தமிழக உள்ளாட்சி தேர்தல்: பதவியில் பெண்கள்; அதிகாரத்தில் ஆண்கள் - இந்த நிலை மாறுமா?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
தமிழக உள்ளாட்சி தேர்தல்: பதவியில் பெண்கள்; அதிகாரத்தில் ஆண்கள் - இந்த நிலை மாறுமா?

பட மூலாதாரம், Getty Images

உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது.

2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக 33 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தன.

மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால், 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, முதல்முறையாக இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த புதிய இட ஒதுக்கீடு கிராமத்தின் முன்னேற்றத்திற்கு உதவுமா, பெண் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்புள்ளதா என தெரிந்துகொள்ள தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் பங்குபெற்ற பெண்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்து.

2019ல் திருவள்ளூர் மாவட்டம் திருவூர் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் மோகனாவை சந்தித்தோம். ''பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது நல்ல முடிவுதான். ஆனால் உடனடியாக மாற்றங்களை பார்க்கமுடியாது. பல கிராமங்களில் பெண்கள் தேர்வானாலும், அவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஊராட்சிக்கு வரும் நிதியை எந்த திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என தேர்வான பெண் தலைவரின் கணவர்தான் தீர்மானிக்கிறார். பெண் கையொப்பம் மட்டும் இடுகிறார். இதுபோன்ற நிலை தொடரக்கூடாது. இந்த முறை அதிக எண்ணிக்கையில் எல்லா கிராமங்களிலும் பெண்கள் தேர்வாவதால், மாற்றம் ஏற்படவாய்ப்புள்ளது,''என்கிறார் மோகனா.

படக்குறிப்பு,

திருவள்ளூரில் போட்டியிடும் மோகனா

பெண் வேட்பாளர்கள் பலர் தங்களது கணவரின் புகைப்படத்தை தங்களது பிரசார நோட்டீசில் அச்சிடுவதை சுட்டிக்காட்டும் மோகனா, ''எங்கள் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு 13 பேர் போட்டியிடுகிறார்கள். நானும், இன்னொரு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறோம். ஆனால் பெண் வேட்பாளர், கணவரின் புகைப்படத்தை போடுவதோடு இல்லாமல், என்ன பணிகள் நடைபெறும் என கணவர் பிரசாரம் செய்கிறார். என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவு தெரிவித்தாலும், நான் என்னுடைய பணிகளை வைத்துமட்டுமே மதிப்பீடு செய்யப்படவேண்டும் என உறுதியாக இருக்கிறேன்,''என்கிறார் மோகனா.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் லதாவிடம் பேசினோம்.

கடந்த முறை இதே கிராமத்தில் உறுப்பினர் பதவியில் இருந்தவர், ரூ. 40 லட்சம் வரை நிதியைப் பெற்று, நான்கு பஞ்சாயத்துகளில் சாலைவசதிகளை மேம்படுத்தியதாக சொல்கிறார். ''எங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும். மண்சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்றுவதற்காக நிதியைப் பெற்றேன். சரியான நபர்களை கொண்டு சாலைகளை அமைப்பதில் கவனமாக இருந்தேன். ஆண் உறுப்பினர்களின் ஆதிக்கம் இருந்தாலும், நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். நான் எடுக்கவேண்டிய முடிவுகளை, எனக்கு வாக்களித்த மக்களின் நன்மைக்கு எது தேவையோ அதனை செய்தேன். இந்த முறையும் எனக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்,'' என்றார் லதா.

படக்குறிப்பு,

நாகப்பட்டிணத்தில் போட்டியிடும் லதா

கிராமங்களில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தலைவர் நாற்காலியில் கணவர் அமர்ந்து, கூட்டம் நடத்திய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்கிறார் லதா.

''சில ஊர்களில் பெண்கள் தேர்வானாலும், முடிவுகளை அவர்கள் எடுப்பதற்குப் பதிலாக ஒப்புதல் மட்டுமே அளிக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தெரிய வந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை,''என்கிறார் லதா.

2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தலித் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வு குறித்து பேசிய மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, ''விழுப்புரத்தில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் ஒருவரை சந்திக்கச் சென்றோம். அவரது பாதுகாப்பு கருதி பெயரை சொல்ல விரும்பவில்லை. அவரது வீடு தெரியாமல் கேட்டோம். ஒரு மாடி வீட்டுக்கு கூட்டிச் சென்றார்கள். அவர் அந்த வீட்டில் பின்புறம் பருப்பைக் கொட்டி சலித்துக்கொண்டிருந்தார். அவர் வேலை செய்யும் வீட்டின் முதலாளி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். இந்த தலித் பெண்ணை கையெழுத்திடச் சொல்லிவிட்டு, அந்த முதலாளிதான் தலைவராக இருந்தார். இந்த விவரத்தை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை,'' என நினைவுகூர்ந்தார்.

பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாலின பாகுபாடு குறையும் என நம்புவதாக கூறும் சுகந்தி, ''அரசியல் கட்சிகளில் உள்ள பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெண் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என்பதால், எல்லா கட்சிகளிலும், பல காலமாக அரசியல் பணிகளில் ஈடுபட்ட பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கிராம அளவில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால், காட்சிகள் மாறும் என நம்பலாம்,''என்கிறார் சுகந்தி.

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சமூகப் பணி மற்றும் வளர்ச்சி துறையின் தலைவராக உள்ளவர் பேராசிரியர் லலிதா. நாட்டு நலப்பணித் திட்டத்தின்போது கிராம பஞ்சாயத்து பகுதியில் வேலை செய்தபோது பொறுப்பில் இருந்த பெண்களை சந்தித்துள்ளார் லலிதா.

''மீஞ்சூர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த கிராம தலைவரிடம் பேசினோம். கூட்டத்தில் கிராம தலைவர் பங்கெடுக்க வேண்டும் என கேட்டோம். தலைவராக ஒரு பெண் இருந்தாலும், அவரது கணவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். விவரங்கள் கேட்டபோது, பெண் தலைவரும், அவரது கணவரும், பிற ஆண் உறுப்பினர்கள் பெண்ணின் முடிவை ஏற்கமாட்டார்கள் என வெளிப்படையாக பேசினார்கள்.

இதுபோன்ற விதிமீறல்களை தடுக்க பெண் தலைவர்களுக்கு விழிப்புணர்வு, நம்பிக்கை அளிக்கவேண்டும்,''என்கிறார் லலிதா.

முதல் முறையாக தேர்வாகி பொறுப்பு ஏற்கும் பெண் தலைவர்களிடம் அவர்கள் எவ்வாறு முடிவுகளை எடுக்கவேண்டும். ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்றார் அவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: