என். ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ: நீங்கள் இந்திய குடிமகன்தானா? - இதுதான் மத்திய அரசின் விளக்கம்

நீங்கள் இந்திய குடிமகன்தானா? - இதுதான் மத்திய அரசின் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "யார்-யார் இந்தியக் குடிமக்கள்?"

யார்-யார் இந்திய குடிமக்கள் என்பது பற்றி மத்திய அரசு திடீர் விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பெரும் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள்பதிவேடு தயாரிப்பும் நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைப் பீகாரில் அமல்படுத்தப்போவதில்லை என்று அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தில் 2004-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற இடங்களில் பெற்றோர் இந்தியராக இருந்தாலோ அல்லது சட்டவிரோத குடியேறியவர்களாகவோ இல்லாதபோது அவர்கள் இந்தியர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த சூழ்நிலையில், தற்போது யார், யார் இந்தியக் குடிமக்கள் என்பது பற்றிய மத்திய அரசு தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர், "இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அவர்களின் குழந்தைகள் சட்டப்படி இந்தியக் குடிமக்கள் ஆவர். அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-க்காகவோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காகவோ கவலைப்படத் தேவையில்லை." என்றார்.

குடியுரிமை விவகாரத்தில், ஆவணங்களைக் காண்பிப்பது தொடர்பாக எந்தவொரு இந்திய குடிமகனும் தேவையற்ற முறையில் துன்புறுத்தப்படவோ அல்லது சிரமத்துக்கு ஆளாக்கப்படவோ மாட்டார் என மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

தினமணி: '700 அரங்குகள், 2 கோடி நூல்களுடன் சென்னை புத்தகக் காட்சி'

பட மூலாதாரம், Getty Images

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 43-ஆவது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜன.9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதில் 700 அரங்குகளில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும், திருக்கு மற்றும் கீழடி அகழாய்வின் சிறப்புகளைக் கூறும் வகையில் 'கீழடி-ஈரடி' என்ற பெயரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

இது குறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பபாசி தலைவர் ஆா்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.கே.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் புத்தகக் காட்சியின் சின்னத்தை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் செய்தியாளர்களிடம், "சென்னை புத்தகக் காட்சி 43-ஆவது ஆண்டாக ஜன.9-ஆம் தேதி முதல் ஜன.21-ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும். இதில் 700 அரங்குகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. வார நாள்களில் பிற்பகல் 3 முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும்." என்றார்.

'சென்னை வாசிக்கிறது': சென்னை புத்தகக் காட்சி வரலாற்றில் முதல் முறையாகப் பள்ளி மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் போ் ஒரே நேரத்தில் புத்தகங்கள் வாசிக்கும் 'சென்னை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சி ஜன.6-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். சென்னை புத்தகக் காட்சியில் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்பையும் பாரம்பரியத்தையும் மற்றும் திருக்குறளின் பெருமையையும் புத்தகக் காட்சிக்கு வரும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 'கீழடி- ஈரடி' என்ற தலைப்பில் பிரம்மாண்ட அரங்கம் தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு அமையவுள்ளது.

அதேவேளையில், சிறந்த கருத்துகளை வலியுறுத்தும் மணல் சிற்பங்களும் இடம்பெறும். வாசகர்களின் அறிவை விரிவு செய்யும் நோக்கில், பபாசி திறந்தவெளி அரங்கில் புத்தக வெளியீடுகள், தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், திரையுலகினர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

இந்து தமிழ்: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் - நடிகர் விஷால் மனு தள்ளுபடி

பட மூலாதாரம், Getty Images

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாகத் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களைத் தள்ளுபடி செய்து அமர்வின் உறுப் பினர்கள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வட காடு, நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில், நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்து, அப்பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த 2017-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞராக மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்று வாதிட்டு வந்தார்.

மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு, தேவையான நீராதாரம் இருக்கிறதா என நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான நடிகர் விஷாலும் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த அமர்வு, ஓஎன்ஜிசி, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய் பால் தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன், வருவாய் பங்கீட்டு அடிப்படையில் ஒப்பந்தம் செய் திருந்த ஜெம் லேபாரட்டரிஸ் நிறுவனம் பணிகளைத் தொடங்க வில்லை. உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் என்று ஜெம் நிறுவனம் மற்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட அமர்வின் உறுப்பினர்கள், இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் பெறவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும்போது, அதை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு தொடரலாம். எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தர விட்டனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் குண்டு காயம் பட்டு 9 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கிக் குண்டு காயங்களால் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் இரண்டு டஜன் நகரங்களில் நடைபெற்ற நிலையில் துப்பாக்கிக் குண்டுக் காயங்களால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்த நாளேடு தெரிவிக்கிறது,

டெல்லியிலும் மோதல்கள் நடைபெற்றன. போராட்டம் மிகப் பெரிதாக நடைபெற்ற ஜபால்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் ஒ.பி சிங், 5 பேர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினார் என்றும், கடுமையான ஆத்திரமூட்டும் சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று கூறியதாகவும் இந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, குறைந்தது ஒன்பது பேர் இறந்துள்ளனர். மீரட்டில் மூன்று பேரும், பிஜ்நோரில் இரண்டு பேரும், கான்பூர், ஃபெரோசாபாத், முசாஃபர்நகர் மற்றும் சாம்ப்ஹாலில் தலா ஒருவரும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதாகாத நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: