ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கூட்டணி

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி

இன்று (திங்கள்கிழமை) வெளியான ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகளில் வென்று இந்திய தேசிய காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - ராஷ்டிரிய ஜனதா தளம் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.

இதுவரை 80 தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியில் வென்றுள்ளது. இதனால் 47 தொகுதிகளை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.

அதேவேளையில் மாநில ஆளுங்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வென்றுள்ளது.

இன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற 41 இடங்கள் தேவை.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 13 இடங்களிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாஜகவின் ரகுபர் தாஸ் (இடது) தற்போது முதல்வராக உள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் (வலது) காங்கிரஸ் கூட்டணி வென்றால் முதல்வராவர் என கருதப்படுகிறது.

அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் 3 இடங்களில்முன்னிலை வகிக்கிறது.

பாஜகவில் இருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி 2006இல் உருவாக்கிய ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்ரிக்) கட்சி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times via getty images

படக்குறிப்பு,

பிகாரில் இருந்து ஜார்கண்ட் பிரிக்கப்பட்டபின் அதன் முதல் முதலமைச்சராக இருந்தவர் பாபுலால் மராண்டி

காங்கிரஸ் கூட்டணி வென்றால் முதலமைச்சகராக வாய்ப்புள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தும்கா எனும் தொகுதியில் பாஜக வேட்பாளரைவிட 6000க்கும் மேலான வாக்குகள் பின்தங்கியுள்ள அவர் பர்ஹைத் தொகுதியில் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜகவின் ரகுபர் தாஸ் அங்கு தற்போது முதல்வராக உள்ளார்.

மாவோயிஸ்டுகள் பிரச்சனை தீவிரமாக உள்ள இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதால், இங்கு 81 தொகுதிகளே உள்ளபோதிலும் நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவற்றிலும் காங்கிரஸ் கூட்டணியே பெரும்பான்மை பெறும் கூறப்பட்டுள்ளது.

அந்தக் கருத்துக்கணிப்புகளின் துல்லியத்தை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.

பட மூலாதாரம், Hindustan Times via getty images

2014இல் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் ஆகிய கட்சிகளின் கூட்டணி 42 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது.

2019 மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 12 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி இரு இடங்களிலும் வென்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: