'பாஜக அரசு குடிமக்களை முரட்டுத்தனமாக ஒடுக்குகிறது' - சோனியா காந்தி

sonia gandhi

பட மூலாதாரம், @INCIndia

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடிமக்களை முரட்டுத்தனமாக ஒடுக்கும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் வேதனை தெரிவிக்கிறது," என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகத்தில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் குரலெழுப்பி, தங்களின் கவலைகளை பதிவு செய்ய உரிமையுள்ளது. மக்களின் இந்த எதிர்ப்பு குரல்களை மதிக்காத பாரதிய ஜனதா கட்சி அரசு, கருத்து வேறுபாடுகளை முரட்டு சக்தி கொண்டு அடக்குகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் பற்றி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொளியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பாஜக அரசின் பிளவு படுத்தும் முயற்சிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம்களிலும், பிற கல்வி நிலையங்கள் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. குடிமக்களின் கவலைகளுக்கு செவிமடுத்து, அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. பாஜக முரட்டுத்தனமான அதிகாரத்தைக் கொண்டு மக்களை அடக்குவதை ஏற்றுகொள்ள முடியாது” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

“குடியுரிமை திருத்த சட்டம் பாகுபாடு காட்டும் ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் முன்மொழிய பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு ஏழைகளையும், பாதிக்கப்படுவோரைம் மிகவும் அல்லலுற செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “மக்களின் அடிப்படை உரிமைகளை காங்கிரஸ் கட்சி பாதுகாத்து, இந்திய அரசமைப்பின் மதிப்பீடுகளை நடைமுறைப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தும் மாணவர்கள் மற்றும் குடிமக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கப்பட்டால் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது வரிசையில் நின்றதைப் போல தங்கள் முன்னோர்களின் குடியுரிமையை நிரூபிக்க மக்கள் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை வரும் என்று தனது காணொளியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக டெல்லியின் இந்திய கேட் பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி வத்ரா வந்து ஆதரவு தெரிவித்தார். “ஏழை மக்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும்” என்று அவர் தெரிவித்துளளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: