குடியுரிமை திருத்த சட்டம்: உத்தர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு, டெல்லியில் வாகனங்கள் எரிப்பு

பட மூலாதாரம், Anadolu Agency via getty images
டெல்லியிலும், உத்தர பிரதேசத்தின் பல இடங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் புலந்சர் நகரில் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவமும் நடந்துள்ளது.
பாக்ராச்சில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்கினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெறும் போராட்டத்தில் காவல்துறையினரும் போராட்டக்கார்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகியுள்ளது.
மாநிலத் தலைநகர் லக்னௌ மட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோதியின் மக்களவைத் தொகுதியான வாரணாசி, பிரோசாபாத், பிஜ்னோர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைகளும் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றம் இது குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
வதோதராவில் மூன்று பேர் கைது
உத்தர பிரதேசத்தின் வதோதராவில் 3 பேரை கல்லெறிந்து தாக்கியதாக கைது செய்துள்ளோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினருக்கு ரோஜாக்கள் வழங்கியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் காவல்துறையினருக்கு ரோஜா பூ வழங்கியது நெகிழ்ச்சி அளித்த சம்பவம் இணையத்தில் முன்னர் வைரலான நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலையில், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக சென்று காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினருக்கு ரோஜா பூ வழங்கியுள்ளனர்.
டெல்லியில் போராட்டம்
டெல்லியில் கடுங்குளிரிலும் மக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாரியாகன்ஜ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், காவல்துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முற்பட்டதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோனியா காந்தி விமர்சனம்
மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் பற்றி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியுள்ளார்.
ஜனநாயகத்தில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் குரலெழுப்பி, தங்களின் கவலைகளை பதிவு செய்ய உரிமையுள்ளது. மக்களின் இந்த எதிர்ப்பு குரல்களை மதிக்காத பாஜக அரசு, கருத்து வேறுபாடுகளை முரட்டு சக்தி கொண்டு அடக்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொளியில் அவர் இதனை கூறியுள்ளார்.
“அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது”
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இந்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்தை அமலாக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்று இந்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் அரசுகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமலாக்க முடியாது என்று கூறியுள்ளதற்கு பதிலாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது ஏ.என்.ஐ.
பட மூலாதாரம், Getty Images
கோப்புப்படம்
இந்தச் சட்டத்தை அமலாக்குவதில் யாரெல்லாம் பங்கெடுப்பார்கள் என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்றும், பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க இது இணையம் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து முன்கூட்டியே இப்போது கருத்து கூற முடியாது என்று அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. கூறுகிறது.
பட மூலாதாரம், MONEY SHARMA/Getty Images
அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும், பொது மக்களுக்கு இதை எதிர்த்துப் போராடவும், நீதிமன்றத்தை அணுகவும் உரிமை உள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்போது அமலாக்குவது குறித்த விதிகளை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தங்கள் ஆலோசனைகளைக் கூற விரும்புபவர்கள் அவற்றைத் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: