சசிகலா: பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கினார் - வருமான வரித்துறை

பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் பல கோடிக்கு சொத்துகள் வாங்கிய சசிகலா

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் பல கோடிக்கு சொத்துகள் வாங்கிய சசிகலா'

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் நடந்த விசாரணையில், பினாமி பெயரில் சுமார் ரூ.1,500 கோடிக்கு சசிகலா சொத்துகள் வாங்கி இருப்பது தெரியவந்தது.

பட மூலாதாரம், Getty Images

இதைத்தொடர்ந்து அந்த சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் சசிகலா ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கு அடிப்படையில் வருமான வரியை மதிப்பீடு செய்யும் நடைமுறையை வருமான வரித்துறை மேற்கொண்டது.

இந்த நிலையில் வருமான வரித்துறை விசாரணை நடத்திய கிருஷ்ணப்பிரியா (சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள்), செந்தில் (சசிகலாவின் வழக்குரைஞர்) உள்ளிட்டோரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித்துறை தரப்பில் கூறியதாவது, "கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி கிருஷ்ணப்பிரியா வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிருஷ்ணப்பிரியாவின் கைப்பேசியில் படமாக இருந்த 2 துண்டு சீட்டுகளில் முன்னணி நிறுவனங்கள் குறித்தும், வரவு, செலவு செய்தது போன்ற குறிப்பும் இருந்தது. அந்த துண்டு சீட்டை எழுதியது யார்? என விசாரித்தபோது சசிகலாவின் வழக்குரைஞர் செந்தில் என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், துண்டு சீட்டில் எழுதி இருக்கும் தகவல் சசிகலா வாங்கிய பல்வேறு சொத்துகள் சம்பந்தமானது என்றும், மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த சமயத்தில் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது எனப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது இந்த வரவு, செலவு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சென்னை பெரம்பூர், மதுரை கே.கே.நகர் ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகம், புதுச்சேரியில் உள்ள கேளிக்கை விடுதி (ரிசார்ட்), கோவையில் பேப்பர் மில் மற்றும் காற்றாலைகள், சென்னை அருகே ஒரகடத்தில் சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் ரோட்டில் மென்பொருள் கம்பெனி ஆகியவற்றை வாங்கிய போது சட்ட கருத்துரு வழங்கியதாகவும் அவர் கூறினார்.

துண்டு சீட்டில் உள்ள தகவலை சசிகலா சொல்ல சொல்ல, தான் எழுதியதாகவும், அதன்பின்பு, அந்த துண்டு சீட்டை ஒரு கவரில் வைத்து மூடி பத்திரமாக வைக்கும்படி சசிகலா தன்னிடம் கூறியதாகவும் செந்தில் தெரிவித்தார்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பரோலில் வந்த போது கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருந்தார்.

அந்த சமயத்தில், சசிகலா கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த துண்டு சீட்டு கவரை அவரிடம் ஒப்படைத்தேன் என்றும் கூறி உள்ளார்.

கிருஷ்ணப்பிரியா வீட்டில் வைத்து இந்த துண்டு சீட்டை சசிகலா பார்த்துவிட்டு, அதைக் கிழித்து போடும்படி கிருஷ்ணப்பிரியாவிடம் கூறி உள்ளார். அந்த துண்டு சீட்டை கிழிப்பதற்கு முன்பு தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

2012-2013 முதல் 2016-2017-ம் ஆண்டு வரை சசிகலாவுக்கு பல்வேறு நிறுவனங்களில் பங்கு இருந்தது தொடர்பான குற்றச்சாட்டும், 2017-18-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டும் சசிகலா மீது உள்ளது.

வருமான வரி மதிப்பீடு தொடர்பான விசாரணை முடிவடைந்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான விவரம் வருமான வரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது." - இவ்வாறு வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: " மக்கள் நீதி மய்யம் திமுக போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்?"

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டிசம்பர் 23ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதில் மக்கள் நீதி மையம் கலந்துகொள்ள வேண்டும் என திமுக அழைப்பு விடுத்திருந்தது. அழைப்புக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசனும் நன்றி தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் சனிக்கிழமை அன்று எதிர்ப்பு பேரணியில் மக்கள் நீதி மையம் கலந்துகொள்ள இயலாது என மக்கள் நீதி மையத்தின் செயலர் (ஊடகம்) முரளி அப்பாஸ் தெரிவித்தார்.

மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மருத்துவர் அனுமதித்தால் கலந்து கொள்வேன் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம், கமலஹாசன் தெரிவித்துள்ளார் என்றும் அப்பாஸ் கூறினார்.

இதற்கிடையில் '' நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டை அழிக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்து தமிழ்: "அண்ணா பல்கலைக்கழக பெயரில் எந்த மாற்றமும் இருக்காது"

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. அவ்வாறு பிரிக்கப்பட்டாலும் அண்ணா பெயரிலேயே பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் துணைவேந்தர் சுரப்பா செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. இதுதொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் துணைவேந்தர், முன்னாள் துணை வேந்தர், கல்வியாளர்கள் இடம் பெறத் தேவையில்லை. ஆனால், அவர்களது கருத்துகளைக் கேட்க வேண்டும் என்பது எனது தனிப் பட்ட கருத்து. அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப் பட்டாலும் இப்பல்கலைக்கழகம் அண்ணா பெயரிலேயே தொடர்ந்து செயல்படும். இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யூஜிசி) பல்வேறு தரப்பிலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதால் கூடுதல் நிதி கிடைக்கும். அதன்மூலம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன், கல்வியின் தரத்தையும் உயர்த்த முடியும். 69 சதவீத இடஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது.

பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும்போது அதன்கீழ் செயல்படும் 500 கல்லூரிகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இதை எனது நீண்டகால அனுபவத்தில் கூறுகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாக ரீதியாக மத்திய அரசு பரிந்துரைகள் அளிக்கும். அதன்பிறகு மத்திய அரசு தலையீடு இல்லாமல், முழுவதும் மாநில அரசின் கட்டுப் பாட்டிலேயே பல்கலைக்கழகம் செயல்படும்.

இவ்வாறு சுரப்பா தெரிவித்தார்.

தினமணி: 'குடியுரிமை சட்ட எதிர்ப்பை திசைதிருப்ப பாகிஸ்தானை இந்தியா தாக்கலாம்'

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்திலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காகப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று அந்நாட்டுப் பிரதமா் இம்ரான் கான் அச்சம் தெரிவித்தார்.

தங்கள் நாட்டின் மீது இந்தியா ரகசியத் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்தார்.

இதுதொடா்பாக சுட்டுரையில் (டுவிட்டா்) அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஸிஸ சித்தாந்தத்தைக் கொண்டு, ஹிந்து தேசமாக இந்தியாவை மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிராகவும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்திலிருந்து மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. ஒருவேளை ரகசியத் தாக்குதலை இந்தியா நடத்தினால், உரிய பதிலடி கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அந்தப் பதிவுகளில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அதை எதிா்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் குறிப்பிட்டு, ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடா்ந்து, 'எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி கூறியுள்ளது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டத்திலிருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாக உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை இந்தியா வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. இந்தியத் தரப்பில் அத்துமீறி தாக்குதல் தொடுக்கப்பட்டால், எங்கள் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்' என்று பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் ஆசிஃப் கஃபூா் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: