போராட்டத்திற்கு அழைத்து மாணவர்களை திமுக திசைதிருப்புகிறது: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

அர்ஜுன் சம்பத்

பட மூலாதாரம், ARJUN SAMPATH / FACEBOOK

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தவறான கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் திமுக பரப்பிவருவதாக இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்துமக்கள் கட்சியினர் சார்பாக கூட்டம் ஒன்றை நடத்திய அர்ஜுன் சம்பத், மாணவர்களை போராட வரவேண்டும் எனக் கூறி திமுக திசைதிருப்புவதாகவும், மாணவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

''இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது என்கிறார்கள். அதுபோன்ற போராட்டங்கள் நடைபெறவில்லை. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை போராட்டத்திற்கு அழைத்து, அவர்களை திமுகவினர் திசைதிருப்புகிறார்கள். மாணவர்கள் படிப்பதற்கு, தேர்வு எழுதுவதற்கு பதிலாக சாலைக்கு வரவேண்டும் என அழைப்புவிடுக்கிறார்கள். இளைஞர்கள் கவனமாக இருக்கவேண்டும்,'' என்றார் அர்ஜுன் சம்பத்.

போராட்டங்களில் சமூகவிரோதிகள் நுழையும் வாய்ப்பு உள்ளது என்று கூறிய அர்ஜுன்சம்பத், ''ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூகவிரோதிகள் இருந்ததால் இறுதியில் வன்முறை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் மாணவர்கள் திமுகவின் போராட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்க்கவேண்டும். சிலர் திமுக கொடிகளை கூட தூக்கிக்கொண்டு வரலாம். மாணவர்கள் விழிப்போடு நடந்துகொள்ளுங்கள்,'' என்றார் .

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு பயனளிக்கும் சட்டமாக குடியுரிமை திருத்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அர்ஜுன் சம்பத்.

''இஸ்லாமியர்களுக்கு தனியாக நாடு இருக்கிறது என்பதால் இந்தியாவில் இந்துக்களுக்கு இடம் தருவதில் என்ன சிக்கல் இருக்கிறது. மாதசார்பற்ற நாடு என்ற கருத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்,'' என்றார் அர்ஜுன் சம்பத்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :