சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பற்றி இஸ்லாமிய மதகுருக்கள் என்ன சொல்கிறார்கள்? #3MinsRead

  • மொஹம்மத் ஷாஹித்,
  • பிபிசி செய்தியாளர்.
சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பற்றி இஸ்லாமிய மதகுருக்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வன்முறை பரவலாகக் காணப்படுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியின் சீலம்பூரில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று டெல்லி கேட்டில் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டங்களின்போது எதிர்ப்பாளர்கள் காரில் தீ வைத்தனர். அதுமட்டுமல்ல, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை போராட்டங்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியக் குடிமக்கள் யாருடைய குடியுரிமையுடனும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு இஸ்லாமிய சமுதாயத்திற்கு உறுதியளித்து வருகிறது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசு என்.ஆர்.சியை அமல்படுத்தும், அதில் பலர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

எது எப்படியிருந்தாலும், வதந்திகளை யாரும் நம்பக்கூடாது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் சிறுபான்மை சமூகத்தினர் சம்பந்தப்பட்டது, இதில் இந்தியர்கள் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் எந்த ஒரு திசையிலும் செல்வதாகத் தெரியவில்லை, எந்தவொரு பெரிய அமைப்போ அல்லது நபரோ அதை வழிநடத்துவதாகவும் தெரியவில்லை. இருப்பினும், முஸ்லிம் சமூகம் உட்பட பல்வேறு பிரிவையும் சேர்ந்தவர்கள் இந்த வன்முறைகளை விமர்சிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

ஜம்மா மசூதியின் இமாம் ஷாஹி இமாம் என்ன சொன்னார்?

டெல்லியின் ஜம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணியை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் என்பவரும் கலந்து கொண்டார். இருந்தபோதிலும் காவல்துறையினரால் அவரைக் காவலில் எடுக்க முடியவில்லை.

இதன் பின்னர், எதிர்ப்பாளர்களின் கூட்டம் ஐ.டி.ஓ பகுதியை நோக்கி நகரத் தொடங்கிய போது, டெல்லி கேட் அருகே வன்முறையாக உருவெடுத்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜம்மா மசூதியின் ஷாஹி இமாம் அகமது புகாரி செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார். இருந்தாலும், ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயக உரிமை என்றும், யாரும் தங்கள் எதிர்ப்பை காட்டுவதை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "ஆர்ப்பாட்டம் செய்வது என்பது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை, அப்படிச் செய்வதை யாரும் தடுக்க முடியாது. இருப்பினும், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. நமது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு எதிர்ப்பை காட்டுவது மிக முக்கியமான விஷயம்" என்று குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சி.ஏ.ஏ ஒரு சட்டமாக மாறியுள்ளது என்று கூறிய ஷாஹி இமாம், என்.ஆர்.சி அறிவிக்கப்பட்டுள்ளது, அது இன்னும் ஒரு சட்டமாக மாறவில்லை என்றும் கூறினார்.

முஸ்லிம்களின் பொறுமை முடிவுக்கு வருகிறது

ஜம்மா மசூதியிலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு மசூதியான ஃபதேபூரியின் இமாம் முப்தி முகர்ரம் அகமதுவும் சி.ஏ.ஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் தவறு என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்கள் இரு சமூகங்களுக்கிடையில் எந்தவிதமான பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், இந்திய முஸ்லிம்களின் பொறுமை இப்போது முடிவுக்கு வருகிறது, அவர்களின் உரிமைக்கான குரலை அடக்க முடியாது என்று பிபிசியிடம் பேசிய இமாம் முப்தி முகர்ரம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

"சி.ஏ.ஏ, நமது அரசியலமைப்பிற்கு எதிரானது. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நீதி, சுதந்திரம், கண்ணியம் ஆகியவற்றுக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே வெறுப்பைப் பரப்புவதற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது. சிலர் இந்தியாவின் கொள்கையை மாற்ற விரும்புகிறார்கள். குழப்பத்தை பரப்ப விரும்பும் சில கொள்கை வகுப்பாளர்கள் இந்திய அரசுக்குள் நுழைந்துள்ளனர். பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் எங்களுக்கு எந்த புகாரும் இல்லை, ஆனால் சிலர் கொள்கைகளை மாற்றுகிறார்கள். நாட்டைப் பிரிக்க முயல்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எதிராக இருக்கிறோம். "

"முஸ்லிம்கள் மீது அரசுக்கு வெறுப்பு இல்லாதபோது, சி.ஏ.ஏவில் அவர்களை ஏன் சேர்க்கக்கூடாது? என்.ஆர்.சி.யைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. என்.ஆர்.சியின்போது, இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் வரிசையில் இருப்பார்கள். இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் சர்வதேச அளவில் இதை எடுத்து சென்று, அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து அனைவருக்கும் தெரிவிப்போம்".

ராஜஸ்தானின் அஜ்மீரின் குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்கா உள்ளது. சூஃபி பாரம்பரியத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் உட்பட ஒவ்வொரு மதத்தினரும் இந்த தர்காவிற்கு வருகின்றனர்.

தர்காவின் பொறுப்பாளர் சையத் ஜைனுல் அபேதீன் அலி கானிடம் பேசினோம். "குவாஜா கரிப் நவாஸ் (ஹஸ்ரத் மொயுதீன் சிஷ்டி) எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களையும் அரவணைத்தார். அவர் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை, அரசாங்கமும் அவர்களின் மதத்தைப் பார்த்து யாரையும் அரவணைக்கக்கூடாது என்பதே எங்கள் செய்தி" என்கிறார் அவர்.

"பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களையும் சி.ஏ.ஏவில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இந்தியா மற்றும் அசாமில் வாழும் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும் என்பதே எங்கள் கேள்வி. உணர்வுகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. சமூகத்தினரையும் கணக்கில் எடுத்துக் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்" என்கிறார் அவர்.

"இது தொடர்பாக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும், நாடு முழுவதும் உள்ள அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அச்சத்தில் இருக்கும் முஸ்லிம்களுடன் பேச வேண்டும். அதன் பிறகு இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவும். அனைவரின் சந்தேகத்தையும் பேசித் தெரிந்து கொள்ளுங்கள், பின்னர் ஒரு முடிவை எடுங்கள்" என்று சையத் ஜைனுல் அபேதீன் அலி கான் கூறுகிறார்.

'முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிறார்கள்'

சி.ஏ.ஏவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று சையத் ஜைனுல் அபேதீன் அலி கான் கோரிக்கை விடுத்தார். சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும், யாருக்கும் அநீதி செய்யக்கூடாது என்று இந்துக்களும் முஸ்லிம்களும் கோருகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

அதே நேரத்தில், லக்னோவைச் சேர்ந்த ஐஷ்பாஹ் மசூதியின் இமாமும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான மெளலானா காலித் ரஷீத் ஃபிரங்கி மஹ்லியும் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்.

அதில் முஸ்லிம்களின் பெயரை சேர்க்காதது முஸ்லிம்களை அவமதிப்பதற்கு சமம் என்று கூறும் அவர், முஸ்லிம்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.

"ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயக உரிமை. ஆனால் அதில் வன்முறையைச் செய்வதற்கு இடமில்லை. ஒருபுறம் சட்டத்தை உருவாக்குவது பற்றிப் பேசிக் கொண்டே, மறுபுறம் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் கூறுகிறார்.

"இவ்வளவு பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் சாதகமான விஷயம் என்னவென்றால், அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் போராட்டக்காரர்களுடன் பேசத் தொடங்க வேண்டும். முஸ்லிம்களின் தவறு என்ன? இந்தச் சட்டத்தில் அவர்களை ஏன் சேர்க்கவில்லை?"

ஒன்று அல்லது இரண்டு சம்பவங்களைத் தவிர, ஆர்ப்பாட்டங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இனிமேல் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இணையலாமா என்று காலித் ரஷீத் ஃபிர்கி மஹாலியிடம் கேட்டபோது, தான் இன்றுதான் இந்தியா திரும்பியிருப்பதாகவும், விரைவில் சமூகத்தின் பிறருடன் கலந்தாலோசித்த பிறகு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: