: