குடியுரிமை திருத்த சட்டம்: 3 கோடி குடும்பங்களை நாட பாஜக முடிவு

குடியுரிமை திருத்த சட்டம்: 3 கோடி குடும்பங்களை நாட பாஜக முடிவு

பட மூலாதாரம், BIJU BORO via getty images

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து, போராட்டக்காரர்களின் உயிரிழப்பு, கைதுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துவரும் சூழலில் மூன்று கோடிக்கும் மேலான இந்தியக் குடும்பங்களை நாடும் பிரசார இயக்கம் ஒன்றை நடத்த இந்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்க சிறப்பு பிரசார இயக்கம் ஒன்றை நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இதன்போது மூன்று கோடிக்கும் மேலான குடும்பத்தினரை பாஜகவினர் தொடர்பு கொள்வார்கள் என்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் 250க்கும் மேலான இடங்களில் இதற்காக செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான பேரணிகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி குடியுரிமை திருத்தச் சட்டம் தொடாபான போராட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

டெல்லியில் உள்ள அக்கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான கல்வியாளர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times via getty images

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று மாலை கூடும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க உள்ளனர்.

இதனிடையே குடியுரிமைச் சட்டதிருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 5.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் விமர்சனம்

இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தும் பாசிச சித்தாந்தத்தால், நரேந்திர மோதி தலைமையிலான அரசின் கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா இந்து தேசமாவதை நோக்கிச் செல்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

"பன்மைத்துவம் கொண்ட இந்தியாவை விரும்புபவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இது மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவும் மாறி வருகிறது," என்றும் இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

அதே சமயத்தில் 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர்' என்று அவர் குறிப்பிடும் இந்திய ஆளுகையின்கீழ் உள்ள காஷ்மீரில் இந்தியப் படைகள் குவிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. படைகள் திரும்பபெறப்பட்டால் அங்கு ரத்த ஆறு ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இம்ரான் கான் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் போராட்டங்கள் அதிகரிப்பதால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இந்திய ராணுவத் தளபதியின் சமீபத்திய கூற்றும் ராணுவ நடவடிக்கை பற்றிய பாகிஸ்தானின் கவலைகளை அதிகரித்துள்ளது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடு எல்லைக் கோட்டில் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம் என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் சமீத்தில் தெரிவித்திருந்தார்.

நான் ஏற்கனவே பல முறை சர்வதேச சமூகத்திடம் கூறியுள்ளதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப ராணுவ நடவடிக்கை எதாவது எடுத்தாலும், இந்து தேசியவாதத்துக்கு ஆதரவு திரட்ட போர் வெறியைத் தூண்டினாலும், பொருத்தமான பதிலடி தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: