குடியுரிமை திருத்த சட்டம் குறித்து என்ன பேசினார் பிரதமர் மோதி? 6 முக்கிய தகவல்கள்

"குடியுரிமை திருத்த சட்டம் காந்தியின் விருப்பத்திற்குரியது" - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

அப்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, அவற்றிற்கெதிரான போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் மோதி பேசினார். அவரது உரையின் ஆறு முக்கிய விடயங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

"சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. இந்திய முஸ்லிம்களை பாதிக்காது"

குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றத்துக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆதரவாளர்களை எழுந்து நிற்க சொன்ன பிரதமர் மோதி, இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை பாதிக்காது என்று கூறினார். "சில எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து அரசியல் செய்வதோடு, அதுகுறித்து வதந்திகளை பரப்பி வருகின்றன. இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி, சி.ஏ.ஏ. இந்தியர்கள் யாரையும் பாதிக்காது. அதேபோன்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அசாமில் அறிமுகப்படுத்தப்பட்ட என்.ஆர்.சி. குறித்தும் ஏகப்பட்ட வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு வருவதற்கு எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை, அது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவும் இல்லை" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

"மதத்தால் யாரையும் பாகுபடுத்தியது கிடையாது"

"நாங்கள் வகுக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது, யாரையும் கோயில் செல்பவரா அல்லது மசூதிக்கு செல்பவரா என்று கேட்டதில்லை. முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வளர்ச்சி திட்டங்களின் வாயிலாக பயன் பெறுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்பதை நான் உறுதி செய்துள்ளேன். என்னுடைய செயல்பாட்டில், பாகுபாட்டை கண்டறிந்து காட்டுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுகிறேன்" என்று பிரதமர் மோதி கூறினார்.

"பொதுச் சொத்துகளை தீயிட்டு கொளுத்தாதீர்கள்"

"சிலர் மக்களை தவறாக வழிநடத்தி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகிறார்கள். எதிரிகள் என்னை வெறுத்தால், என் கொடும்பாவியை எரிக்க வேண்டும்; ஏழைகளை குறிவைக்கக்கூடாது. என்னை குறிவையுங்கள்; ஆனால், பொது சொத்துகளுக்கு தீ வைக்க வேண்டாம்."

"காவல்துறையினரை தாக்காதீர்கள்"

"இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இதுவரை 33,000 பாதுகாப்பு படையினர் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக தங்களது உயிரை இழந்துள்ளனர். ஆனால், இன்று அவர்களை நீங்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், காவல்துறையினர் உங்களது மதத்தையோ, சாதியையோ கேட்பதில்லை; நேரம், வானிலை பார்க்காமல் அவர்கள் உங்களுக்காக உதவுகிறார்கள்."

பட மூலாதாரம், Getty Images

"குடியுரிமை திருத்த சட்டம் காந்தியின் விருப்பத்திற்குரியது"

"சி.ஏ.ஏ-வை எதிர்ப்பவர்கள் அகதிகளின் வலி மீது அமிலம் வீசுவதற்கு சமம். இந்த திருத்த சட்டம் மோதியின் திட்டம் அல்ல; இது மகாத்மா காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்ட ஒன்று. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது, அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்தி கூறியிருந்தார். சட்டத்தை எதிர்ப்பவர்கள் மோதியிடம் செவிசாய்க்க விரும்பவில்லை. ஆனால், தனது பெயருடன் காந்தியை கொண்டுள்ளவர்கள் குறைந்தபட்சம் காந்தியை பின்பற்ற வேண்டும்."

சி.ஏ.ஏ. அனுமதிக்காத மாநிலங்கள்

"சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் தங்களது மாநிலங்களில் சி.ஏ.ஏ-வை செயல்படுத்த அனுமதிக்க மாடோம் என்று கூறுகிறார்கள். நீங்கள் ஒரே கொடியின் கீழ் நிற்கிறீர்கள், தேசிய கீதத்தை பாடுகிறார்கள், ஆனால் இன்னும் இதுபோன்ற கருத்துகளை முன்வைக்கிறீர்களா? நீங்கள் கூறுவது உண்மையிலேயே சாத்தியமாகுமா என்று உங்களது சட்ட நிபுணர்களிடம் கேளுங்கள்" என்று பிரதமர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :