சி.ஏ.ஏ, என்.ஆர்.சி: "காங்கிரசும் அர்பன் நக்சல்களும் பொய் தகவல்களை பரப்புகிறார்கள்" - பிரதமர் நரேந்திர மோதி

மோதி

பட மூலாதாரம், BJP / Twitter

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என். ஆர். சி குறித்து பலரும் பொய் தகவல்களை பரப்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

"காங்கிரஸ் கட்சி மற்றும் நகர்புற நக்சல்கள் சிலர் அனைத்து முஸ்லிம்களும் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற பொய் தகவலை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் பொய். குடியுரிமை திருத்த சட்டத்தையும், என்.ஆர்.சி-யையும் நீங்கள் முழுமையாக படித்தால், காங்கிரசும், நகர்புற நக்சல்களும் கூறுவது பொய் என்று தெரியும்" என்று பிரதமர் மோதி மேலும் பேசினார்.

டெல்லியில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

மூவர்ண கொடியை கையில் ஏந்தி இருக்கும் ஒவ்வொருவரும் பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் டெல்லியின் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பதாக கூறிய மோதி, "சில அரசியல் கட்சிகள் வதந்திகளை பரப்புவதுடன், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. சட்டவிரோதமான காலனிகளை அங்கீகரித்தபோது, நாங்கள் யாரிடமாவது அவர்களின் மதத்தை கேட்டோமா? அல்லது அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றுதான் கேட்டோமா?" என்று கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், ANI

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருவது குறித்து பேசிய மோதி, "இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இதுவரை 33,000 பாதுகாப்பு படையினர் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக தங்களது உயிரை இழந்துள்ளனர். ஆனால், இன்று அவர்களை நீங்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், காவல்துறையினர் உங்களது மதத்தையோ, சாதியையோ கேட்பதில்லை; நேரம், வானிலை பார்க்காமல் அவர்கள் உங்களுக்காக உதவுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்யவே இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக மோதி குறிப்பிட்டார். "இந்திய எம்பி-க்களையும் இந்திய நாடாளுமன்றத்தையும் நாம் மதிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் தூங்கிக் கொண்டிருந்ததா?

காங்கிரஸ் ஆட்சியில்தான் என்.ஆர்.சி கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் என்ஆர்சி குறித்து அமைச்சரவையிலோ நாடாமன்றத்தலோ பாஜக பேசவில்லை என்றும் மோதி குறிப்பிட்டார்.

ஆனால் என்.ஆர்.சி தொடர்பாக பல முறை பாஜகவினரால் பேசப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. என்.ஆர்.சி தொடர்பாக குளிர்கால கூட்டத் தொடரில் அமித் ஷா பேசிய காணொளி ஒன்றினை அக்கட்சி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

"ஏன் அஞ்சுகிறீர்கள் மமதா?"

"குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கொல்கத்தாவில் இருந்து ஐ.நா-வுக்கு சென்றிருக்கிறார் மமதா பானர்ஜி. சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி வருவர்களை தடுக்க வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கெஞ்சினார். என்ன ஆனது உங்களுக்கு? ஏன் வதந்திகளை பரப்புகிறீர்கள்? தேர்தல்கள் வந்து செல்லும். ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்றும் மோதி பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சமீபத்தில் ஐ-நாவிடம் கோரிக்கை வைத்திருந்தார் மமதா பானர்ஜி

டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் ஆட்சி செய்து வரும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :