இந்தியா - பாகிஸ்தான் 1971 போர்: ஐந்து கி.மீ தூரம்; 48 ஆண்டு பிரிவு: ஒரு துயரக் கதை

  • ஆமீர் பீர்சாதா & ஃபர்ஹத் ஜாவேத்
  • பிபிசி
இந்தியா - பாகிஸ்தான் போரால் பிரிந்து வாடும் குடும்பத்தின் கதை

1971 இந்திய - பாகிஸ்தான் போர் நடந்து 50 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் அதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை.

அணு ஆயுதம் வைத்துள்ள இரு நாடுகளுக்கும் இடையில் அந்தப் போர் 13 நாட்கள் நீடித்தது. இரு நாட்டிலும் உயிரிழப்புகள் இருந்தன. பிரிந்து போன குடும்பங்களிலும் அதன் பாதிப்பு உள்ளது.

அப்போது பிரிந்து போன, அதன்பிறகு இணைவதற்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காத மக்களைப் பற்றிய கதை இது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் வடக்குப் பகுதியில் வெகு தூரத்தில் - டுர்டுக், டியாக்சி, சாலுன்கா, தாங் - ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. போரின்போது இந்திய ஆளுகையின்கீழ் இவை வந்தன.

இந்தியாவின் வடக்கில் லடாக்கின் எல்லையில் இந்த சிறு குக்கிராமங்கள், ஷியோக் நதியை ஒட்டி, காரகோரம் மலைச்சிகர பாதுகாப்புப் பிரிவினரின் காவலுக்கு உள்பட்ட பகுதிகளாக இருந்தன.

லடாக் பகுதி புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி. இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பால்ட்டி மொழி பேசும் முஸ்லிம்களாக இருந்தனர்.

1971 வரையில், இந்த நான்கு கிராமங்களும் பாகிஸ்தானின் பகுதிகளாக இருந்தன. ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஏற்பட்டதை அடுத்து அவற்றின் அடையாளம் மாறியது.

2010 வரையில் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 2010ல் டுர்ட்டுக் கிராமத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

போரின்போது எத்தனை குடும்பங்கள் பிரிந்து போயின என்ற தெளிவான தகவல் எதுவும் இல்லை. 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரிந்து போனதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

இரு நாடுகளிடமும் இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு வருகின்றன. பிரிந்து போன தங்கள் குடும்பத்தினரை சந்திக்க இதுவரை 23 பேர் வரை மட்டுமே விசா பெற்றிருக்கிறார்கள்.

இந்தியப் பகுதியில் உள்ளவர்கள் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தங்கள் குடும்பத்தினரை சந்திக்க விசா பெற்றாலும், எல்லையைக் கடப்பதற்கு அவர்கள் பஞ்சாப் மாகாண எல்லைக்குச் செல்ல வேண்டும்.

அங்கிருந்து பாகிஸ்தானுக்கு உள்பட்ட பால்டிஸ்தான் பகுதிக்குள் நுழைய இரண்டாவது அனுமதியைப் பெற வேண்டும். விவசாயத் தொழிலாளர்களாக உள்ள இந்த மக்களால் அவ்வளவு தொகை செலவழிக்க முடிவதில்லை.

பாசத்துக்குரிய குடும்பத்தினர் பறவைகள் கூட எளிதில் பறந்து செல்லக் கூடிய 5 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறார்கள். இவர்களை இந்திய - பாகிஸ்தான் எல்லை பிரிக்கிறது.

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தொலைபேசி தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளதால், இன்றைய டிஜிட்டல் காலத்திலும் இந்த உறவுகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இணையதள வசதி என்பது இந்தக் கிராமங்களின் மக்களுக்கு ஒரு கனவு போன்றதுதான். இணையதள வசதி உள்ள நகரப் பகுதிகளுக்குச் சென்றால், வாட்ஸப் கால் மூலம் உறவுகளுடன் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் சிலருக்கு மட்டுமே அதற்கு செலவு செய்ய முடியும்.

பிரிந்து போனது பற்றி இந்தியப் பகுதியில் உள்ள நிலைமை

''48 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு ஆண்டுகளாக என் சகோதரனை நான் சந்திக்கவில்லை. அவனைப் பார்க்காமல் சாவதற்கு நான் விரும்பவில்லை,'' என்று ஹபீபா பேகம் கூறினார்.

ஹபீபா 60 வயதைக் கடந்துவிட்டார். அவருடைய சகோதரர் குலாம் காதிர் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஸ்கர்டு பகுதியில் வசிக்கிறார். ஹபீபா இந்திய நிர்வாகத்தில் உள்ள லடாக்கில் டியாக்சி கிராமத்தில் வசிக்கிறார்.

பட மூலாதாரம், AVANI ROY

அப்போது பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருந்த டியாக்சி கிராமம், 1971 டிசம்பர் 16ஆம் தேதி, இந்தியக் கட்டுப்பாட்டில் வந்தபோது குலாம் காதிர் குடும்பம் பிரிந்து போனது.

''போர் தொடங்கியபோது, பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய என் சகோதரன் கடமையாற்ற சென்றுவிட்டான்.''

அவன் சென்று சில நாட்களில் டியாக்சி கிராமத்தை இந்திய ராணுவம் கைப்பற்றியது.

''எங்கள் கிராமத்தை இந்திய ராணுவத்தினர் கைப்பற்றிய நாளன்று இரவு, எங்களை என்ன செய்யப் போகிறார்களோ என்ற பயத்தில் நாங்கள் இருந்தோம். பல நாட்களாக நாங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை,'' என்று ஹபீபா தெரிவித்தார்.

ஷியோக் நதியை பார்த்தபடி நம்மிடம் பேசிய ஹபீபா, தாங்கள் பிரிந்துபோன நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். தனது உறவினர்கள் இப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் இருப்பது பற்றி பேசிய போது அவரை அறியாமல் கண்ணீர் கொட்டியது.

''எங்கள் கிராமம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தபோது, ஒரு நாள் என் சகோதரன் திரும்பி வந்துவிடுவான் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். இப்போது 48 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் அவனைக் காண இந்தக் கண்கள் காத்திருக்கின்றன,'' என்று அவர் கூறினார்.

தன்னுடைய சகோதரி, மனைவி, சகோதரன், தாய் மற்றும் பிற உறவினர்களை விட்டு காதிர் பிரிந்துவிட்டார். ''மீண்டும் மகனைக் காண முடியாத கவலையுடன் எங்கள் தாயார் காலமாகிவிட்டார். அவர்கள் இனி ஒருபோதும் பார்த்துக் கொள்ள முடியாது,'' என்றார் ஹபீபா.

''ஒரு நாள் அந்த மலை உச்சியில் வெள்ளைக் கொடியுடன் காதிர் எல்லையைக் கடந்து வந்தான். அப்போது தன் மனைவி பானுவை சந்தித்தான்,'' என்று கிராமத்துக்கு மேற்கே உள்ள மலை உச்சியைக் காட்டியவாறு கூறினார் அவர்.

''என்னுடன் பாகிஸ்தானுக்கு வந்துவிடு என்று பானுவிடம் காதிர் கூறியிருக்கிறான். ஆனால் அப்படி செய்தால் இந்திய எல்லையில் வாழும் தன் குடும்பத்தினரை இந்திய ராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என்ற பயம் காரணமாக பானு அதற்கு மறுத்துவிட்டார்,'' என்றும் ஹபீபா தெரிவித்தார்.

பானுவை அவருடைய கணவருடன் அனுப்பி வைக்க காதிரின் சகோதரர் ஷம்ஷீர் அலி முயற்சி செய்திருக்கிறார். ''பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஸ்ரீநகருக்கு (ஜம்மு காஷ்மீரின் தலைநகர்) நான் அழைத்துச் சென்றேன். பிறகு விசாவுக்காக டெல்லிக்கு நாங்கள் சென்றோம். ஆனால் விசா மறுக்கப்பட்டுவிட்டது,'' என்று ஷம்ஷீர் கூறினார்.

குலாம் காதிரும், அவருடைய மனைவி பானுவும் சுமார் 12 ஆண்டுகள் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால் ஒரு சம்பவம் அனைத்தையும் மாற்றிவிட்டது.

படக்குறிப்பு,

தனது மனைவியின் கல்லறையில் குலாம் காதிர்

''ஷியோக் ஆற்றில் 1983 ஆகஸ்ட் 24ஆம் தேதி பானு அடித்துச் செல்லப்பட்டார். பல நாட்கள் தேடியும் அவருடைய உடல் கிடைக்கவில்லை. பிறகு ராணுவ சோதனைச் சாவடிகள் மூலம் பாகிஸ்தானில் உள்ள காதிருக்கு நாங்கள் தகவல் அனுப்பினோம். ஒரு பெண் ஆற்றில் அடித்து வரப்பட்டிருக்கிறார் என்றும், அவருடைய உடல் கிடைத்தால் புதைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவத்தினர் தகவல் அனுப்பினர்'' என்று ஷம்ஷீர் தெரிவித்தார்.

சுமார் பத்து நாட்கள் கழித்து 1983 செப்டம்பர் 3 ஆம் தேதி பானுவின் உடலை ஷியோக் ஆற்றங்கரையில் அவரது கணவர் காதிர் கண்டுபிடித்து, பாகிஸ்தானில் அடக்கம் செய்தார்.

''உயிருடன் இருந்த வரையில் கணவனும் மனைவியும் சந்திக்க முடியாத துரதிருஷ்டம் இருந்தது. ஆனால் பானு இறப்பின்போது அவர்கள் இணைந்தனர்,'' என்று ஷம்ஷீர் கூறினார்.

அவரும் பாகிஸ்தான் விசா கோரி விண்ணப்பித்தார். ஆனால் கிடைக்கவில்லை. 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு அவர்கள் சந்திக்க ஒரு வழி கிடைத்திருக்கிறது.

''ஒரு நாள் திடீரென சகோதரனிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. நான் ஹஜ் யாத்திரை செல்கிறேன் என எழுதியிருந்தார். நான் உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்து, இருவரும் மெக்காவில் 1989ல் நாங்கள் சந்தித்தோம்,'' என்றார் அவர்.

''எங்களுக்கு வயதாகிவிட்டது. எல்லைக்கு அப்பால் உள்ள நான் அறிந்த பலரும் இறந்துவிட்டனர். காதிரை, அவரது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும், என் சகோதரருடன் உட்கார்ந்து பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்,'' என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AVANI ROY

படக்குறிப்பு,

தனது சகோதரரை ஹஜ் யாத்திரை சென்றபோது சந்தித்தார் ஷம்ஷீர்

பாகிஸ்தான் பக்கம் என்ன நடக்கிறது?

பாகிஸ்தான் ராணுவத்தில் சுபேதார் ரேங்கில் இருந்து ஓய்வு பெற்ற ஜே.சி.ஓ. அதிகாரியாக குலாம் காதிர் இருக்கிறார்.

''மீண்டும் சந்திக்க வேண்டும் என்று நானும் என் மனைவியும் 13 ஆண்டு காலம் கனவுகளுடன் இருந்தோம். கடைசியில் அவளுடைய உடலை ஷியோக் நதி எங்கள் நாட்டுக்கு ஒரு நாள் கொண்டு வந்து சேர்த்தது,'' என்று காதிர் கூறினார்.

1971 இந்தியா - பாகிஸ்தான் போரின் போது சியாச்சின் பனிமலையில் தொலைதூரத்தில் காதிர் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். ''அப்போது நான் போரிட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் குடியிருக்கும் பகுதியில் மூன்று அல்லது நான்கு கிராமங்களை இந்திய ராணுவம் வசப்படுத்திவிட்டது என என்னுடன் இருந்த மற்ற வீரர்கள் கூறினர்,'' என்று காதிர் தெரிவித்தார்.

போர் சீக்கிரம் முடிந்துவிடும், குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்துவிடலாம் என்று ஆரம்பத்தில் காதிர் நம்பிக்கை கொண்டிருந்தார். குறைந்தபட்சம் சில கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு தன் குடும்பத்தினர் சென்று பாகிஸ்தானில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நம்பியிருக்கிறார்.

போர் முடிந்துவிட்டது. ஆனால் காதிர் போன்றவர்களின் குடும்பங்களில் போரினால் ஏற்பட்ட வடு ஒருபோதும் ஆறாமலே உள்ளது.

கடிதங்கள்தான் தங்கள் குடும்பத்தினருடன் உள்ள ஒரே தொடர்பு வழியாக இருக்கிறது. ஆனால் தன் தாயாரை அவரால் ஒருபோதும் பார்க்க முடியாமல் போனது.

மனைவி இறந்த பிறகு, ஸ்கர்டு என்பவரை காதிர் திருமணம் செய்து கொண்டார்.

காதிரின் தாயார் அனுப்பிய சில கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் அவருடைய அறையில் உள்ளன. அவைதான் அவருடன் இருந்ததற்கு வாழும் நினைவுகளாக உள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பு தன் தாயாருடன் முதன்முதலில் தொலைபேசியில் பேசியதை அவர் நினைவுகூர்ந்தார். ''எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என் தாயார் பேசினார். அவருடைய குரலை அந்த ஒரு முறைதான் நான் கேட்டேன்; நாங்கள் இருவருமே அழுது கொண்டிருந்தோம். இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதன்பிறகு அவருடன் என்னால் தொலைபேசியில் பேச முடியாமல் போனது,'' என்று அவர் கூறினார்.

நடுங்கும் தன் கைகளால் ஒரு புகைப்படத்தை காதிர் எடுத்துக் காட்டுகிறார். கன்னங்களில் கண்ணீர் வழிய, புகைப்படத்தில் உள்ள தன் தாயாருக்கு அவர் முத்தம் கொடுக்கிறார். ''அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் நான் சேர்ந்து வாழ முடியாமல் போய்விட்டது. நான் வழிபாடு செய்யும் இடத்துக்கு அருகே அவருடைய படத்தை வைத்திருக்கிறேன். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தபடி வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறேன். இது உறுத்தலாக உள்ளது,'' என்று காதிர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Avani roy

வேறு பலரையும்போல, ஓய்வுபெற்ற பிறகு, இந்த நான்கு கிராமங்களையும் பாகிஸ்தானுடன் இணைக்கும் சாலைகளை அரசு திறக்க வலியுறுத்தி காதிரும் பல பிரசாரங்கள் நடத்தி போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். ஜுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இதுதொடர்பாக காதிர் சந்தித்துள்ளதாக உறுதிப்படுத்திய தகவல்கள் உள்ளன.

''இந்திய ராணுவம் பிடித்துள்ள கிராமங்களை மீட்க பாகிஸ்தான் போர் நடத்த வேண்டும் அல்லது மிக நீண்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்று என்னிடம் பூட்டோ கூறினார். அவரும் எதுவும் செய்யவில்லை. அடுத்தடுத்து வந்த அரசுகளுடன் தொடர்பு கொண்டும், கடிதங்கள் எழுதியும் எனக்கு சலித்துப் போய்விட்டது,'' என்று காதிர் கூறினார்.

''நாங்கள் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம். என் கனவுகளில் அவர்களை நான் பார்க்கிறேன். அவர்களை கனவில் நான் சந்திப்பதை பாகிஸ்தான் அரசோ, இந்திய அரசோ தடுக்க முடியாது. அவர்களால் தடுத்துவிட முடியுமா?'' என்று அவர் கேள்வி கேட்கிறார்.

சாலுன்கா கிராமத்தின் கதை - இந்திய எல்லைக்குள்

''1971 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இருந்து சாலுன்கா கிராமத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. ஒரு வீட்டில் ஒரே சமயத்தில் மூன்று குண்டுகள் விழுந்தன,'' என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான அப்பாஸ் அலி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Avani roy

படக்குறிப்பு,

1971 டிசம்பர் வரையில் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பால்டிஸ்டான் மாகாணத்தில் கடைசியாக உள்ள கிராமம் சாலுன்கா.

1971 டிசம்பர் 15ஆம் தேதி இரவு பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருந்த டுர்ட்டுக், டியாட்சி, சாலுன்கா, தாங் ஆகிய கிராமங்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தன.

''எல்லோரும் அச்சத்தில் இருந்தோம். கிராமம் முழுவதையும் எரித்துவிடுவார்கள் என்று பயந்தோம்,'' என்று அப்பாஸ் அலி தெரிவித்தார்.

''இங்கேயே இருந்தால் எல்லோரும் செத்துவிடுவோம் என்பதுதான் அனைவருடைய அச்சமாக இருந்தது,'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

1971ல் அப்பாஸ் அலியின் வயது 12. இருந்தாலும் அந்தப் போரின் ஒவ்வொரு நிகழ்வையும் நினைவில் வைத்திருக்கிறார்.

இப்போது அந்தக் கிராமத்தில் அவரை ''கோபா'' என்று அழைக்கிறார்கள். அது பால்ட்டி மொழி வார்த்தை - 'தலைவர்' என அதற்கு அர்த்தம்.

அந்தக் கிராமத்தின் தலைவராக அப்பாஸ் அலி உள்ளார். சாலுன்காவின் வளர்ச்சி மற்றும் நலப் பணிகள் அனைத்தையும் முன்னின்று செய்து கொடுத்திருக்கிறார்.

''போர் தீவிரமானபோது, கிராமத்தில் இருந்த அனைவரும், போர் முடியும் வரை பாதுகாப்பான வேறு இடத்துக்குச் செல்ல முடிவு செய்தோம். நாங்கள் வெளியேறி, பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்தினரும் விரும்பினர்,'' என்று அப்பாஸ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Avani roy

படக்குறிப்பு,

அப்பாஸ் அலி

''பெரும்பாலான குடும்பங்கள் சாலுன்காவில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள பிரானோ என்ற கிராமத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனால் எங்கள் குடும்பமும், இன்னொரு குடும்பமும் அருகில் டியாக்சி கிராமத்தில் தஞ்சம் புகுந்தோம்,'' என்றும் அலி குறிப்பிட்டார்.

கிராமத்தில் எப்படி தனித்து விடப்பட்டோம் என்பதைப் பற்றி கூறியபோது அப்பாஸ் அலியின் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. ''சாலுன்காவுக்கு நாங்கள் திரும்பி வந்தபோது, இரண்டு குடும்பங்கள் மட்டுமே இருந்தோம். மீதி 74 குடும்பங்கள் பாகிஸ்தானில் உள்ள பிரானோ கிராமத்தில் இருந்தனர்,'' என்றார் அவர்.

இப்போது இந்த நான்கு கிராமங்களுக்கும் பிரானோ கிராமத்துக்கும் இடையில் புதிய எல்லை உருவாகியுள்ளது. எல்லைக்கு அந்தப் பக்கம் இருப்பவர்கள் திரும்பி வருவதற்கு அனுமதி கிடையாது.

''எதிர்பாராத விதமாக நாங்கள் தனித்து விடப்பட்டோம். எங்கள் கிராமத்தினரைப் பற்றி எப்போது பேச்சு வந்தாலும், என் தந்தை அழுததை நான் பார்த்திருக்கிறேன்,'' என்று அலி கூறினார்.

இப்போதும் கற்களால் கட்டிய வீடுகளின் இடிபாடுகள் கிராமத்தில் உள்ளன. ஒருபோதும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வர முடியாத, உரிமையாளர்களுக்காக அவை காத்திருக்கின்றன.

''அவர்கள் (பாகிஸ்தான் கிராமத்தில் சிக்கியவர்கள்) இங்கு திரும்பி வருவதற்கு பல ஆண்டுகள் காத்திருந்தனர். ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சுமுக உறவு ஏற்படுவதற்கான நம்பிக்கை இல்லை. எனவே அவர்கள் பாகிஸ்தானில் பிரானோ கிராமத்திலேயே தங்கிவிட வேண்டியதாயிற்று,'' என்று அலி கூறினார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கட்டுமான வேலைகளுக்காக இங்கு வந்த தொழிலாளர்கள், பல வீடுகளை பிடித்துக் கொண்டனர். மற்ற கிராமங்களில் இருந்து வந்து குடியேறியவர்களும் சில வீடுகளை எடுத்துக் கொண்டனர். ஆனால்,பல வீடுகள் தங்கள் உரிமையாளரின் வருகைக்காக காத்திருக்கின்றன.

இடிபாடுகளுக்கு இடையில் நடந்து செல்லும் அப்பாஸ் அலி, ''உருக்குலைந்து கிடக்கும் இந்த வீடுகள் எனக்கு அழுகையை வரவழைக்கின்றன. இந்த வீடுகளில் வசித்தவர்கள் பாகிஸ்தானில் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்களோ என்ற நினைப்பு எனக்கு வரும்,'' என்று கூறினார்.

சாலுன்கா கிராமத்துக்கு திரும்பி வர முடியாமல் பாகிஸ்தானில் சிக்கியுள்ளவர்கள்

சாலுன்கா கிராமத்தில் இருந்து வெளியேறி எல்லையில் இருந்து தொலைவில் உள்ள பகுதிக்குச் சென்றுவிடுமாறு பாகிஸ்தான் ராணுவம் கூறியதாக, 1971ல் இளைஞராக இருந்த சோ தெரிவித்தார்.

''நாங்கள் மூன்று நாட்கள் வீடுகளில் தங்கியிருந்தோம். ஆனால் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்தன. இந்தியப் படையினர் எங்கள் வீடுகள் மீது குண்டுகள் வீசினர். அதனால் சுமார் ஆறு மைல்கள் தொலைவில் உள்ள டுர்ட்டுக் கிராமத்துக்குச் சென்றோம்.''

''அது மழைக்காலம் என்பதால் தொடர்து மழை பெய்து கொண்டிருந்தது. பல நாட்கள் நாங்கள் நடந்து சென்றோம். மழை வந்தால், பெரிய பாறைகளின் கீழ் தங்குவோம். நாங்கள் மூன்று கிராமங்களைக் கடந்து பிரானோ கிராமத்தில் தங்கினோம். இப்போது புதிய எல்லை உருவாகிவிட்டதால், எங்கள் கிராமத்துக்கு நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது என்று அங்கு தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,'' என்று சோ கூறினார்.

இப்போது பாகிஸ்தான் எல்லையில் கடைசி கிராமமாக பிரானோ உள்ளது. தீவிர ராணுவ நடமாட்டம் உள்ள பகுதி. ஊடகத்தினர் அங்கு செல்ல அனுமதி கிடையாது.

அங்கு கூடாரங்களில் சுமார் ஏழு ஆண்டுகள் வரை சோ மற்றும் அவருடன் சென்ற கிராமவாசிகள் தங்கியிருந்தனர். புதிய எல்லையை திறந்து, தங்களின் நிலம் மற்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி கிடைக்கும் என்று காத்திருந்தார்கள். நம்பிக்கை இழந்த நிலையில், ஓரளவு நல்ல பகுதிக்குச் செல்ல அவர்கள் முடிவு செய்து, தற்காலிக வீடுகளைக் கட்டினர். எல்லை திறக்கும் என இன்னும் காத்திருக்கிறார்கள்.

''பிந்தைய காலக்கட்டத்தில் எங்களில் பாதி பேர் பாகிஸ்தானில் பல நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றுவிட்டனர். மீதி பேர் வீடுகள் கட்டிக் கொள்ள தொடங்கிவிட்டோம்,'' என்று சோ கூறினார்.

அங்கே மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், எல்லை ஒருபோதும் திறக்கப்படாது என்று உணர்ந்து கொண்டனர். எனவே வேறு நகரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள கில்கிட் - பால்டிஸ்தான் பகுதியில் கடைசி கிராமமாக 1971 டிசம்பர் 16 வரையில் சாலுன்கா கிராமம் இருந்தது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் தன்னாட்சி அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அரசியல்சட்டத்தின் 370வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்தது.

தன்னிச்சையான இந்த முடிவை அடுத்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக, அதிகாரம் குறைந்த பகுதிகளாக அறிவித்தது.

பிரிந்துபோன குடும்பங்கள உள்ள நான்கு கிராமங்களுமே இப்போது புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள லடாக் பகுதியில் வருகின்றன.

டியாக்சியில் சமூக நலப் பணியாளராக இருக்கும் குலாம் உசேன், 1997ல் இருந்து லடாக்கில் பால்ட்டி சமூகத்தவர்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறார்.

பிரிந்து போன குடும்பத்தினர் பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள இவரும் மற்றவர்களும் உதவி வருகின்றனர். அவர்களுடைய ஆடியோ அல்லது காணொளி பதிவுகளை இணையம் மூலமோ அல்லது பதிவு செய்து அனுப்பியோ தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.

"பிரிந்து போவதன் வலி எனக்குத் தெரியும். என் உறவினர்களும் எல்லைக்கு அந்தப் பகுதியில் இருக்கிறார்கள். அதனால்தான் குறைந்தபட்சம் குரல் அல்லது காணொளி பதிவுகள் மூலமாகவேனும் அவர்களுக்குள் தொடர்பை உருவாக்குவதில் நான் அக்கறை காட்டி வருகிறேன்'' என்று உசேன் கூறினார்.

குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கான நம்பிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு மேலும் குறைந்துவிட்டதாக கிராமவாசிகள் அஞ்சுகின்றனர்.

"இதற்கு முன்பு வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே சாலைகளைத் திறந்து, வர்த்தகத்தை அனுமதிக்க வேண்டும் என காஷ்மீரில் உள்ள தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை,'' என்று உசேன் குறிப்பிட்டார்.

"இந்தியா - பாகிஸ்தான் அரசியலில் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். நல்ல சூழ்நிலை ஏற்படும்போதெல்லாம், இரு நாடுகளுக்கும் இடையில் ஏதாவது பிரச்சனை உருவாகும், நாங்கள் மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்,'' என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: