டிரம்ப் பேசிய 91 நிமிடங்களில் உக்ரைனுக்கு நிறுத்தப்பட்ட உதவி மற்றும் பிற செய்திகள்

சேலன்ஸ்கி உடனான தொலைபேசி அழைப்பு

பட மூலாதாரம், Reuters

கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் சேலன்ஸ்கியுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடிய 91 நிமிடங்களுக்கு பின்னர், உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியுள்ளது. புதிதாக வெளியான அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் ஒன்றின் மூலம் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.

அந்த தொலைபேசி அழைப்பில், அதிபர் டிரம்ப் உக்ரேனிய தலைவரிடம் தனது அரசியல் போட்டியாளரான ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடன் குறித்து விசாரிக்கச் சொன்னார்.

டிரம்ப் தனது சொந்த ஆதாயத்திற்காக பதவியை பயன்படுத்தினார் என ஜனநாயக கட்சியினர் கூறுகின்றனர்.

நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கையின்போது டிரம்ப் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட்டதற்கு, இந்த தொலைபேசி அழைப்பு முக்கிய காரணமாக உள்ளது.

அமெரிக்காவில் ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர் ஒருவர் இந்த உரையாடல் குறித்து கவலை தெரிவித்ததுதான் முதன் முதலில் அதிபர் டிரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தூண்டியது.

கடந்த புதன்கிழமை அன்று ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபையில் முறையாக குற்றம்சாட்டு நிறைவேற்றப்பட்டாலும், வரும் நாட்களில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பதவிநீக்க நடவடிக்கை விசாரணைக்கு வரும் என்பதால் அதிபர் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை.

பட மூலாதாரம், Getty Images

மின் அஞ்சலில் இருந்தது என்ன ?

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்டர் பார் பப்ளிக் இன்டகிரிட்டி எனும் அமைப்பால்,தகவல் பெறும் உரிமையின் அடிப்படையில் இந்த மின்னஞ்சலில் உள்ள தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் 25ம் தேதி, சேலன்ஸ்கி மற்றும் அதிபர் டிரம்ப் இடையேயான 91 நிமிட கலந்துரையாடலுக்கு பிறகு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியான மைக் துவ்ஃவே, உயர் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தியுள்ளார், என்று இந்த மின்னஞ்சல் மூலம் தெரியவருகிறது.

சேலன்ஸ்கியிடம் அதிபர் டிரம்ப் ''எனக்கு ஓர் உதவி செய்யுங்கள்'' என்று கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலின் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிக வாய்ப்புள்ள ஜோ பிடன் மற்றும் அவரின் மகன் ஹண்டர் பிடன் ஆகியோரின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று உதவி கேட்டுள்ளார் என்பது தொலைபேசி அழைபின் எழுதப்பட்ட நகல் மூலம் தெரியவருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து என்ன பேசினார் பிரதமர் மோதி? 6 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றத்துக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆதரவாளர்களை எழுந்து நிற்க சொன்ன பிரதமர் மோதி, இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை பாதிக்காது என்று கூறினார். "சில எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து அரசியல் செய்வதோடு, அதுகுறித்து வதந்திகளை பரப்பி வருகின்றன. இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி, சி.ஏ.ஏ. இந்தியர்கள் யாரையும் பாதிக்காது.

அதேபோன்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அசாமில் அறிமுகப்படுத்தப்பட்ட என்.ஆர்.சி. குறித்தும் ஏகப்பட்ட வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு வருவதற்கு எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை, அது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவும் இல்லை" என்று அவர் கூறினார்.

"நாங்கள் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்" - சிஏஏ போராட்டத்தில் தாக்கப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை அன்று அகமதாபாத்தில் உள்ள ஷா-இ-அலாம் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஒரு காணொளியும் வைரலானது. அதில் போலீஸார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் கல் எறிந்தனர்.

போராட்டக்காரர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய போது, அப்பகுதி மக்கள் சிலர் போலீஸாரை காப்பாற்றினார்கள்.

வன்முறையில் கை மற்றும் முதுகில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு காவல்துறை அதிகாரியிடமும் பிபிசி பேசியது.

"மாலை 5 மணிக்கு வேகமாக ஒரு கும்பல் சாலையை நோக்கி வந்தது, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அங்கிருந்தோம். மக்களை காவல்துறை வாகனங்களில் ஏற்றினோம். ஆனால் அந்த கூட்டம், அனைத்து முன் ஏற்பாடுகளுடன் வந்திருந்தது. இல்லையென்றால் திடீரென அவ்வளவு கற்கள் எங்கிருந்து வரும்? போலீஸாரை தாக்க வேண்டும் என்று அவர்கள் முன்பே திட்டமிட்டுதான் வந்தார்கள்" என்று அவர் கூறினார்.

திமுக பேரணி: "ஜனநாயக நாட்டில் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்தினால் அதனை வீடியோ பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனர் வாராக்கி மற்றும் எழிலரசு என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் மற்றும் உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை வெடித்ததாகவும், நாளை (திங்கட்கிழமை ) திமுக நடத்தும் பேரணியிலும் வன்முறை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல: பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

பட மூலாதாரம், FACEBOOK

இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மலேசியப் பிரதமர் துன் மகாதீர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

இந்த விஷயத்தில் தனது நெருங்கிய நண்பரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவின் நிலைபாட்டில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் ராமசாமி.

குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதுமில்லை என்றும், இவ்விவகாரம் தொடர்பில் மலேசியப் பிரதமர் தெரிவித்த கருத்து சரியானது அல்ல என்றும் பிபிசி தமிழிடம் பேசிய போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: